அமுதமொழி – விளம்பி – மாசி – 3 (2019)

பாடல்

எந்தன் நினைப்பும் இனிக்கடந்தே
      ஏக வெளியின் நிலைதொடர்ந்தே
   இரவும் பகலும் அற்றஇடம்
      இனிதா கியபே ரொளிவிளக்கே

சந்திக் கரையின் முடிவேற்றித்
      தனையுந் தலைவன் அடிசேர்த்துச்
   சாட்சாத் கார பூரணமாய்ச்
      சர்வா னந்த மாயிருக்க

உந்தன் இருதாள் மலர்க்கருணை
      ஒளிசேர் கனக்க கிரிமுடிமேல்
   உதித்தாய் எனது வினையறவும்
      உமையே இமையோர்க் கரசான

மந்திரக் கலைச்சி நவகோணம்
      வாழும் யோக நாயகியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்து – நிலைபெற்ற பேரின்பத்தில் என்றும் நிலைக்க வேண்டி விண்ணப்பம்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே,  சுடர் ஒளி போன்ற தங்க மலையின் மேல் உதித்தவள் ஆகிய உமையே, இமையாதவர் ஆகிய தேவர்களின் முதன்மையானது எனப் போற்றப்படுவதும், மந்திரத் தன்மை உடையதும், நவ கோணம் கொண்டதுமான இடத்தில் வாழும் யோக நாயகியானவளே, இரவு, பகல் ஆகிய கால மாறுதல் இல்லாமல், நினைவு எனும் நிலையைக் கடந்து, ஏக வெளி, பரவெளி, ஆகாசம் எனும் பெருவெளி ஆகிய நிலையில் இருக்கும் நிலையைத் தொடர்ந்து இனிமையாக இருக்குமாறு செய்த பேரொளி விளக்கினைப் போன்றவளே, மலர் போன்ற கருணை தரும் உன்னுடைய இரண்டு தாளினையும் தந்து, என்னுடைய இருவினைகளாகிய நல்வினை, தீவினை ஆகியவை அறுந்து விடும்படு செய்து, ஆறு போன்றதான வாழ்வின்  முடிவில் கரையேறுமாறு எனைச் செய்து, வெளிப்படையாகவும், முழுவதுமாகவும் தலைவன் ஆகிய இறைவன் திருவடி சேர்த்து முழு ஆனந்தமாக இருக்கும்படி செய்து அருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 2 (2019)

பாடல்

தாமென்ற உலகத்தில் மனித ரோடே
   சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
   ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
   ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
   காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே

காகபுசுண்டர்

கருத்து – அகத்திலும், புறத்திலும் நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கும்  முறையைப் பற்றியதை விளக்கும் பாடல்

பதவுரை

மும்மலங்களில் ஒன்றான  ‘தான்’ எனும் ஆணவம் கொண்டு  இந்த உலகில் சஞ்சாரம் செய்யும் மனிதர்களுடன் திரியாமல் தனித்து நிற்பாயாக; ஆன்ம அனுபவத்தை தருவதாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை குரு உபதேசித்தபடி, குரு உபதேசித்த அளவில் கொள்வாயாக; நியாயம் சார்ந்து இருப்பவனுக்கு எதிர் அணியில் இருந்து எதுவும் உரைத்திடாதே; நெற்றி உச்சியை குறிப்பதானதும், ‘ஔம்’ * என்றும் வழங்கப்படுவதுமான அட்சரத்தை மறந்துவிடாதே; களைப்பு, அலுப்பு, சோர்வு கொண்டு  உலகில் இலக்கு இல்லாமல் திரிந்திடாதே; பேய் போன்ற காமம்  கொண்டவர்களோடு இணைந்திடாதே; மண்ணைப் பானையாக மாற்ற குயவன் என்ற நிமித்த காரணமும், மண் எனும்  உபாதான காரணம் இருப்பதை அறிந்து கொண்டு விதிக்கப்பட்ட காலம் வரையில் இந்த உலகினில் இயங்கிக் கொண்டு இருப்பாயாக.

விளக்க உரை

  • ஊண் – உண்கை; உண்ணுதல், உணவு, ஆன்மாவின் சுகதுக்கானுபவம்
  • ஆயாசம் – களைப்பு, அலுப்பு, சோர்வு
  • ஆமென்ற அட்சரம் – ‘ஔம்’ என்று கொள்ளப் பெறும். (பல அட்சரங்கள் மந்திரத் தொடர்பு உடையவை என்பதால் குரு முகமாக பெறுக)

1.

மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே

– பிருகு முனிவர்

2.

சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

திருமந்திரம்

முதலில் கூறியதான `ஸௌம்` என்பதோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீரீம்` என்பவையும் சேர்த்துப்பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடிவு எழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று என்று சொன்னால்  நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

சாட்சியங்கள்

புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குநர் : திரு. ஐயப்ப மாதவன்

நிசப்தமும் பேரொலியும் ஆன
இரவொன்றை கடக்க முற்படுகிறேன்
தன்னை வெளிக்காட்டாது
வெளிப்படுகின்றன உருவங்கள்.
ஒன்று பலவாகி, நூறாகி
கோடி ஆகின்றன.
ஒவ்வொரு சிறு பிரபஞ்சமும்
அசைவு கொள்கிறது
அசையும் பிரபஞ்சங்களில்
பிம்பங்கள் தோன்றுகின்றன.
காற்றோடு கலக்கிறது ஒலிகள்
‘கொஞ்சம் இருங்க, இன்னும் கொஞ்ச
நேரத்தில அது வெளில வந்துடும்,
காப்பி சாப்பிடுறீங்களா?’

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 1 (2019)

பாடல்

மூலம்

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
யேற்குமனல் முக்கோண மெப்போது- மார்க்கு
மறுகோணங் கால்வட்ட மாகாய மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று

பதப்பிரிப்பு

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் – ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று

உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்

கருத்து – சரீரம்  பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருப்பதை விளக்கும் பாடல்

பதவுரை

பூமி எனும் பிருதிவியானது நாலு கோணம் கொண்டதாக இருக்கும்; நீர் எனும் அப்புவானது அரைச் சந்திரனைப் போல இருக்கும்; தீ எனும் தேயுவானது மூன்று கோணம் கொண்டதாக இருக்கும்; காற்று என்றும் வாயு என்றும் அழைக்கப்படும் கால் அறுகோண வடிவமாக இருக்கும்; ஆகாயமானது வட்ட வடிமாக இருக்கும்; ஆன்மா இவை எல்லாவற்றுடன் கூடி சரீரத்திலும் பொருந்தி நிற்பதால், இந்த சரீரம் எனப்படும் உடலானது பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருக்கிறது.

விளக்க உரை

  • உறுதியாதல், நிகழ்தல்
  • உறுகாய – சேர்ந்திருக்கும் உடல்
  • கால் – 1. மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. 2. ஒன்றை ஈடாக பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு; 3. காற்று 4. நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி. 5. காடு, கான், கானகம், அடவி 6. பிறப்பிடம், தோன்றும் இடம், தோற்றம் 7. வமிசம், இனமுறை 8. கறுப்பு நிறம் 9. இருள் 10. வினையெச்ச விகுதி 11. ஏழனுருபு 12. உருளை, சக்கரம், ஆழி 13. வண்டி 14. முளை 15. பூந்தாள் 16. மரக்கால் 17. அடிப்பகுதி 18. காலம், பொழுது 19. குறுந்தறி 20. வழி 21. மரக்கன்று 22. மகன் 23. வலிமை 24. வாய்க்கால் நீர்க்கால் 25. எழுத்தின் சாரியை 26. வாதம் 27. காம்பு  28. தடவை (முறை) 29. கழல் 30. சரண் 31. இயமன் 32. பிரிவு 33. மழைக்கால் 34. நடை 35. சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக்கொண்ட தலம் 36. கிரணம் 37. வெளியிடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 29 (2019)

பாடல்

மூலம்

அரம்பிடிக் கும்கண்ணினாராசை மேற்கொண் டலைவதெல்லாம்
வரம்படிக் கும்கருத் துண்மைகண் டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக் கும்துட்ட வேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம்பிடிக் கும்வடுகா காழியாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

அரம்பிடிக்கும் கண்ணினாராசை மேண்கொண்டலைவதெல்லாம்
வரம்படிக்கும் கருத்துண்மை கண்டார்க்கில்லை வந்தருள்கூர்
உரம்பிடிக்கும் துட்டவேதாள பூதத்தையோட்டி வெட்டித்
தரம் பிடிக்கும் வடுகா காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

பதவுரை

வலிமைமையும், திண்மையும், திடமும், ஊக்கமும் உடையதும் தீமை தர தக்கதும் ஆன பேய், பிசாசு வகையில் சேர்ந்த வேதாளம் இவற்றோடு இறந்தவர்களின் பேய் உருவம் கொண்டதுமான பூதத்தை வெட்டியும், ஓட்டியும் அவற்றின் வினைகளை நிலைகளை கண்டறிந்து அவைகளுக்கு விடுதலையத் தரும் வடுகனே, சீகாழிபதியி வாழும் ஆபதுத்தாரணனே! இரையை பாம்பு பிடிப்பது போல், விழுங்கி விடுவதான கன்னியர் மேல் ஆசை ஆகிய பெண்ணாசை  கொண்டு அலைவது எல்லை இல்லாமல் இழுத்து சென்றுவிடும் என்னும் கருத்து உண்மையை கண்டவர்கள் எவரும் இல்லை.

விளக்க உரை

  • வேதாளம், பூதம் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு அவற்றிக்கு பிறவியைத் தரும் ப்ரமாவின் நிலையை தரம் பிடிக்கும் வடுகனே எனவும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • உரம் – வலிமை, திண்மை, திடம், ஊக்கம், நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 28 (2019)

பாடல்

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
   கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
   சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
   கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
   நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மிகச் சிறந்ததான பொன் போன்ற திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிபவனும், கரிய நிறம் கொண்ட கண்டத்தை உடையவனும், திருமாலும் பிரமனும் காணாத இன்பத்தை தருபவனாகிய சிவன் ஆனவனும், நெருப்பை உள்ளங்கைகளில்  ஏந்தியவனும், சாமவேதத்தை விரும்புபவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், குடம் போன்று பெரிய தலையுடன் இருப்பதும், பெரியதும் ஆன யானைனையின்  தோலை உடையவனும், ரிஷபத்தின் மேல் ஏறிவரும் சக்ரவர்த்தி போன்றவனும், எங்களுக்கு அருந்துணை ஆகி எங்களால் விரும்பப்படுபவனும், திருநள்ளாறு திருத்தலத்தில்  எழுந்து அருளி உள்ளவனும், அமுதம் போன்றவனை மறந்து, நாய் போன்ற  அடியேன் ஆகிய யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்க மாட்டேன்.

விளக்க உரை

  • நம்பன் – நம்பி, ஆண்களில் சிறந்தோன், கடவுள், சிவன், விரும்பப்படுபவன்
  • சம்பு – இன்பத்தை ஆக்குபவன்

 

ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு  –  இன்று

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 27 (2019)

பாடல்

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை தன் திருமேனி முழுதும் பூசியவனும், அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்றுமாறு இருப்பவனும், மான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கைகளைக் கொண்டவனாக, நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

விளக்க உரை

  • ஆன் முறையால் – பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட,
  • அணியிழை – உமாதேவியார்
  • விபூதி தயாரிக்கும் முறை ஆகிய (சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி,2. அனுகற்ப விதி, 3. உப கற்ப விதி படி தயாரித்தல்.
  1. கற்ப விதி – பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்டி, அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுதல்.
  2. அனுகற்ப விதி – காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
  3. உப கற்ப விதி – காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.

 

ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு -11-Feb-2019

Loading

சமூக ஊடகங்கள்

ஓங்காரம் எனும் ஒர் புள்ளி – 1

*அன்னையை உபாசிக்கும் நிறை மாந்தர் ஒருவர் தன் பெயரை சத்திசிவம் என்று உரைத்தார். அவர் உரைத்தவாறே இந்த எழுத்துகள். மானுடப் பிறவி சார்ந்து எழுதுவதால்  சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.*

ப்ராமணன்

ப்ரமம் உணர்ந்தவன் பிராமணன். பொது நலத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவன் என்றே தொடங்குவோம்.

ப்ரமம் என்பது என்ன?

விவரிக்க முற்படும் போது ஏழு சமுத்திரம் தாண்டி விவரிக்க வேண்டும். அவ்வாறு அதைத் தாண்டிய நிலையே ப்ரமம்.

ஏழ் சமுத்திரத்தினையும் தாண்டி, ஏழு புவனம் தாண்டி, ஏழு நிலை தாண்டி என விரியும்.

ஸ்ரீ சக்தியின் சொரூபமான சக்தி ரூபம் ஆகும்.

இது மொத்தம் 14 கலைகளைக் கொண்டது. சிவத்திற்கு ஏழு கலைகளையும், சக்திக்கு 7 கலைகளையும் கொண்டது.  இதுவே சிவசக்தி ஐக்கியம் ஆகும்.

அன்னை ஆகிய ஸ்ரீக்கு 7 கலைகள் ஆகும்.

அவை லயம், வாவண்யம், அர்த்தம், சாஸ்திரம், அலங்காரம், வசியம், மோகனம்

  • லயம் – ஒடுங்கும் நிலை

உ.ம்

  1. குதிரை லாயத்தில் ஒடுங்குதல்
  2. ஆடுகள் பட்டிகளில் ஒடுங்குதல்
  3. பறவைகள் கூட்டில் ஒடுங்குதல்
  4. ஆதி மனிதன் காட்டில் ஒடிங்கினான்.
  • லாவண்யம் – சிருங்காரம் ஆகிய மயக்கும் நிலை

உ.ம்

  1. பூ அழகு மயக்கும்
  2. வண்டு பூ அழகில் வாசனையில் மயங்கும்
  3. எதிர்பால் மயக்கும்
  4. இசை மயக்கும்
  5. மகுடி நாகத்தை மயக்கும்
  • அர்த்தம் – அறிவு – ஆசானான் கற்பிக்கப்படுவது. முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதி. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஏற்கும் நிலை என்றும் கூறலாம்.

உம்

  1. தீ சுடும்
  • சாஸ்திரம் – முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதிகள்.இந்த நிலையில் அறிவு மலராமல் மொக்காக இருக்கும்.
  • அலங்காரம் – நாத மற்றும் ரூப வடிவமாகும் (கண்ணால் காணப்படும் காட்சி, காதால் கேட்கப்படும் ஒலி). நிறம் , ரூபம் ஒளி வடிவானவை
  • வசியம் – வாசி, வாசி என்பது மாறி சிவா. இது ராம நாமத்திற்கும் பொருந்தும்
  • மோகனம் – அன்னை மோகன நிலை மாற்ற இயலா எண்ணம் கொள்ளாவரையில் மோகனம் திறக்காது
  • இது விஷ்ணு மாயா, சிவ மாயா, ப்ரம மாயா என மூன்றாகும். இது ரஜோ, தமோ மற்றும் சத்துவ குணத்தின் கூறுகளாகும்

மனிதன் அறிவு நிலையை அடைந்து மீண்டும் எண்ணங்களால் குழந்தை நிலை அடைய வேண்டும்.  தாயாகி குழந்தையை ரசிப்பதும், குழந்தையாகி தாயை ரசிப்பதும் ஆன்ம விடுதலை அளிக்கும்.

7 சிவ கலைகள்  பற்றிய பதிவினை அடுத்துக் காண்போம்.

தொடரும்.,

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 26 (2019)

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

முழு முதல் ஆனவனே, பொற்சபையில் ஆடுகின்ற நாதனாகவும், தலைவனாகவும் இருப்பவனே! அயன், அரி அரன் ஆகிய மூவர்க்கும், மெய் வாய் கண் மூக்கு மற்றும் செவி ஆகிய ஐம்புலன்களுக்கும், நீ வகுத்து நின்ற பாதையில் செல்லும் எனக்கும் முதலானவே, உன்னுடைய பழைய அடியார் திருக்கூட்டத்தோடு சேர்ந்து, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்திருத்தலைத் திருவருளால் கொடுத்தருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

விளக்க உரை

  • ‘மூவர்க்கும் ஐம்புலனுக்கும் முதல்’ – மூவர் தொழில் செய்பவர்கள், ஐம்புலன்கள்  செயப்படுபொருள். ஆகவே அவை எல்லாவற்றிற்கும் ஆன பெரும் தலைவன்.
  • ‘மற்றென் செய்கேன்’ –  உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்’ என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
  • ‘முழு முதல் ஆனவனே’ என்பதை சிவனின் எண் குணங்களோடு ஒப்பிட்டு உய்க.
  • கெழுமுதல் – கூடுதல்

Loading

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 4. வீர கணபதி

 

வடிவம் சிறிது சினந்த திருமுகம்
மேனி வண்ணம் சிவந்த மேனி
திருக்கைகள் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி கொண்ட பதினாறு திருக்கரங்கள்
பலன் வழிபடும் பக்தர்களுக்கு தைரியம், வீரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை தருபவர்.
மற்றவை சில வட இந்திய வடிவங்களில் நான்கு திருக்கரங்களுடன் வில், சூலம், பாசம் மற்றும் அங்குசம் கொண்டு காணப்படுகின்றன.

 

மந்திரம்

வேதாள ஸக்தி ஸரகார்முக சக்ர கட்க
கட்வாங்க முத்கர கதாங்குஸ நாகபாஸாந்|
ஸூலஞ்ச குந்த பரஸூத்வஜ முத்வஹந்தம்
வீரம் கணேஸ மருணம் ஸததம் ஸ்மராமி||

விளக்கம்

வேதாளம், வேல், வில், அம்பு, சக்ரம், வாள், கேடயம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகியவற்றைத் தாங்கிய பதினாறு திருக்கரங்களுடன்`அருளுபவரும், செந்நிறத்திருமேனியை உடையவருமான வீர கணபதியை எந்நாளும் தொழுகிறேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 25 (2019)

பாடல்

நாளோ வினையோ வீணாளோ
      நானா தொழிலுக் கானதுவே
   நலஞ்சேர் நிட்டைக் குதவிவரும்
      நாழியொன்றாயினும் இலையோ

சூளைக் குயவன் விதிவசத்தால்
      துக்க சுகமும் தொடர்ந்துவரத்
   துன்மார்க்கத்தால் வந்ததென்றுஞ்
      சொல்வார் பாரில் சூழ்மனிதர்

வேளைக் கிசைந்த மொழிபேசி
      வினையிற் புகுந்த சுகம்போதும்
   வினையை ஒழித்தே அமலசுக
      வெளியைப் பொருத்தி வினைப்பிறவி

மாளும் படிநீ அருள்புரிவாய்
      வாலாம்பிகையே வான்மணியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, திரிபுரை என்றும், வாலை என்றும், பத்து வயது ஆனவள் என்றும், பதினாறு வயது ஆனவள் என்றும், கன்னியென்றும், பச்சைநிறத்தவள் என்றும் ,சக்கரத்தாள் என்றும், வாமி என்றும், தேவி என்றும், மாயை என்றும், புவனை என்றும், அன்னை என்றும், ஆவுடையாள் என்றும், தாரை என்றும், அமுதக் கலசம் என்றும், தாய் என்றும், உண்ணாமுலை என்றும், கோவுடைள் என்றும், அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும், அறுபத்து நாலு கலைகளையும் அறிந்த சித்தர்களால் வணங்கப்படுபவளும், வாலை எனப்படும்  வாலாம்பிகையே! வானின் கண் போன்ற சூரியன் போல் சுடர்விடுபவளே! உன்னை வணங்குதல் இல்லாமல், இந்த நாட்கள் வினைப் பற்றி நின்று பல் வேறு தொழிகள் செய்து, நன்மையைத் தருவதாகிய  தியானம், நோன்புநோற்றல் போன்றவற்றிற்கு உதவி செய்யாமல் கழித்த  நாட்களில் கழித்து, சூளைக்குயவனாகிய பிரமன் படைத்த விதி வசத்தால் ஆன உடலில் துக்கமும், சுகமும் மாறி மாறி தொடர்ந்து வர, ‘அது துன்மார்க்க வழில் வந்தது’ என உலக மக்கள் இயம்பும் படி வாழ்ந்தும், சமயத்திற்கு ஏற்றவாறு மொழி பேசி, அதனால் விளைந்த வினையில் சேர்த்த சுகம் போதும்; இவ்வாறான இந்த வினைகளை ஒழித்து நின்மலமாக்கி  பரவெளியில் பொருந்தி வினைப்பிறவி மாளும்படி நீ அருள் செய்ய வேண்டும்.

விளக்க உரை

  • வினைப் பிறவி மாளும்படி வேண்டியது
  • சூளைக்குயவன் – பிரமன்
  • நிட்டை – தியானம், நோன்புநோற்றல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 24 (2019)

பாடல்

உள்ளாக நால்வகைக் கோட்டை – பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை – வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை

கடுவெளிச் சித்தர்

பதவுரை

இந்த உடலானது நல்லதொரு நாடு போன்றதுஞான நிலை அடையவொட்டாமல் தடுப்பதாகியதும், மனதால் மட்டும் வசப்படுத்தப்படுவதும்  ஆன  காமம், குரோதம், மத மாற்சரியம் என்னும் நால்வகை தீமையும், பகைக் குணங்களையும் கொண்டு யாரு அசைக்க முடியாதபடி கோட்டையாக  நாட்டைனைச் சுற்றி அமைத்துள்ளது. இந்த நால்வகைப் பகைகளையும் ஓடாதவாறு செய்து விட்டால் உடல் என்னும் நாட்டினை நம் வசப்படுத்தி ஆளலாம். வஞ்சனையை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய புலன்களைம் ஞானத்தீயினால் எரித்து விட்டால் மெய்வீடானதும், பிறவாமை ஆகியதும் ஆன முக்தி / வீடு பேறு கிடைக்கும்.

விளக்க உரை

  • மனம், சித்தம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் கோட்டையாக இருக்கின்றன என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. புத்தியும், சித்தமும் நல்லவற்றை சிந்திக்கும் திறனுனையது ஆனதாலும், அகங்காரம் நல் விஷயங்களை அகங்காரம் உறுதிப்படுத்துவதாலும், பகை என்று அடுத்து வரும் வரிகளால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் அந்தர்க்கரணங்கள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 23 (2019)

பாடல்

சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்

தாயுமானவர்

பதவுரை

நிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய  தோன்றி ஒடுங்கும் தொழிலுடையதுஇந்த  உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ? (எளியேன் அறிகின்றிலேன்)

விளக்க உரை

  • திகபரம் – இகம் மற்றும் பரம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 22 (2019)

பாடல்

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
   சமர்த்தா யெதிர்த்தே …… வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
   தகர்த்தா யுடற்றா …… னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
   செகுத்தாய் பலத்தார் …… விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
   திருத்தா மரைத்தா …… ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
   பொரத்தா னெதிர்த்தே …… வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
   பொரித்தார் நுதற்பார் …… வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
   கருத்தார் மருத்தூர் …… மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
   கதிர்க்காம முற்றார் …… முருகோனே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

சரம் போன்று புறப்பட்ட ஆறு திருப் பொறிகளில் இருந்து பிறந்தவனே, திரிபுரத்தில் இருந்த  தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய  வரம்பெற்ற மூன்று அசுரர்களும், அம்புகளை சரம் போல் கொண்டவர்களாக சண்டை செய்ய எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்து  பிறகு போர்க்கோலம் தரித்து பின் தனது புன்னகையால் திரிபுரத்தை தனது நெற்றிக்கண் பார்வையாலேயே எரித்தவரும், பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்து, அதனை ஆடையாக அணிந்து கொண்டவரும், தேவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும் கருத்தோடுதென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்து வந்த மன்மதனை சாம்பல் ஆகும்படி செய்த சிவனாரின் கண்மணி போன்றவனே, கதிர்காமம் என்ற தலத்தில் விளங்கும் முருகனே! மிக வலிமையோடு போரில் குதித்து சாமர்த்தியமாய்  எதிர்த்துவந்த சூரனை அவன் நல்வினைப் பற்றி  ஒழுங்காக நடந்துகொண்ட வரையில் அவனை எதுவும் செய்யாமல் விட்டுவைத்தும், அவன் நல்வினைகள் நீங்கி, தீய்வினைகள் பற்றி துன்பம் செய்த போது அவனை நெருக்கிஉடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்துதலையையும் மார்பையும் அறுத்துக் கொன்று வெற்றியை கொண்டாய்; அப்படிப்பட்ட நீஉனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்து அருளுக.

விளக்க உரை

  • சரத்தே யுதித்தாய் … நாணல் காட்டிலே பிறந்தவனே என்ற பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
  • செகுத்தாய் … கொன்றெறிந்தாய்
  • வலக்காரம் – பலவந்தம், அதிகாரம், வெற்றி

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 21 (2019)

பாடல்

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
   வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
   எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
   அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
   செவ்வான வண்ணரென் சிந்தை யாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அழகிய பவளம் போன்ற நிறமுடையவரும், செம்மை நிற குன்று போன்றவரும், செவ்வானம் போன்ற நிறமுடையவரும், நெருப்பில் நின்று ஆடியவரும்நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம்  என்று உலக பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாக இருப்பவரும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற உடல் பஞ்ச பூதங்களாகி அதன் வடிவமாகவும் இருப்பவரும், அதில் ஆடுதலை விரும்பிச் செய்பவரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தைக்கு உரியவர் ஆயினார்; ஆதலால் யாம் யாவர்க்கும் எளியோம் அல்லோம்; ஞாயிறு ஆகிய சூரியன் எங்கு எழுந்து எத்திசை உதித்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது யாது? வெம்மை கொடுத்து துன்பம் தரும் இறப்பாகிய மரணம் நம்மேல் நாம் வருந்தும்படி வராது; கொடியதும்  துன்பம் தரக்தக்கதான வினையாகிய பகையும் மெல்ல விலகும் பரிவினால் வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; துன்பம் இல்லாதவர்களாக ஆனோம்.

விளக்க உரை

  • இத்திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் கூறி அருளியது.
  • பைய நையும் – மெல்ல வருந்துகின்ற;
  • வெம்ப – நாம் வருந்தும்படி.
  • வருகிற்பது அன்று – வரவல்லது அன்று.
  • கூற்றம் –  அஃறிணை சொல். அது பற்றி  `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும்.
  • பைய நையும் – மெல்ல வருந்துகின்ற

 

செம்மை நிறம் பற்றி பவளம் போன்றவர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர் என்று கூறி இருப்பது அம்மை வடிவமாக அருள் கொண்டதைக் குறித்திருக்கலாம். உணர்ந்தோர் பொருள் உரைப்பின் மகிழ்ந்து உய்வேன்.

 


 

மூன்று முறைக்கூறக் காரணம் ஏதாகினும் உண்டா? // கவிதை அழகு + இறைவனின் திருவுருவையே எதிலும் காணுதல் – இரண்டும் தான். வேறென்ன காரணம் வேண்டும்? 🙂 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ – ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் : கம்பர் இப்படி ஒரே வரியில் இராமனின் சியாமள வர்ணத்திற்கு நான்கு உவமைகளைக் கூறவில்லையா, அதுபோலவே இதுவும்.

Jataayu B’luru

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 20 (2019)

பாடல்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
   சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
   பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
   நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
   வெண்காடு மேவிய விகிர்த னாரே

தேவாரம்  – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தாம் மனத்தால் விரும்பியவாறு  நடக்கும் வெண்மை நிறக் காளையில் ஏறி, உலகியலுக்கு வேறுபட்ட பெருமானாக இருப்பவரும், தூண்டப்பட்ட விளக்கு போன்று ஒளி பொருந்திய பிரகாசம் உடைய திருமேனியில் திரு வெண்ணீறு அணிந்து, சூலத்தைக் கையில் ஏந்தி, நீண்டு சுழலும் நாக்கினை உடைய பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொறிகளில் ஒன்றான காதிலும் பாம்பினை அணிகலனாகப் பூண்டு, பொன் போன்ற சடைகள் நீண்டு தொங்குமாறு, பூணூல் அணிந்தவராய், நீண்டு நெடுஞ்சாண் கிடையாக விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடி, வெண்காடு எனும் திருவெண்காட்டுத் தலத்தை விரும்பி அடைந்து, அதன் நீண்ட தெருக்களின் வழியே வந்து என் நெஞ்சத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

விளக்க உரை

  • பொற்சடைகள் – பொன்போலும் சடைகள்
  • வேண்டும் நடை – அவர் விரும்பியவாறே நடக்கும் நடை ; அது விரைந்தும், மெல்லென்றும், தாவியும் நடத்தல். ` தாம் செலுத்தியவாறே செல்லும் அறம் என்பது உண்மைப் பொருள்.
  • விகிர்தன் – உலகியலுக்கு வேறுபட்டவன்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்புக்கொளியூர்

தல வரலாறு (சுருக்கம்) /  சிறப்புகள் – திருப்புக்கொளியூர்

  • பழைய ஊரான புக்கொளியூர் நத்தம் அழிந்து வெட்ட வெளியான பின் உருவானதே தற்போது உள்ள அவிநாசி
  • விநாசம் இல்லாததால் அவிநாசி
  • வாராணஸிக் கொழுந்து – காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி
  • ஊர்த்துத் தாண்டவம் நடைபெற்றத் தலம்
  • 32 விநாயகர்கள் அருள்பாலிக்கும் தலம்
  • சிம்மவாகனத்துடன் கூடிய நர்த்தனகணபதி
  • தட்சிணாமூர்த்தி நடனக்கோலத்தில் (ராஜகோபுரத்தின் தென்திசையில்). கோஷ்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி
  • அம்பாள் சந்நிதி கருவறை சுவற்றில் தேளின் வடிவம்
  • காசி பைரவரருக்கும் பழமையானவரும், வடை மாலை சார்த்தப் படுபவரும், உள்பிரகாரத்தில் அமைந்துள்ளதும் ஆன ஆகாச காசிகா புராதன பைரவர் சந்நிதி
  • வியாதவேடன் என்ற திருடன் முக்தி பெற்றத் தலம். (பைரவர் சந்நிதி அருகில் வடிவம்)
  • திருவாசகத்தில் ஆனந்தமாலையில் “அரிய பொருளே அவிநாசியப்பாண்டி வெள்ளமே” என்றும், திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் ‘அவிநாசி கண்டாய்’ என்றும் பாடப்பெற்றத் தலம்.
  • மாணிக்கவாசகர் மதுரையில் இருந்தபடியே இத்தலத்தைப் பற்றி பாடல் பாடிய திருத்தலம்
  • ‘புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என்று இறைவனுக்கு சுந்தரர் உத்தவிட்டு முதலையுண்ட பாலகனை மீட்ட ஏரியும், கரையில் சுந்தரர் சந்நிதியும். (கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவு)
  • பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே பூக்கும் தல விருட்சமான பாதிரி மரம்
  • வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதி
  • வசிஷ்டர் தனது சனிதோஷம் நீங்க வழிபட்ட தலம்
  • பதஞ்சலி, சக முனிவருக்கு காசிக்கு நிகரான தலம் என்று காட்டுவதற்காக தன் தண்டத்தை அவிநாசி காசிக் கிணற்றில் போட்டு, காசியில் கங்கையின் அலைகளால் தண்டத்தைப் பெற்றுக் காண்பித்த கிணறு.
  • கேரள நாட்டு அந்தணன் ஒருவன், தான செய்த பாவங்களால் பேய் வடிவம் பெற்று, அது விலக இங்கே வந்து வணங்கி தேவ வடிவம் பெற்று சிவலோகம் செல்லச் செய்த தலம்.
  • குருநாத பண்டாரம், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபாடு செய்ய, அரசாங்க அதிகாரிகள் அவர் மகிமை அறியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்த பின், பெரிய மீன் ஒன்றினால் அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பிக்கப்பட்டத் தலம்.
  • கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்ட போது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்த போது, அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசி, மந்திரக் கட்டு நீக்கி, தேரை நகரச் செய்தத் தலம்.
  • தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்று.
  • இத்தலத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ளவை சேவூர், மொக்கணீஸ்வரம் ஆகிய தேவார வைப்புத்தலங்கள்
  • பிற நூல்கள் – கருணாம்பிகைசதகம், கரணாம்பிகை யமக அந்தாதி, கருணாம்பிகை பிள்ளைத்தமிழ்

 

தலம் திருப்புக்கொளியூர்
பிற பெயர்கள் திருப்புக்கொளியூர் அவிநாசி , திரு அவிநாசி, தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை
இறைவன் அவிநாசிலிங்கேஸ்வரர்,அவிநாசி ஈஸ்வரர் , அவிநாசிநாதர் , பெருங்கேடிலியப்பர், வாராணஸிக் கொழுந்து
இறைவி கருணாம்பிகை, பெருங்கருணைநாயகி
தல விருட்சம் பாதிரி மரம்
தீர்த்தம் நாககன்னி தீர்த்தம் , காசிக்கிணறு , ஐராவதத் தீர்த்தம்
விழாக்கள் சித்திரையில்  பிரம்மோற்சவம், பங்குனி  உத்திரத்தில் முதலைவாய்ப் பிள்ளை உற்சவம் 3 நாட்கள், மிருகசீரிட நட்சத்திரத்தில் கொடியேற்றம், பூரத்தில் தேர்த்திருவிழா,  ஐந்தாம் நாள் உற்சவத்தின் போது ரிஷபாரூடராக  திருக்காட்சி
மாவட்டம் திருப்பூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 6:௦௦ முதல் 12:0 வரை

மாலை 4:௦௦ முதல் 8:௦௦ வரை

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்

அவிநாசி அஞ்சல், அவிநாசி வட்டம்

திருப்பூர் மாவட்டம் – 641654

04296-273113, 94431-39503

வழிபட்டவர்கள் வசிஷ்டர், பதஞ்சலி, பிரம்மா 100 ஆண்டுள், இந்திரனுடைய ஐராவதம் 12 ஆண்டுகள், தாடகை 3 ஆண்டுகள், நாகக் கன்னி 21 மாதங்கள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் திருப்புகழ்1 பதிகம், ஹரிஹரதாரத்ம்யம்  என்ற வடமொழி  நூல் – ஹரதத்தாசாரிய ஸ்வாமிகள், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர்
நிர்வாகம்
இருப்பிடம் கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவு, திருப்பூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு, திருமுருகன்பூண்டியில் இருந்து 5 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்

அருள்மிகு கருணாம்பிகை உடனுறை அவிநாசியப்பர்

 

புகைப்படம் : இணையம்

பாடியவர்         சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்          92
திருமுறை எண் 1

பாடல்

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே
உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே

பொருள்

புற்றில் வாழ்கின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, மேலான இடமாகிய கைலாயத்தில் உள்ளவனே, அழிவற்றதாகிய திருப்புக்கொளியூரில் உள்ள, ‘அவனாசி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே! ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!

 

பாடியவர்         சுந்தரர்
திருமுறை        7
பதிக எண்          92
திருமுறை எண் 4

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

பொருள்

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

  • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
  • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
  • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 19 (2019)

பாடல்

உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான
     ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம்
     பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக
     மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில்
     தனித்தவா இனித்தவாழ் வருளே

திருஅருட்பா  – ஆறாம் திருமுறை –  வள்ளலார்

பதவுரை

வலிமை பொருந்திய வானுலகில் மேன்மை குன்றாதவாறு இருந்து ஞான ஒளியினால் உயர்ந்தும், பெருவதும் ஆன ஒப்பற்ற சித்திபுரத்தை உடையவனே; சிறந்தவர்களாலும், ஞானிகளாலும் ஆன பெரியோர்களால் சூழப்பட்டு இருப்பவனே; செய்த குற்றங்களைப் பொறுத்து அடியேனுக்கு, வரம் அளித்தவனே; உண்மை தன்மையால் மேன்மை பொருந்தியவனே; சிவாகமங்கள் கொண்டும் வேதங்கள் கொண்டும் காண முடியாத தன்மையை யுடையவனே; மெய் அறிவுக்கு ஆதரவு தருகின்றவனே; அம்பலத்தில் தனித்து நின்றாடுபவனே! எனக்கு இனிமை பொருந்திய மெய் வாழ்வினை அருள்வாயாக.

விளக்க உரை

  • உலகியல் வாழ்வு துன்பமும், தீமையும், சிறுமையும் பிறவும் நிறைந்திருத்திருப்பதால்  இவ்வாழ்வு வேண்டாம் என விண்ணப்பித்தார்
  • உரம் – வன்மை. உரத்தவா ஞானமாவது – மெய்ம்மையால் திண்மை குன்றாத திருவருள் ஞானம்
  • சித்திபுரம் – வடலூர்
  • பெரியோர் புரம் – ஞானவான்கள் உறையும் இடம்
  • தரம் – தன்மை
  • அறிவு ஆதரத்தவன் – மெய் உணர்வை விரும்புபவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 18 (2019)

பாடல்

சோதர வழியால் வருவினையும்
      தொக்கு வழியால் வருவினையும்
   தொடருஞ்சட்சு வழியாலும்
      சொல்நா வுடனே ஆக்ராணம்

பார்த்த வழியிற் கரணமதைப்
      பற்றி உயிரைக் கலங்கடித்துப்
   பண்ணும் வினையும் வெகுகோடி
      பாழ்போனதுவும் வெகுகோடி

ஆற்றில் கரைத்த புளிஎனவே
      ஆயிற்றொருவர்க் குதவியின்றி
   அடியேன் முன்னாள் ஒருவருக்கும்
      ஆகாதவனோ அதை இனித்தான்

மாற்றவகையும் அறியாயோ
      வகுத்த எனையும் மறந்தாயே
   மயிலாபுரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே! உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் சேர்ந்து, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றுடன் கூடியதான அந்தக்கரணங்கள் பற்றியும் பிற உயிர்களை பற்றிக் கலங்கடிக்குமாறு செய்து செய்கின்ற வினைகள் எண்ணிக்கை அற்றவை. இவ்வாறான வினைகளை செய்து வீணாக்கிய வாழ்நாட்களும் எண்ணிக்கை அற்றவை. ஆற்றில் கரைத்த புளி போல் குறிக்கோள் இல்லாமல் கரைந்து போகாமல் யாருக்கும் உதவி இன்றி, எல்லோரிடத்திலும் பேதப்பட்டு  இருந்த நிலையை மாற்றித் தரும் வகையை நீ அறிய மாட்டாதவளா? அவ்வாறு நீ வகுத்த அந்த வகையில் இருந்து வரும் என்னையும் மறந்து விட்டாயோ?

விளக்க உரை

  • வினை பற்றி குறிக்கோள் இல்லாத வாழ்வினை மாற்ற வேண்டி அன்னையிடம் விண்ணப்பித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 17 (2019)

பாடல்

ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும்
கோடிவாசி தேடினுங் குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையு முகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே

சிவவாக்கியர்

பதவுரை

தனவானகளாக காட்ட கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆடுகளையும், கணக்கற்ற எல்லைப்பகுதியாகிய நாடு என்பதை விரிவாக்கம் செய்தும், கணக்கற்றதான காட்டுப்பரப்பில் மான்களையும், சேனைப் படைகளையும் மிகுந்த முயற்சியுடன் செய்யப்படும் கணக்கற்றதான வாசி தேடினும் உடலை விட்டு உயிர் பிரிந்து போகும்போது உறுதுணையாக வந்து உதவுமோ? நிச்சயமாக உதவாது. தானே விரும்பிச் சென்று ஐந்து அறிவும் அதற்கு கீழான நிலையில் காணப்படும் உயிர்களுக்கு தரப்படுவதானான பிச்சையும், மனம் விரும்பி பிறர் உந்துதல் இல்லாமல் ஆறாம் அறிவுடைய உயிர்களுக்கு செய்யப்படுவதாகிய தர்மமும் மட்டுமே சவுக்குக்கு கட்டுப்படும் குதிரை போல் உறுதுணையாக வந்து நிற்கும்.

விளக்க உரை

  • ‘பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே’ எனும் பட்டினத்தார் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்