சித்த(ர்)த் துளிப்பு – 24-Apr-2021


பாடல்

கூட வருவதொன் றில்லை – புழுக்
     கூடெடுத் திங்கள் உலவுவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை – அதைத்
     தேடும் வழியைத் தெளிவோரு மில்லை

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

மனித வாழ்வு முடிவுக்கு வரும்போது நல்வினைகள், தீவினைகள் தவிர்த்து வேறு எதுவும் வருவதில்லை; புழுக்கூடு என்ற இந்த உடல் எடுத்தப்பின் மனம் என்ற  திங்கள் உலவுவதே துன்பம் தரத் தக்கதாகும்; மோட்சம் என்பது எது என்றும் அதன் எல்லை எனவும் அறிய இயலாது; அதனை அடையும் வழியைக் கண்டு அந்த வழியில் நின்று அது குறித்து தெளிவோரும் இல்லை.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Dec-2020


பாடல்

போற்றுஞ் சடங்கைநண் ணாதே – உன்னைப்
     புகழ்ந்து பலரிற் புகலவொண் ணாதே
சாற்றுமுன் வாழ்வையெண் ணாதே – பிறர்
    தாழும் படிக்குநீ தாழ்வைப்பண் ணாதே

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

தாங்கள் தங்களுக்கு என்று விரும்பிச் செய்யும் சடங்குகளை குறைவாக மதிப்பிட்டு எள்ளி நகையாடாதே; உன்னை பலரும் புகழ்ந்தாலும் அந்த புகழ்ச்சியில் மகிழ்ந்து விடாதே; நிறைவான வாழ்வு வாழும் முன் வாழ்வை வாழ்ந்துவிட்டோம் என எண்ணாதே; மற்றவர்கள் தாழ்ந்த நிலையை அடையும் படி செய்யக்கூடிய செயலைச் செய்து நீ தாழ்ச்சியினை அடையாதே.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 23-Dec-2020


பாடல்

வேத விதிப்படி நில்லு – நல்லோர்

மேவும் வழியினை வேண்டியே செல்லு

சாத நிலைமையே சொல்லு – பொல்லாச்

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

மறை ஆகிய வேதத்தில் உரைக்கப்பட்டவாறு அதன் வழியில் நிற்பாயாக; தர்மம் சார்ந்து அதன் வழியில் இருக்கும் நல்லவர்கள் செல்லும் வழியினை அவர்களிடத்தில் சொல்லக் கேட்டு அதன் வழியில் செல்வாயாக; வாக்கு, மனம்,காயம் ஆகிய்வற்றால் பிறருக்கு துன்பம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறாமல் அதுபற்றி நலம் தரத்தக்க வார்த்தைகளைக் கூறுவாயாக; பொல்லாததும் பேய்த் தன்மை உடையதுமான கோபத்தை வைராக்கியம் கொண்டு அதனை கொல்வாயாக.

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Dec-2020


பாடல்

நல்ல வழிதனை நாடுஎந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடுஅந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

அருளிய சித்தர் : கடுவெளிச் சித்தர்

பதவுரை

உடலில் வாழ்வியல் முறைக்கு தர்மத்தில் விதிக்கப்பட்டவாறு நல்லவழிகளை நாடி இருப்பாயாக; எக்காலத்திலும் பரமனை விருப்பத்துடன் நாடி இருப்பாயாக; நல்ல செயல்களை நிகழ்த்தவல்ல மெய்ஞானம் பெற்ற வல்லவர் கூட்டத்தில் சேர்ந்து இருப்பாயாக; கேட்பனவற்றை எல்லாம் அருள வல்லவனாக வள்ளலை அருளியதன் பொருட்டு நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடுவாயாக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 24 (2019)

பாடல்

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை

கடுவெளிச் சித்தர்

பதவுரை

இந்த உடலானது நல்லதொரு நாடு போன்றதுஞான நிலை அடையவொட்டாமல் தடுப்பதாகியதும், மனதால் மட்டும் வசப்படுத்தப்படுவதும்  ஆன  காமம், குரோதம், மத மாற்சரியம் என்னும் நால்வகை தீமையும், பகைக் குணங்களையும் கொண்டு யாரு அசைக்க முடியாதபடி கோட்டையாக  நாட்டைனைச் சுற்றி அமைத்துள்ளது. இந்த நால்வகைப் பகைகளையும் ஓடாதவாறு செய்து விட்டால் உடல் என்னும் நாட்டினை நம் வசப்படுத்தி ஆளலாம். வஞ்சனையை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய புலன்களைம் ஞானத்தீயினால் எரித்து விட்டால் மெய்வீடானதும், பிறவாமை ஆகியதும் ஆன முக்தி / வீடு பேறு கிடைக்கும்.

விளக்க உரை

  • மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் கோட்டையாக இருக்கின்றன என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. புத்தியும், சித்தமும் நல்லவற்றை சிந்திக்கும் திறனுனையது ஆனதாலும், அகங்காரம் நல் விஷயங்களை அகங்காரம் உறுதிப்படுத்துவதாலும், பகை என்று அடுத்து வரும் வரிகளால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்தர்க்கரணங்கள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 5 (2018)

பாடல்

வைதோரைக் கூடவை யாதே: – இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே

கடுவெளிச் சித்தர்

பதவுரை

உனக்கு தீங்கு செய்வதன் பொருட்டு இகழ்ந்து பேசியவருக்கும் கூட தீங்கு எண்ணாதே; இந்த வையகம் முழூவதும் வஞ்சனைகளால் சுழ்ந்து கெடுதலால் நிரம்பினாலும் அகத்துள் ஒரு பொய்யையும் நுழையவிடாதே; (இம்மைக்கும் மறுமைக்கும் ) உயர்வு தராத வினைகளை செய்யாதே; பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.

விளக்க உரை

  • கடுவெளிச் சித்தர்  பாடல்கள் ஆனந்தக்களிப்பு வகையைச் சார்ந்தவை. இதனை

பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே

எனும் பல்லவியையும் சேர்த்துத் தெளிக.

  • வைதல் – ஏசல், இகழ்தல், பழிமொழி, பழிச்சொல், ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை

 

சமூக ஊடகங்கள்