பாடல்
தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே
காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே
காகபுசுண்டர்
கருத்து – அகத்திலும், புறத்திலும் நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி நடக்கும் முறையைப் பற்றியதை விளக்கும் பாடல்
பதவுரை
மும்மலங்களில் ஒன்றான ‘தான்’ எனும் ஆணவம் கொண்டு இந்த உலகில் சஞ்சாரம் செய்யும் மனிதர்களுடன் திரியாமல் தனித்து நிற்பாயாக; ஆன்ம அனுபவத்தை தருவதாகிய ‘ஓம்’ எனும் மந்திரத்தை குரு உபதேசித்தபடி, குரு உபதேசித்த அளவில் கொள்வாயாக; நியாயம் சார்ந்து இருப்பவனுக்கு எதிர் அணியில் இருந்து எதுவும் உரைத்திடாதே; நெற்றி உச்சியை குறிப்பதானதும், ‘ஔம்’ * என்றும் வழங்கப்படுவதுமான அட்சரத்தை மறந்துவிடாதே; களைப்பு, அலுப்பு, சோர்வு கொண்டு உலகில் இலக்கு இல்லாமல் திரிந்திடாதே; பேய் போன்ற காமம் கொண்டவர்களோடு இணைந்திடாதே; மண்ணைப் பானையாக மாற்ற குயவன் என்ற நிமித்த காரணமும், மண் எனும் உபாதான காரணம் இருப்பதை அறிந்து கொண்டு விதிக்கப்பட்ட காலம் வரையில் இந்த உலகினில் இயங்கிக் கொண்டு இருப்பாயாக.
விளக்க உரை
- ஊண் – உண்கை; உண்ணுதல், உணவு, ஆன்மாவின் சுகதுக்கானுபவம்
- ஆயாசம் – களைப்பு, அலுப்பு, சோர்வு
- ஆமென்ற அட்சரம் – ‘ஔம்’ என்று கொள்ளப் பெறும். (பல அட்சரங்கள் மந்திரத் தொடர்பு உடையவை என்பதால் குரு முகமாக பெறுக)
1.
மாரப்பா ஊ -எ -ஏ-ஐ-ஒ -என்று
மகிமையுள்ள ஔம் தனிலே முடித்துப்போடு
காரப்பா பீசமிவை பதினொன்றாகும்
கண்மணியே இதைக்கடந்து மெய்யை நோக்கே
– பிருகு முனிவர்
2.
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.
திருமந்திரம்
முதலில் கூறியதான `ஸௌம்` என்பதோடு, `ஔம், ஆம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீரீம்` என்பவையும் சேர்த்துப்பின் `க்லீம்` என்பதை மந்திரத்தின் முடிவு எழுத்தாக வைத்து, ஒவ்வொரு முறையும், `சிவாய நம` என்று என்று சொன்னால் நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.