அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 18 (2021)


பாடல்

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது

திருநெறி 4 -உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – பாராதியின் நிறங்களையும், அவை குறிக்கும் எழுத்துக்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பிருதிவி எனும் புவியானது பொன்னிறமாக இருக்கும்; அப்பு எனும் நீரானது வெண்மை  நிறமாக இருக்கும்; தேயு எனும் பொங்கிவரும் தீயானது சிவப்பு மிகுதியான சிவந்த நிறத்தில் இருக்கும்; வாயுவானது கருமை நிறமாயிருக்கும்; புகை மிகுந்த ஆகாயமானது புகைநிறமாயிருக்கும் என்று பெரியோர்கள் உரைப்பார்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனும் பாராதியில் பிருதிவிக்கு ல எழுத்தும் (லகாரம்),  அப்புவுக்கு வ எழுத்தும் (வகாரம்), தேயுவுக்கு ர எழுத்தும் (ரகாரம்),  வாயுக்கு ய எழுத்தும் (யகாரம்), ஆகாயத்திற்கு அ எழுத்தும் (அகாரம்)  அழுத்தமாகவும் பலம் பொருந்தியும் நிற்கும்.

விளக்க உரை

  • தூமம் – புகை, நறும்புகை , தூபகலசம், மண்கலச்சூளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – மாசி – 19 (2021)


பாடல்

ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது
பெற்றார் பிறப்பற்றார் பின்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று திருவம்பலத்தான் திருநடனம் காண்பவர்கள் சனனம், மரணம் அற்றவர்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

பிரணவம் ஆகிய ஓங்காரத்தினை நல்ல திருவாசியாக அமையப்பெற்று, அதில் பொருந்தி, அந்த பிரணவத்தை விட்டு என்றும் நீங்காமல் அதில் பொருந்தி இருக்கும் பஞ்சாக்கரத்தினை நிறைந்த உள்ளொளியாக அமையப் பெற்று, யான் எனது என்னும் மும்மலங்களின் ஒன்றான அகங்காரம் அற்றவர்கள் அறிவார்கள்; இவ்வாறான அழகிய திருவம்பலத்தான் செய்யும் திருநடனத்தினை தரிசித்தவர்களே சனன மரண மற்றவர்கள் ஆவார்கள்.

விளக்கஉரை

  • நடராஜர் திருமேனி வடிவங்களில் காணப்படும் திருவாசியே ஓங்காரமாக உணரப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 19 (2020)


பாடல்

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் – ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்துசிவதத்துவம் ஆகிய சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகியவற்றில் சிவசக்தி தத்துவங்கள் செயல்படும் முறையை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவதத்துவங்கள் ஐந்தினில் ஒன்றானதும், இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களில் ஒன்றாகி சிவதத்துவத்தின் பகுதியானதுமான சுத்தவித்தையில் கிரியையின் செயல்பாடுகள் குறைந்து ஞானம் மிகுந்து இருக்கும்; காலத்தால் பகுக்க இயலாத பழமையானதான ஈச்வரத்தில் ஞானம் குறைந்து செயலால் செய்யப்படுவதும், சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபாடு செய்வதும் ஆன கிரியை உயர்ந்தது நிற்கும்; சிவ சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படுவதாகிய சாதாக்கியத்தில் ஞானமும் கிரியையும் சம அளவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்; சக்தி தத்துவத்தில் கிரியையை முன்வைத்தும் சிவதத்துவத்தில் அவற்றுக்குக்கு ஆதாரமான ஞானம் முன்வைத்தும் இருக்கும்.

விளக்க உரை

  • சைவ நாற்பதங்களின் வரிசையில் கிரியை, ஞான மார்கங்களின் செயல்படு முறை விளக்கங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 1 (2019)


பாடல்

அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும் – அஞ்செழுத்தே
ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம்
மோனந்த மாமுத்தி யும்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசங்கடந்தார்

கருத்து – ஈசனால் படைக்கப்பட்டதே பிரபஞ்சமும் இயக்கமும் என்று கூறி அதை அளிப்பது பஞ்சாட்சரமே என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

அண்ணல் என்று போற்றப்படும் கடவுளாகிய சிவனால் தோற்றுவிக்கப்பட்டதே இரகசியங்களை உள்ளடக்கியதும், மறை பொருள் ஆனதும் ஆன அருமறைகளும். காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும். இவைகள் அஞ்செழுத்தில் அடங்கும்; வேதாகமங்களும், ஆதி புராணங்கள் அனைத்தும் பரமேசுவரன் அருளிய அரிய  பஞ்சாக்கரதில் அடங்கும்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமானதும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகின்றதுமான ஆனந்தத் தாண்டவமாகவும், முப்பத்து ஆறு தத்துவங்களைக் கடந்து மோனாந்தமாகவும், பரமுக்தியினை அளிப்பதும் பஞ்சாட்சரமே.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 18 (2019)


பாடல்

அந்தக் கரணம் அடைவே உரைக்கக்கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் – சிந்தையிவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – அந்தக்கரணங்கள் பற்றியும் அவற்றின் செயல்பற்றியும் உரைத்தது.

பதவுரை

அந்தக்கரணம் என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேள். அவைகளின் முறைகளையும் சொல்கிறேன் கேட்பாயாக. மனம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகியவற்றுடன் சிந்தை சேர்ந்து அந்தக்கரணம் ஆகும்; பற்றிய பொருளினை நிச்சயித்து , பல காலம் அது பற்றி அறிந்து அதைப் பற்றி சிந்திக்கும் உணர்வினை மனம் என்றும், பற்றிய பொருளினை புத்தி எனவும், அதை நிச்சயித்து வரையறுப்பதை அகங்காரம் எனவும், அதுபற்றி பலமுறை அபிமானித்து எழுவதை சித்தம்  என்றும்  அதுவே சிந்திக்கும் என்றும் அறிவாயாக.

விளக்க உரை

  • கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, உள்ளே இருக்கும் அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாததே அந்தக்கரணம்
  • மனம் ஒன்றைப்பற்றி நிற்கும்; ஆங்காரம் ஒருமைப்படுத்தும், புத்தி நிச்சயிக்கும், சங்கற்பம் வேறுபடுத்தி காட்டும்; இவைகள் கோர்வையாக நிகழ்வதால் அனைத்தும் ஒன்றெனவே தோன்றும்; ஒன்றின் செயலை மற்றொன்று செய்ய அறியாததால் அந்தக் கரணங்கள் உயிர் ஆகாமையும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா எனும் அந்தக்கரணவாதிகளின் கொள்கையினை மறுத்து மறுதலித்து  மெய்கண்டார் கூறுவது ஒப்பு நோக்கி அறிந்து கொள்க.
  • அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
    அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே

           (சிவஞானபோதம் – நூற்பா-4)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 1 (2019)

பாடல்

மூலம்

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
யேற்குமனல் முக்கோண மெப்போது- மார்க்கு
மறுகோணங் கால்வட்ட மாகாய மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்று

பதப்பிரிப்பு

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் – ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று

உண்மை விளக்கம் – திருவதிகை மனவாசகங்கடந்தார்

கருத்து – சரீரம்  பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருப்பதை விளக்கும் பாடல்

பதவுரை

பூமி எனும் பிருதிவியானது நாலு கோணம் கொண்டதாக இருக்கும்; நீர் எனும் அப்புவானது அரைச் சந்திரனைப் போல இருக்கும்; தீ எனும் தேயுவானது மூன்று கோணம் கொண்டதாக இருக்கும்; காற்று என்றும் வாயு என்றும் அழைக்கப்படும் கால் அறுகோண வடிவமாக இருக்கும்; ஆகாயமானது வட்ட வடிமாக இருக்கும்; ஆன்மா இவை எல்லாவற்றுடன் கூடி சரீரத்திலும் பொருந்தி நிற்பதால், இந்த சரீரம் எனப்படும் உடலானது பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருக்கிறது.

விளக்க உரை

  • உறுதியாதல், நிகழ்தல்
  • உறுகாய – சேர்ந்திருக்கும் உடல்
  • கால் – 1. மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. 2. ஒன்றை ஈடாக பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு; 3. காற்று 4. நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி. 5. காடு, கான், கானகம், அடவி 6. பிறப்பிடம், தோன்றும் இடம், தோற்றம் 7. வமிசம், இனமுறை 8. கறுப்பு நிறம் 9. இருள் 10. வினையெச்ச விகுதி 11. ஏழனுருபு 12. உருளை, சக்கரம், ஆழி 13. வண்டி 14. முளை 15. பூந்தாள் 16. மரக்கால் 17. அடிப்பகுதி 18. காலம், பொழுது 19. குறுந்தறி 20. வழி 21. மரக்கன்று 22. மகன் 23. வலிமை 24. வாய்க்கால் நீர்க்கால் 25. எழுத்தின் சாரியை 26. வாதம் 27. காம்பு  28. தடவை (முறை) 29. கழல் 30. சரண் 31. இயமன் 32. பிரிவு 33. மழைக்கால் 34. நடை 35. சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக்கொண்ட தலம் 36. கிரணம் 37. வெளியிடுதல்

Loading

சமூக ஊடகங்கள்