பாடல்
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை தன் திருமேனி முழுதும் பூசியவனும், அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்றுமாறு இருப்பவனும், மான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கைகளைக் கொண்டவனாக, நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
விளக்க உரை
- ஆன் முறையால் – பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட,
- அணியிழை – உமாதேவியார்
- விபூதி தயாரிக்கும் முறை ஆகிய (சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி,2. அனுகற்ப விதி, 3. உப கற்ப விதி படி தயாரித்தல்.
- கற்ப விதி – பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்டி, அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுதல்.
- அனுகற்ப விதி – காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
- உப கற்ப விதி – காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
ஸ்ரீ தர்ப்பாண்யேஸ்வரர் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா, திருநள்ளாறு -11-Feb-2019