அமுதமொழி – விளம்பி – தை – 19 (2019)

பாடல்

உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான
     ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம்
     பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக
     மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில்
     தனித்தவா இனித்தவாழ் வருளே

திருஅருட்பா  – ஆறாம் திருமுறை –  வள்ளலார்

பதவுரை

வலிமை பொருந்திய வானுலகில் மேன்மை குன்றாதவாறு இருந்து ஞான ஒளியினால் உயர்ந்தும், பெருவதும் ஆன ஒப்பற்ற சித்திபுரத்தை உடையவனே; சிறந்தவர்களாலும், ஞானிகளாலும் ஆன பெரியோர்களால் சூழப்பட்டு இருப்பவனே; செய்த குற்றங்களைப் பொறுத்து அடியேனுக்கு, வரம் அளித்தவனே; உண்மை தன்மையால் மேன்மை பொருந்தியவனே; சிவாகமங்கள் கொண்டும் வேதங்கள் கொண்டும் காண முடியாத தன்மையை யுடையவனே; மெய் அறிவுக்கு ஆதரவு தருகின்றவனே; அம்பலத்தில் தனித்து நின்றாடுபவனே! எனக்கு இனிமை பொருந்திய மெய் வாழ்வினை அருள்வாயாக.

விளக்க உரை

  • உலகியல் வாழ்வு துன்பமும், தீமையும், சிறுமையும் பிறவும் நிறைந்திருத்திருப்பதால்  இவ்வாழ்வு வேண்டாம் என விண்ணப்பித்தார்
  • உரம் – வன்மை. உரத்தவா ஞானமாவது – மெய்ம்மையால் திண்மை குன்றாத திருவருள் ஞானம்
  • சித்திபுரம் – வடலூர்
  • பெரியோர் புரம் – ஞானவான்கள் உறையும் இடம்
  • தரம் – தன்மை
  • அறிவு ஆதரத்தவன் – மெய் உணர்வை விரும்புபவன்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *