அமுதமொழி – விகாரி – ஆவணி – 5 (2019)


பாடல்

மூலம்

ஈனம் தரும்இதென்றெண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்
கூனம் தரும்இந்தச் செல்வருக் கிச்சையுரை உரைத்தேன்
வானம்தரும்உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும்அண்ண லேகாழி யாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

ஈனம் தரும் இதென்று எண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்கு
ஊனம் தரும் இந்தச் செல்வருக்கிச்சையுரை உரைத்தேன்
வானம் தரும் உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும் அண்ணலே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஅசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்த நீ, குற்றம் கொண்ட என்னையும் காக்க வேண்டும் என்பதை குறிக்கும் பாடல்.

பதவுரை

வானில் இருந்து வேண்டியவற்றை வழங்கும் தேவர்களை காப்பதன்  பொருட்டு அசுரர்களை துன்பம் அடையச் செய்து அவர்களை துன்புறுத்தி தேவர்களுக்கு நல்ல சக்தியினையும், உறைவிடத்தையும் வழங்கும் இறைவனானவனும் காழிப் பதியில் உறைபவனும் ஆன  ஆபதுத்தாரணனே! இந்த உலக வாழ்வானது குறைவு பட்டது என்பதை அறியாமல் செருக்குள்ளவனாக திரிந்து, தர்மத்தின் வழி நில்லாமல் செல்வம் உடையவருக்கு அவர்கள் விரும்பிய உரைகளை உரைத்தேன்.

விளக்க உரை

  • என்னைக் காப்பாயாக என்பது மறைபொருள்.
  • ஈனம் – குறைபாடு, அங்கவீனம்; ஊனம், இழிவு, குறைபாடு என்பதைச் சுட்டும் பின்னொட்டு, சரிவு
  • இடும்பன் – செருக்குள்ளவன்
  • உம்பர் – விண்ணவர், தேவர்கள், சொர்க்கம், மேற்கூறப்படவை, மேலுள்ளவை
  • அவுணர் – அசுரர்
  • மாட்டுதல் – இணைத்தல், தொடுத்தல், செருகுதல், செலுத்துதல், உட்கொள்ளுதல்,
  • கற்றுவல்லனாதல், அடித்தல், விளக்கு முதலியன கொளுத்துதல், எரித்தல், கூடிய தாதல், வலிபெறுதல்
  • தானம் – இசைச்சுரம், சுரவிஸ்தார முறை, இடம், உறைவிடம், பதவி, கோயில், சுவர்க்கம், ஆசனம், எழுத்துப்பிறக்கும் இடம், எண்ணின் தானம், சாதகசக்கரத்திலுள்ள வீடு, ஆற்றலில் சமமாயிருக்கை, சக்தி, நன்கொடை, தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை, நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை, ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல், இல்லறம், யானைமதம், வேள்வி, மகரவாழை, ஸ்நானம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 23 (2019)


பாடல்

வங்கம் கலிங்கம் குலுங்கம் தெலுங்கம் மராடம்முதல்
எங்கெங்கும் போக இடர்வரும் போதும் இனிமையுடன்
அங்கங்கு நீ துணை யாய்வரு வாய்அந்தி வான்மதியம்
தங்கும் சடாடவி யாய்காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதூர தேசம் செல்கையில் ஏற்படும் துயர் ஏற்படாமல் காக்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அந்தி வானத்தைபோல் இருப்பதான ஒளிரும் பிறை சந்திரனை  தன்னுடைய சடைமுடியில் தாங்குபவனும் காழிப்பதியில் உறைபவனும் ஆன ஆபதுத் தாரணனே! வங்காளதேசம், கலிங்கம் (தற்கால ஒரிஸ்சா, குலுங்கம் (தற்கால  கோவாக இருக்கலாம்) ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகள்), தெலுங்கம்  (தற்கால  ஆந்திரா ), மராடம் (தற்கால  மகாராஷ்ட்ரா) ஆகிய தேசங்களில் எந்த திசை சென்ற போதும் அங்கு ஏற்படுவதாகிய இடர் எனும் துயர் நீங்க மிக்க மகிழ்வுடன் அனைத்து இடத்திலும் எனக்கு துணையாக நீ வருவாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 24 (2019)


பாடல்

நீடும் தண்டாயுதம் நித்தம் தண்டாயுதம் நித்தம் அன்பர்
தேடும் தண்டாயுதம் ஈரேழுலகமும் சேவித்துக் கொண்
டாடும் தண்டாயுதம் அண்டாது பேய்கள் அலறிவிழச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்து – தண்டாயுதத்தின் சில பெருமைகளை உரைத்து, அதைக் கொண்டிருக்கும் பைரவரை வணங்கி நிற்கும் பாடல்.

பதவுரை

காழியாபதுத்தாரணனே, நீண்டதான தண்டாயுதம், தினமும் தண்டாயுதம், நித்தமும் தன் வினைகளை அறுக்க அன்பர்கள் தேடும் தண்டாயுதம் , ஈரேழு பதினான்கு லோகமும் வணங்கி கொண்டாடிடும் தண்டாயுதம், தீமை தரத்தக்க பேய்களை அலறி விழச் செய்யும் படியான தண்டாயுதம் எனும் பெருமைகளை உடைய தண்டாயுத்தை ஏந்தியவனாக இருக்கிறாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 10 (2019)


பாடல்

தெவ்விடத் தாய திசை பிழைத்தாலும் சின அரவம்
கவ்விடத்தான் வெய்யகான் நடந்தாலும் கருதரிய
எவ்விடத்தேனும் இருந்தாலும் என்றன் இடரையெல்லாம்
தவ்விட நீ வருவாய் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்து – இடர்களை எல்லாம் தீர்க்க நீ வர வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே!  செய்யத் தகாத காரியங்களைச் செய்து தென் திசை சென்று (மரணித்து) பின் பிழைத்து வந்தாலும், அரவம் போல் சினம் கொண்டு  அதனால் துன்பம் கொண்டு நடந்தாலும், எண்ணுவதற்கு அரியதான எந்த இடமாக இருப்பினும் மற்றும் இது போன்ற இடர்கள் எல்லாம் தீர்க்க நீ வருவாய்.

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 12 (2019)


பாடல்

மூலம் – 19

பாடிக்கொண் டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண் டாடித் திரிந்திட வேஎனைத் தொண்டு கொள்வாய்
தேடிக்கொண் டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கை யெல்லாம்
சாடிக்கொண் டாடிய வாகாழி யாபதுத் தாரணனே.

பதப்பிரிப்பு – 19

பாடிக்கொண்டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண்டாடித் திரிந்திட வேயெனைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கையெல்லாம்
சாடிக் கொண்டாடியவாகாழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஉன்னை பணியும் அடியார்களின் பாதங்களை தன் தலைமேல் சூட்டவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

உன்னை தேடியும் கொண்டாடியும் கொண்டாடி வருவோர்களுடைய  தீர்க்க இயலாதது ஆகிய வலிமையான ஊழ்வினைகளை தடைகளை எல்லாம் அடித்தும் ஒடித்தும் செய்து அதைக் கொண்டாடிய காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! உன்னை எப்பொழுதும் நினைவில் கொண்டு பாடுவதைத் கொண்டாடி பணிந்திடும் அன்பர்களின் மலர் போன்ற பாதங்களை என் தலைமேல் சூடிக் கொண்டாடி திரியும் மாறு எனக்கு தொண்டு செய்ய அருள்வாய்.

விளக்க உரை

  • வல்வினை – வலியதாகிய ஊழ், தீவினை, கொடுஞ்செயல், வலிதாகிய தொழில், வலிய வினைச்சொல்
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 13 (2019)


பாடல்

மூலம் – 18

இலையென் றொருவர்க் கிதம்சொல்லி யென்றும்இரங்கிநில்லா
நிலையென்று நீஅளித் தாண்டருள் வாய்நித்த னேபுகலி
மலையொன் றியவடு கேச கங்காள வயிரவனே
தலையொன் றியகைய னேகாழி யாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு – 18

இலையென்று ஒருவர்க்கிதம் சொல்லியென்றும் இரங்கிநில்லா
நிலையென்று நீ அளித்தாண்டருள்வாய் நித்தனே புகலி
மலையொன்றிய வடு கேச கங்காளவயிரவனே
தலையொன்றியகையனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

*கருத்துயாசிக்கும் நிலை ஏற்படாமலும், யாசிப்பவர்க்கு இல்லை எனும் நிலை ஏற்படாமலும் காக்க வேண்டி வயிரவரைத் துதிக்கும் பாடல்*

பதவுரை

இறைவனாகவும்,  சிவனாகவும் இருப்பவனே, புகலி எனும் சீகாழி எனும் திருத்தலத்தில் இருக்கும் மலையில் ஒன்றி இருப்பவனே, எலும்புக் கூட்டினை கேசத்தில் அணிந்த வயிரவப் பெருமானே, ஈசனின் மனதில் இருந்து வெளிப்பட்டு கர்வம் கொண்ட பிரம்மனின் தலையைக் கொய்து அதனை கைகளில் கொண்டவனே, காழிப்பதி எனும் சீகாழியில் உறையும் ஆபதுத்தாரணனே! யாசித்து ஒருவர் வரும்போது அவரிடத்தில் இல்லை என்பதை இதமாய் சொல்லாமலும் எவரிடத்தும் எக்காலத்தும் பொருள் பற்றியும் மற்றைய எதன் பொருட்டும் இரங்கி நிற்கா நிலையை நீ எனக்கு அளித்து எனை ஆண்டு அருள்வாய்.

விளக்க உரை

  • நித்தன் – அருகன், கடவுள், சிவன்
  • கங்காளம் – ஒரு பெரிய பாத்திர வகை, தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 29 (2019)


பாடல்

வெடிக்கும் பரவை முரசதிர் காமனை வீறழியப்
பொடிக்கு கனல் விழிப்புண்ணியனே புவியோர்கள் நெஞ்சம்
துடிக்கும் பொல்லாத பிசாசுகள் தம்மைத் துரத்திவெட்டி
அடிக்கும் தண்டாயுதனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

*கருத்துகாமனை அழித்தவனே, தன்னை பிசாசுகளிடத்தில் இருந்தும் காக்க வேண்டும் என்பது பற்றிய பாடல்.*

பதவுரை

கைகளில் தண்டாயுதம் கொண்டு, புவியினில் வாழ்பவர்கள் நெஞ்சம் துடிக்குமாறு செய்வதும், எப்பொழுதும் தீமை தரத் தக்கதும் ஆன  பொல்லாத பிசாசுகளை துரத்தியும் வெட்டியும் அடித்தும் செய்யக்கூடியவனாய் ஆன காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மிகப் பெரிய கடல்பரப்பு போன்றதும், முரசு அதிர்வடைவது போன்றதும் ஆன காமத்தினை உருவாக்கும் காமனை அவந்து தனிப்பட்டசிறப்பு, அழகு, பொலிவு, பெருமை அனைத்தும் பொடியாகுமாறு கனல் விழி கொண்டு அழித்த புண்ணியனே! எம்மைக் காக்க வேண்டும்.

விளக்க உரை

  • பரவை – பரப்பு; கடல்; உப்பு; ஆடல்; பரவல்; மதில்; பரவிநிற்கும்நீர்; திடல்; சுந்தரர்மனைவி
  • வீறு – தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 14 (2019)

பாடல்

மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும்
வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள்
பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதிருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.

பதவுரை

இறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான  பிசாசங்கள் ஆகியவைகளை  தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே! செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக  தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • முதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
  • தாமம் – பூமாலை; கயிறு; வடம்; பரமபதம்; நகரம்; ஊர்; மலை; இடம்; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ளமாதர்இடையணி; முடியுறுப்புஐந்தனுள்ஒன்று
  • தண்டா – தொந்தரை, சண்டை, சிக்கல், கதவையடைத்து இடும் இரும்புத் தடி, தண்டால்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 30 (2019)

பாடல்

செம்மலை மீதினில் சாமள கஞ்சுகம் சேர்வடிவம்
அம்மலை போலும் நற்றண்டாயுதமும் கொண்டன்புடனே
எம்மலை வேதம் தவிர்த்தருள்வாய் கடுவேந்தி விண்ணோர்
தம்மலை வோட்டும் தமிழ்க்காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஆபதுத்தாரணனின் வடிவமும் அவன் அருள வேண்டிய முறையும் குறித்து போற்றி புகழ்ந்த பாடல்.

பதவுரை

செம்மலை போன்ற மேனியில் கருமையும், பசுமையும் கலந்த நிறமொத்த சட்டைய ஆடையாக அணிந்தவனே, மலை போன்ற மேனியில் கூரியதும், நல்லவை அருளும் தண்டாயுதம் எனும் ஆயுதத்தையும் கைகளில் ஏந்தி, விண்ணில் இருப்பவர் ஆன பிரம்மனை பயமும் திகைப்பும் கொள்ளுமாறு அவனை அழித்து அவன் தலையை திருவோடாக ஏந்தி, தமிழ் மொழி கொண்டு விளங்கும் காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மலை போன்றதும், எழுதா மறை ஆகிய வேதத்தினை போன்றதுமான வார்த்தைகள் பிறர் எனக்கு உபதேசம் செய்யாமல் தவிர்த்து அருள்வாய்.

விளக்க உரை

  • சாமளம் – கருமை, பசுமை
  • கஞ்சுகம் –  அதிமதுரம் கஞ்சுகம் வாய்த்த கவளந்தன்கைக்கொண்ட குஞ்சரம், சிலந்திக்கோரை, சட்டை கஞ்சுகமுதல்வர், பாம்புச்சட்டை, முருக்கு
  • கடு – கடுக்காய்மரம், கசப்பு, நஞ்சு, முள், கார்ப்பு, துவர்ப்பு, முதலை, பாம்பு
  • மலை – அணி, அணிந்து கொள், திகைப்பு-பயம்

 

விளக்க உரைக்கு உதவி செய்த திரு. அனந்த சுப்ரமணியம் அவர்களுக்கு நன்றி.

 


இறை அன்பரின் குறிப்பு

இதில் கஞ்சுகம்வாயத்த என்பது கஞ்சி இஞ்சி – அதாவது கருணை பொங்கும் மனம் கொண்டவன். ஆனால்இஞ்சியைபோல் காரம் கொண்டவன் இறைஞ்சினால் கருணை வடிவானவன்  என பொருள்படும்.

குஞ்சரம் என்பது யானை – அதாவது இவ்வளவு பெரிய கருணை மனம் கொண்டவன் எனப் பொருள்படும்.

சிலந்திக்கோரை என்பது சிலந்தி பூச்சியானது தன்வலை பின்னி மற்ற பூச்சிகளை அதில் சிக்கவைக்து உணவாக்கும்; இப்படி மனிதன் உன்னைக் கட்டநினைந்தாலும் அதில் சிக்காது அவனையே சிக்க வைப்பாய் என பொருளாகும்

சட்டைக்கஞ்சுகமுதல்வர் எண்பது ஜீவன்கள் தன் உடலாகிய சட்டையை கழற்றவைத்து தன்னுடன் சேர்த்து கொள்பவர் என அர்த்தமாகும்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 14 (2019)

பாடல்

பேருகாரணியத்தில் யான் சென்ற போதும் பெரும் பொருளால்
வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் இம்மண்டலத்தில்
துருவாதியர்கள் சபையில் செல்போதும் துணையெனக்கு
வருவாயுனைநம்பினேன் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஎந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய்  என்று நம்பினேன் என்று உறுதி பற்றி கூறியப் பாடல்.

பதவுரை

தோற்றத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கின்ற பெரியதான காடுகளில் யான் சென்ற போதும், பொருள் வருதல் கண்டு, அதன் பொருட்டு மகிழ்வு கொண்டும், யாகத்தை விரும்புதல், ரிஷிகள், தேவர்கள், தேவதை, துருவாதி கிரகங்கள், பிதுர்க்கள், ஆகிய இவ்விதமாக பிறத்தலை சத்துவ குணத்தில் மத்யமகதியில் பிறந்தாலும்  நீ எனக்கு துணையாக வருவாக என உனை நம்பினேன்.

விளக்க உரை

  • உலகவாழ்வினை அடர்கானகத்திற்கு உவமையாக கூறுதல் இயல்பு. முதல் உவமை இகலோக வாழ்வில் துயறுற்று நின்ற போதும் என்பது பற்றியது. இரண்டாவது உவமையில் சற்று மேன்மை உற்று சத்துவ குணத்தில் நின்ற போதும் என்பதை பற்றியது. எந்த நிலையில் நின்ற போதும் நீ எனை காப்பாய்  என்று நம்பினேன்
  • பொருளால் வருகாதல் கொண்டிரவில் துயில் போதும் – பொருள் மீது பற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து இறத்தல் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 29 (2019)

பாடல்

மூலம்

அரம்பிடிக் கும்கண்ணினாராசை மேற்கொண் டலைவதெல்லாம்
வரம்படிக் கும்கருத் துண்மைகண் டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக் கும்துட்ட வேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம்பிடிக் கும்வடுகா காழியாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

அரம்பிடிக்கும் கண்ணினாராசை மேண்கொண்டலைவதெல்லாம்
வரம்படிக்கும் கருத்துண்மை கண்டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக்கும் துட்டவேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம் பிடிக்கும் வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வலிமைமையும், திண்மையும், திடமும், ஊக்கமும் உடையதும் தீமை தர தக்கதும் ஆன பேய், பிசாசு வகையில் சேர்ந்த வேதாளம் இவற்றோடு இறந்தவர்களின் பேய் உருவம் கொண்டதுமான பூதத்தை வெட்டியும், ஓட்டியும் அவற்றின் வினைகளை நிலைகளை கண்டறிந்து அவைகளுக்கு விடுதலையத் தரும் வடுகனே, சீகாழிபதியி வாழும் ஆபதுத்தாரணனே! இரையை பாம்பு பிடிப்பது போல், விழுங்கி விடுவதான கன்னியர் மேல் ஆசை ஆகிய பெண்ணாசை  கொண்டு அலைவது எல்லை இல்லாமல் இழுத்து சென்றுவிடும் என்னும் கருத்து உண்மையை கண்டவர்கள் எவரும் இல்லை.

விளக்க உரை

  • வேதாளம், பூதம் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு அவற்றிக்கு பிறவியைத் தரும் ப்ரமாவின் நிலையை தரம் பிடிக்கும் வடுகனே எனவும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உரம் – வலிமை, திண்மை, திடம், ஊக்கம், நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 13 (2019)

பாடல்

படிக் குந்தண் டாயுத மென்பார்க்கு நோய்வினை பற்றறுப்பப்
பிடிக்கும்தண் டாயுத மெண்ணருங் கோடிப்ர மாண்டமெல்லாம்
முடிக்கும்தண் டாயுத மூதண்டந் தாண்டு முகுந்தன்சென்னி
தடிக்கும்தண்டாயுதனே காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

திருமாலின் உந்திக்கமலத்தில் இருந்து தோன்றிய பிரம்மனின் தலையை கொய்து  தண்டித்த கைகளில் தண்டாயுத்தை உடைய ஆபதுத்தாரணனே! கைகளில் பிடித்திருக்கும் தண்டாயுதமானது எண்ண இயலாத கோடி கணக்காண செயல்களை முடிக்கும் தன்மை உடையது; உடம்பினையும்  காக்கும் தண்டாயுதம்  என்று கூறுபவர்களுக்கு நோயினையும், இருவினையாகிய நல்வினை மற்றும் தீவினை ஆகியவைகளையும் நீக்கி வினையற்று போக்கும்.

விளக்க உரை

  • படி – அளக்கப் பயன்படும் ஒரு அளவை, மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி, நூலைப்படிப்பது, படியெடுத்தல், நிலை, தன்மை, அங்கவடி, தராசின் படிக்கல், நூறு பலங் கொண்ட நிறையளவு, நாட்கட்டளை, நாழி, அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள், உபாயம், உதவி, நிலைமை, விதம், வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை, உடம்பு
  • மூதண்டம் – பிரமாண்டம், உந்திக்கமலம் விரிந்தால் விரியும், பிரமாண்டத்தின் முகடு, அறுகு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 29 (2019)

பாடல்

செந்தமிழோர் தொழும் தண்டாயுதமும் திருவழகும்
சுந்தரமும் பச்சைக் கஞ்சுகம் தானும் கருதரிய
இந்தணி வட்டச் சடையும் கண்குன்றும் இருபதங்களும்
சந்ததமும் மறவேன் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வளமை வாய்ந்த தமிழ் மொழியை கொண்டவர்களான தமிழர்கள் தொழும்படியாக தண்டாயுதத்தைக் கொண்டவனே! பொலியும் முகம் கொண்டவனே! அழகிய வடிவம் கொண்டவனே! பச்சை நிறமுடைய ஆடை அணிந்தவனே! சந்திரனை அணிந்த வட்ட வடிவமான சடையை கொண்டவவனே! குன்று போல் கண்களை உடையவவனே* உனது இரு பாதங்களையும் எப்பொழும் மறவேன்.

விளக்க உரை

  • * அழகியலுக்காக உரைக்கப்பட்டது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 14 (2018)

பாடல்

நீலக்கயல்விழி மானார் கலவியின் நேசம் வைத்தே
ஆலைக்கரும்பது போலாய் விடாதுன்னருள்புரிவாய்
வாலைக் கலைமதி வேணியனே வடுகா அடியார்
சாலத் தொழும் ஐயனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

சுத்தமான அழகிய கலைகளை உடைய சந்திரனை தலையில் அணிந்தவனே! வடுகனே! அடியார்களால் மிகவும் தொழப்படுபவனே! காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! நீலமான மீன் போன்ற விழிகளை உடைய பெண்டிர் மேல் நேசம் வைத்து ஆலையில் அகப்பட்ட கரும்பு போல் ஆகிவிடாமல் நன்னருள் புரிவாய்.

விளக்க உரை

  • மாயை அகற்றவேண்டி துதித்தல்.
  • மானார் – பெண்டிர்
  • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்; சத்திபேதங்களுளொன்று; திராவகம் வடிக்கும் பாண்டம்; சுத்தம்; பாதரசம்; சித்திராநதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 14 (2018)

பாடல்

பொய்யா கிய புவி வாழ்க்கைக் கடலிற் புகுந்தழுந்தி
மெய்யம் இது என நம்பி விட்டேன் வினையேனைக் கண்பார்
மையொடு கண்ணியர் பின் செலத்தாரு வனத்திற் சென்ற
சைவாகமப் பொருளே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

மையினை அணிந்த அழகிய  கண்களை உடைய கன்னியர்களான தாருகா வன முனிவர்களின் பெண்டிர் தன் பின்னால் வருமாறு செய்த சைவ ஆகமப் பொருளே, காழித் தலத்தில் உறையும் ஆபதுத்தாரணனே! வினை உடையவன் ஆகிய யான், மாயைத் தன்மை உடைய பொய் ஆகிய இந்த உலக வாழ்க்கையை கடலில் புகுந்து அழுந்துமாறு செய்து, இதுவே மெய்யானது என்று நம்பி விட்டேன்.

விளக்க உரை

  • வைரவர் கோலமும், பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் கோலமும் ஏறக்குறைய ஒன்று போலவே தோற்றமளிக்கும்; வைரவர் ஆங்காரமாகவும், பாதங்களில் பாதுகை இல்லாமலும் கொண்ட தோற்றத்துடன் காணப்படுவார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 29 (2018)

பாடல்

முட்டற வாழும் பெருஞ்செல்வ மும்முத் தமிழ்க்கல்வியும்
எட்டுணை யேனுங் கொடுத்துண்டிருக்க எனக்கருள்வாய்
வட்டமதிச் சடையானே சிகரமலைக் கமர்ந்த
சட்டம் உடையவ னேகாழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பூரணத்துவத்தின் அடையாளம் ஆகிய முழு நிலைவை தலையில் சூடியவனே, காழி மலை மேல் அமர்ந்த  மாணிக்க வகை போன்றவனும், நேர்மை ஆனவனும் ஆன ஆபதுத்தாரணனே, நீங்காமல் இருக்கும் பெரும் செல்வமும், முத்தமிழ் கல்வியும் எள்ளவாவது எப்பொழுதும் கொடுத்துக் கொண்டிருக்க எனக்கு அருள்வாய்.

விளக்க உரை

  • எட்டுணை – எள்ளளவு
  • சட்டம் – மரச்சட்டம், கம்பியிழுக்கும் கருவி, எழுதும் ஓலை, எழுதுதற்கு மாதிரிகையாயமைந்த மேல்வரிச்சட்டம், நியாய ஏற்பாடு, செப்பம், நேர்மை, ஆயத்தம், புனுகுப்பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் திரவப்பொருள், மாணிக்கவகை

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 14 (2018)

 

பாடல்

அடியார் மனத்தில் நினைத்த கருமம் அனைத்துமங்கே
முடியாத தேது முடித்தருள் வாய் முருகாரலங்கல்
கடியார் மலர்க் கொன்றை மாலிகை சூடிய கண்ணுதலே
தடியேந்திய கையனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

அழகிய தளிர் நிறைந்து சூட்டப்பட்ட கொன்றை மலர் மாலையை அடையார்களால் சூட்டப்பட்டு அதை அணிந்தவனே, காப்பதன் பொருட்டு தடியினை கைகளில் ஏந்தியவனே, சீகாழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே, ‘உன்னிடத்தில் பற்றுக் கொண்ட அடியவர்கள் மனதில் தோன்றிய சிந்தனைகள் உன்னைப் பற்றியப் பின் முடியாது ஏது?’ என்று அவற்றை முடித்து அருள்வாய்.

விளக்க உரை

  • அலங்கல்  –  மாலை, பூமாலை, அசையும் கதிர், தளிர், ஒழுங்கு, ஒலி, துளசி, முத்துச்சிப்பி

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 16 (2018)

பாடல்

நெறியும் பொறியுந் தவமும் மெய்ஞ்ஞானமும் நீடறிவும்
பொறியும் புகழும் கொடுத்தருள் வாய்புரம் காய்ந்தவனே
குறியும் குணமும் கடந்தவனே குழக்கன்று கட்டுந்
தறியின்கண் வந்தவனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

குழக்கன்று எனும் மிக இளையகன்று போன்று கட்டுத்தறி விட்டு அன்பர்களுக்கு அருள் செய்ய வந்தவனே, காழிப் பதி உறையும் ஆபதுத்தாரணனே, மௌனம் கொண்டவனே, தனக்கென அடையாளம் ஆகிய பேதம் விலக்கியவனே *, சைவ ஆகமத்தில் கூறப்படும் எண் குணங்களாகிய தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவற்றை கடந்தும் நிற்பவனே, உனது அன்பைப் பற்றி வாழும் நெறி, அந்த நெறியில் இருந்து விலகாத பொறிகள், பொறிகளால் பெறப்படும் தவம், தவத்தில் இருந்து கிடைக்கப் பெறும் ஞானம், அதன் பயனான மெய் அறிவு, அதைக் ஈயும் உடல், அதனால் பெறப்படும் புகழ் ஆகியவற்றை கொடுத்தருள்.

விளக்க உரை

  • வாய்புரம் காய்ந்தவனே – மௌனம் கொள்ளுதல்
  • * அவரவர் வழிபாடு செய்யும் விதமாக அந்த ரூபத்தில் அருள்பவன்

 

ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 31 (2018)

பாடல்

மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச்
சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த
பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும்
தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 21 (2018)

பாடல்

வட்டையொப்பாகும் இனியசொல்மாதர் மயக்கத்திலே
பட்டையப் பாமிகயானிளைத்தேன் பண்டிருவர்க்கெட்ட
நெட்டையப்பாமறை காணத சேவடி நீயருள்வாய்
சட்டையப்பா வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

பட்டை என்னும் ஆபரத்தின் ஒரு உறுப்பினை அணிந்தவனே, சட்டையப்பனே, வடுகனே, காழிப்பதியில் உறையும் ஆபதுதாரணனே, பெரும் காட்டினைப் போன்றதும், திசைகள் அற்றதாகவும் செய்யும் இனிய சொல்லைச் கூறும் மாதர்கள் மேல் மயக்கம் கொண்டு யான் இளைத்து விட்டேன். காலங்களால் அளவிடமுடியாததான முற்காலத்தில் திருமாலாலும், பிரம்மனாலும் காண இயலாதவாறு நெடிய அளவில் வளர்ந்தும், வேதம் எனப்படும் மறைகளாலும் காண இயலா திருவடியை நீ அருள்வாய்.

விளக்க உரை

  • பட்டை – மரத்தோல்; வாழைப் பட்டை; பொற்சரிகைப்பட்டி; கழுத்துப் பட்டை; பனம் பட்டை; போதிகை; மணியைத் துலக்கும்பட்டை; அணிகலனின் ஓர் உறுப்பு (யாழ்); நீர் இறைக்கும் கூடை; மரவுரி; தகடு; பனங்கை ( ‘நிர்வாணம் சுனவாகனம்’ என பைரவர் த்யான ஸ்லோகத்தில் இருப்பதாலும் மர உரி தரித்தவர் எனும் கருத்து விலக்கப்படுகிறது)
  • பண்டு – பழமை; முற்காலம்; முன்; தகாச்சொல்; நிதி ( குறிப்பு : பண்டிருவர் காணாப் படியார் போலும் – பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் (6.89.3))

Loading

சமூக ஊடகங்கள்