
திருநாவுக்கரசர் தேவாரத்தில் பைரவப் பெருமான் குறித்த பாடல்கள்
பாடல்
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – எம்பெருமானின் வடிவங்களை குறித்து உரை செய்து தன் சூலை நோயினை தீர்க்க வேண்டும் என விண்ணப்பம் செய்யும் பாடல்
பதவுரை
திருவதிகைக் கெடிலநதி வடபால் விளங்கும் திருவீரட்டானத்தில் எழுந்தருளி உறையும் அம்மானே! அபிடேகத் தீர்த்தத்தையும் பூவையும், தூபம் இடுவதையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவாது இருப்பேன்; தமிழோடு இசைப்பாடலை மறவாது இருப்பேன்; இன்பம் காலத்திலும் துன்பம் கொள்ளும் காலத்திலும் உன்னை மறவாது இருப்பேன்; உன்னுடைய திருநாமத்தை என் நாவினால் ஓதுவதை மறவாது இருப்பேன்; இறந்த நான்முகன் தலையினை கொய்து அந்த மண்டை யோட்டில் பிஷ்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளே இருந்து வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக.
விளக்கஉரை
- பூவொடுதூபம்,தமிழோடிசை முறையே அருச்சனையும் தோத்திரமும் உடன் நிகழ்பவை
- நலந்தீங்கிலும் – இருவினை பற்றி விளையும் இன்ப துன்பங்கள்
- உலந்தார் – இறந்தவர்
- அலர்தல் – விரிதல், பரவுதல் – மறந்திருந்த குற்றமும் அதற்குக் காரணமும் பழம் பிறவிகளின் தொடர்ச்சி
#அந்தக்கரணம் #அமுதமொழி #சைவம் #திருமுறை #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருவீரட்டானம் #சைவத்_திருத்தலங்கள் #பாடல்_பெற்றத்_தலங்கள்
![]()