பாடல்
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே …… வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா …… னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் …… விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா …… ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே …… வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் …… வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் …… மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் …… முருகோனே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
சரம் போன்று புறப்பட்ட ஆறு திருப் பொறிகளில் இருந்து பிறந்தவனே, திரிபுரத்தில் இருந்த தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய வரம்பெற்ற மூன்று அசுரர்களும், அம்புகளை சரம் போல் கொண்டவர்களாக சண்டை செய்ய எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்து பிறகு போர்க்கோலம் தரித்து பின் தனது புன்னகையால் திரிபுரத்தை தனது நெற்றிக்கண் பார்வையாலேயே எரித்தவரும், பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்து, அதனை ஆடையாக அணிந்து கொண்டவரும், தேவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும் கருத்தோடு, தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்து வந்த மன்மதனை சாம்பல் ஆகும்படி செய்த சிவனாரின் கண்மணி போன்றவனே, கதிர்காமம் என்ற தலத்தில் விளங்கும் முருகனே! மிக வலிமையோடு போரில் குதித்து சாமர்த்தியமாய் எதிர்த்துவந்த சூரனை அவன் நல்வினைப் பற்றி ஒழுங்காக நடந்துகொண்ட வரையில் அவனை எதுவும் செய்யாமல் விட்டுவைத்தும், அவன் நல்வினைகள் நீங்கி, தீய்வினைகள் பற்றி துன்பம் செய்த போது அவனை நெருக்கி, உடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்து, தலையையும் மார்பையும் அறுத்துக் கொன்று வெற்றியை கொண்டாய்; அப்படிப்பட்ட நீ, உனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்து அருளுக.
விளக்க உரை
- சரத்தே யுதித்தாய் … நாணல் காட்டிலே பிறந்தவனே என்ற பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
- செகுத்தாய் … கொன்றெறிந்தாய்
- வலக்காரம் – பலவந்தம், அதிகாரம், வெற்றி