தேவதை சூழ் உலகு


நாளொன்றின்
நீண்ட பகல் பொழுதினை
களைப்பாக்கி
கதவைத் திறக்கையில்
கவனித்து இருங்கள்.
பூங்கொத்துகளுடன்
தேவதை
அப்பாபாபாபா
எனவும் ஓடிவரலாம்.

சமூக ஊடகங்கள்

பின்னம்


புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்

நிராகரிக்கப்படவனை
நீங்கள் அத்தனை எளிதில் காண இயலாது

ஒருவேளை வானம் பார்த்து
பீடியை புகைப்பவனாக இருக்கலாம்;
மனைவி, இரு குழந்தைகளோடு நீண்ட நேரம்
இறையை வணங்க வரிசையில் காத்திருப்பவனாக இருக்கலாம்;

எவர் எவரோ வீசிச் சென்ற உணவு பொட்டலங்களை எடுத்து
சரிநிகர் சமானமாக நாயோடு உண்ணுபவனாக இருக்கலாம்;
அங்காடியில் விலைகளைப் பார்த்து பொருள்களை
அதனதன் இடத்தில் வைப்பவனாக இருக்கலாம்;

கருமை நிற மேனி கொண்டு,அழுகிய உடலோடு
காலம் கடத்துபவனாக இருக்கலாம்;
மனைவியின் கண்களைப் பார்த்து பேசியபடி
கடற்கரையில் பட்டாணி உண்பவனாக இருக்கலாம்;

மதுபானக் கடைகளில் தனித்து இசையைத் தவிர்த்து
மதுகோப்பைகளை நீண்ட நேரம் உற்றுப் பார்பவனாக இருக்கலாம்;
இருளினை உள்வாங்கி பேரொலியையும் பேரொளியையும்
சிந்திப்பவனாக இருக்கலாம்;

நிராகரிக்கப்படவனை நீங்கள் காண இயலும் கணத்தில்
அவனிடம் இருந்து நீங்கள் பெறுவதற்கு
பேரன்பு அன்றி வேறொன்றுமிராது.

சமூக ஊடகங்கள்

சாட்சியங்கள்

புகைப்படமும், தலைப்பும் : திரைப்பட இயக்குநர் : திரு. ஐயப்ப மாதவன்

நிசப்தமும் பேரொலியும் ஆன
இரவொன்றை கடக்க முற்படுகிறேன்
தன்னை வெளிக்காட்டாது
வெளிப்படுகின்றன உருவங்கள்.
ஒன்று பலவாகி, நூறாகி
கோடி ஆகின்றன.
ஒவ்வொரு சிறு பிரபஞ்சமும்
அசைவு கொள்கிறது
அசையும் பிரபஞ்சங்களில்
பிம்பங்கள் தோன்றுகின்றன.
காற்றோடு கலக்கிறது ஒலிகள்
‘கொஞ்சம் இருங்க, இன்னும் கொஞ்ச
நேரத்தில அது வெளில வந்துடும்,
காப்பி சாப்பிடுறீங்களா?’

சமூக ஊடகங்கள்

யாசிக்கும் எண்ணம்

புகைப்படம் : திரு.ஐயப்ப மாதவன் - திரைப்பட இயக்குனர்

கொடுத்து சிவந்தவனுக்கு
யாசிக்கும் எண்ணம் தோன்றியது
தன் விருப்பம் அறிவித்தான்
தேவர்களும், ரிஷிகளும்
சித்தர்களும்
தெய்வங்களும் தயக்கம் காட்டினர்.
‘மாற்ற இயலா மாயை புகுதல் என்ன நியாயம்’ என்றனர் தேவர்கள்
‘இருமை இல்லாதவன் யான்’ என்றான்
‘தங்களே இப்படி நாடகம் நடத்தவேண்டுமா’
என்றனர் ரிஷிகள்.
‘யானும் கூத்தன் தானே’ என்று
விடை பகர்ந்து புன்னகை பூத்தான் மாயன்
தங்களை எப்படிப் பிரிவோம்’ என்றனர் சித்தர்கள்
‘வடக்கு நோக்கி வந்து வாழ்த்துவோம் யாம்’
என்றான் விமலன்
கணப் பொழுதினில்
எல்லோராலும் விலக்கத் தக்கவனாகி
விரும்பி யாசகம் துவங்கினான்.
‘என்னம்மா ஆயிற்று அவருக்கு’ என்று கேள்வியுடம்
மறைந்தனர் தாயும் ஒரு குழந்தையும்;
‘யேய், பிச்சைக்காரா, வழிவிடு’
வார்த்தையில் கனல் எழுப்பி புறம்
புகுந்தான் ஒருவன்;
‘கவலை அற்று இரு, கையில் பொருள் விழும்’
என்றான் முடவனொருவன்;
‘நல்லா தான இருக்க,
உழைக்க என்ன கேடு’என்று
உரை பகன்று பிரம்பு வீசினான் ஒருவன்
பின்னொரு பொழுதுகளில்
பிரபஞ்ச உயிர்களில் உறை காலங்களில்
வடு மாறாமல் இருந்தது.

சமூக ஊடகங்கள்

முக்தி பவன்

நீண்ட நாட்களுக்கு பிறகு
அமைகிறது உனக்கும் எனக்குமான சந்திப்பு.
உன் பாதத்தை தொட்டுச் செல்லும் ஆடைகள்
ரத்தம் சார்ந்த நிறமாய் இருக்கிறது.
சுடர் தரும் விளக்கின் ஒரு புறத்தில் நீயும்
மறு புறத்தில் நானும்.
மெல்லிய பூங்காற்று நம் இருவருக்கும் பொதுவாய்.
ஏன் இந்த விலகல்என்கிறேன்.
எது விலகல்என்கிறாய்.
என்னை உன்னிடத்தில் தர நினைக்கிறேன்என்கிறேன்
நீரில் இருந்து நீர் பிரிந்தால் அலை
எதிர்முகமாய் எனில் கடல்என்கிறாய்.
நாம் இப்போது கடலாகிவிட்டோம்என்கிறாய்
மயக்கம் தரும் சம்மங்கிப் பூவின் வாசம்
காற்றில் கரைகிறது இருவருக்கும் பொதுவாய்.
பிறகு

காலம் உறைந்து நிற்கிறது எவரும் அறியாமல்.

*முக்தி பவன்காசியில் இருக்கும் ஒரு Lodge ன்  பெயர். தன் விருப்பமுடன் இறக்க விருப்பம் உள்ளவர்கள் 5 நாட்கள் மட்டும் இங்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள். 5 நாட்களுக்குப் பிறகு உயிர் இருப்பின் Lodge ஐ விட்டு வெளியேறி விடவேண்டும்.



சமூக ஊடகங்கள்

முகிழ்தல்

ஒரு விதை
விருட்சமாகும் தருணமொன்றில்
எவரும் அறியாமல்

இடம் பெயர்ந்து இருந்தது காற்று.

* முகிழ்தல் – தோன்றுதல்
புகைப்படம் : Bhavia Velayudhan

சமூக ஊடகங்கள்

அமையும் பேரமைதி

யாரும் அறியா தருணமொன்றில்
நீ உனக்கான நடனத்தை துவங்குகிறாய்.
தாய் பசுவைத் தொடரும்
கன்றாக உன்னைத் தொடர்கிறேன்.
நீ வியப்பு காட்டுகிறாய்
நான் வியப்புறுகிறேன்.
நீ கோவம் கொள்கிறாய்
நான் தவிக்கிறேன்.
நீ கருணை செய்கிறாய்
என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
நீ குற்சை செய்கிறாய்.
நான் அழுகிறேன்.
நீ சாந்தம் கொள்கிறாய்
நான் அமைதியாகிறேன்.
நீ சிருங்காரம் காட்டுகிறாய்
நான் வலிமை பெறுகிறேன்.
நீ அச்சம் கொள்ள வைக்கிறாய்.
நான் மறைந்து கொள்ள இடம் தேடுகிறேன்.
நீ வீரம் காட்டுகிறாய்.
நான் எதிர்க்கிறேன்.
நீ புன்னைக்கிறாய்.
கணத்தின் தொடக்கத்தில்
நான்அழிந்திருந்தேன்.
*குற்சைஇழிவுச்சுவை
நவரசங்கள் முன்வைத்து  – ஒன்பது வகையான பாவங்கள்.

புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்

மெருகேறும் மௌனம்

செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல.
பூக்களை சுமந்து செல்லும் மணம்
நகரும் வரை காத்திருக் வேண்டும்.
அவைகளை தழுவ வரும் தேனீக்கள்
செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
புற உலகின் வளர்ச்சிக்கு சமமான
அக வேர்களையும்
வேரின் வேர்களையும் அவைகளின் முழு வடிவம்
காணும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறப்பு கொள் இலைகள்
வெளிர் பச்சை நிறம் மாறும் வரை
காத்திருக்க வேண்டும்.
நேற்று வண்ணம் சுமந்த பூக்கள்
இன்று வேரில் விழுந்து கிடக்கும்
காரணம் காண காத்திருக்க வேண்டும்.
அறிந்து கொண்ட பின்னே அறியமுடியும்
செடியினில் இருக்கும் பூக்களை பறித்தல்
அத்தனை எளிதான செயல் அல்ல என்று.

புகைப்படம் : Vinod V

சமூக ஊடகங்கள்

சூன்யம் பயணக் குறிப்புகள்

என்னின் பிரதியாக
எனக்குள் என்னில் இருந்து,
மாயையின் சாயலாக நிழல்.
ஏற்றம் கொள்ளும்;
கண்ணில் பட்டு காலில் விழும்;
மாற்றம் கொண்டு இயல்பு மாறும்;
தருணம் ஒன்றும் தேவையில்லை
தானே தொடர.
தானும் சூன்யமாகும் தருணத்தில்
நேர் கோட்டில் பயணிக்கும்
சூன்யமும்.

நிழலும் புகைப்படமும் :  Sundar

சமூக ஊடகங்கள்

ஆர்த்த பிறவி

பொம்மைகளுக்கு ஏது தனி வாழ்வு?
ஆட்டுவிப்பவன் இருக்கும் வரையில்
அனு தினமும் ஆடும் பொம்மைகள்.
கயிறு அறுபட்ட பொம்மைகள்
தனித்து வீதி அடையும்.
நாளின் பிற்பகுதியினில்
களிமண்ணில் இருந்து உயிர் பெறும்.
கலைகின்றன பொம்மைகளின் வேஷங்கள்;
கலைகின்றன பொம்மைகளின் கனவுகள்.
நிஜம் தேடும் நித்திய வாழ்வு;
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
மீண்டும்
தேடல் தொடங்கும்;
தேடல் முற்றுப் பெறும்
பிறிதொரு நாளில்
அனைத்திற்கும் பிறகும்
நிலைபெற்றிருக்கும் பிரணவாகார ஒலி.
மௌன நாதத்தில் ஒடுங்கும் மனமும்.

புகைப்படம் :  Karthik Pasupathi
*ஆர்த்த பிறவி துயர் கெட – திருவாசகம்

சமூக ஊடகங்கள்

புனைவுகளின் அரிதாரங்கள்


ஆதியின் நாள் ஒன்றில்

பிறப்பொன்று நிகழ்ந்தது உயிருக்கு.
நிர்வாணத்தின் தன்மை அறியாது
தினமும் வீதியினில் விளையாடிது அக்குழந்தை.
எவரும் அறியா இரவுப் பொழுதில்
வீதியினை நனைத்தது மழையொன்று.
நிகழ்வறியாது விளையாட்டினை
தொடர்ந்தது அக்குழந்தை.
தொலைவு செல்லும் வாகனமொன்று
வீதி வழி சேற்றை
வாரி இறைத்துச் சென்றது அக் குழந்தைமேல்.
பெருங்கோபமுடன் மழலையில் கோபச்
சொற்களை வீசியது.
பின் தொடரும் வாகனங்களும்
தொடர்ந்தன அந் நிகழ்வை.
பிறிதொரு நாளில்
சொற்கள் அற்று இருந்தது அக்குழந்தை

உடலெங்கும் சேற்றின் படிமங்களை வாங்கியபடி.

புகைப்படம் : சித்திரம் நிழற்படம்

சமூக ஊடகங்கள்

உறு பொருள்


என்னை முழுவதுமாய் அறிந்தாலும்
விளையாட்டாய் ஆரம்பிக்கின்றன வார்த்தைகள்
சொல் ஒன்றில் விஷம் ஒன்றை ஏற்றி
இதயத்தில் நுழைக்கிறாய்.
கடக்கும் காலமொன்று
கட்டளை இடப்பெற்று கட்டப்படுகிறது.
உனக்கான நாள் ஒன்றில்
மீன்களால் உண்ணப்பட்டு
காத்திருக்கும் எச்சங்களை
கைகளில் எடுத்துக் கொள்.
தேவைகள் அற்று கடலால் வீசி எறியப்பட்ட
பொருள்களில் எனக்கான நினைகளும் இருக்கலாம்.
இரண்டும் இணையும் தருணங்களில்
உனக்கான கண்ணீரில்

முழுமை அற்ற மரணத்தில் முழுமை அடைவேன்.

* புகைப்படம் :  Karthik Pasupathy* உறு பொருள் – தியானிப்பவர்க்கு வந்து உறுவதாகிய பரம்பொருள். – திருமந்திரம் – 4ம் தந்திரம். 952 

சமூக ஊடகங்கள்

கூடு அடைதல்

தனித்து பறக்கும் பறவை ஒன்று
கானகத்தின் இருளில்
தன் குரலில் ஒலினை மீட்டு எழுப்பி
தன்னை விட்டுச் சென்றது.

புகைப்படம் : Gayu Venkat

சமூக ஊடகங்கள்

சளம்

கடந்த காலங்களின்
கடைசி கட்டங்களில்
உயிர் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது.
தேகம் மாற்றம் கொள்ள ஆரம்பித்தது.
வசந்தங்களின் சாயல் அற்று
வயதானவள் ஒருவள் வருகிறாள்.
யார் நீஎன வினவுகிறான்.
உன்னின்சொல் அம்புகள் வாங்கியவள்
திருப்பித் தர வந்திருக்கிறேன்என்கிறாள்.
இத்தருணத்திலாஎன்கிறான் அவன்
இதுவே தருணம் என்கிறாள்அவள்.
யாரும் அறியா சொற்களை வீசி எறிகிறாள்
அவன் கண்கள் பனிக்க துவங்கின.
மீண்டும் தேகம் மாற்றம் கொள்ள ஆரம்பித்தது.
மீண்டு வந்த உயிர் ஒன்று
தன் சொற்களை திருப்பி தர யத்தனிக்கிறது.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விரைவாக பல மாற்றம் அவ்வுயிரில்.
வரிசை குறையாமல் வருகிறது பெருங் கூட்டமொன்று.
விலகிச்செல்லுங்கள்என்று கட்டளை இட்டு
தன் மடியினில் இருத்திக் கொள்கிறது மூத்த உயிரொன்று.
துடித்த உயிரின் கைகள் கூப்புகின்றன.
காசி பயணத்தின் மந்திரங்கள் உயிரின் காதுகளில்.
யாவற்றையும் கவனியாது
வெய்யில் பார்த்து உறங்கிகொண்டிருந்தது

கருமை நிற நாயொன்று.

சளம் – துன்பம், சளத்தில் பிணிபட்டு – கந்தர் அலங்காரம் பாடல் – 7
புகைப்படம் : Vinod V

சமூக ஊடகங்கள்

பொன்னான மந்திரம்

எச்சில் பட்டு தெறிக்கும்
வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகிறதோ இல்லையோ மனம்
மகளின் மௌனங்களுக்கு மட்டும்.

*பொன்னான மந்திரம் – பொன் பொன் போன்றது. வாயால் ஓதக் கூடா மந்திரம். திருமந்திரம் – 4ம் திருமுறை – 906
புகைப்படம் : அபிதா சுந்தர்

சமூக ஊடகங்கள்

ஆதி ஆகுதி

தன் மீது அமரும்
வண்ணத்துப் பூச்சியின்
வலிஅறிந்து இருக்குமா அம்மலர்கள்

புகைப்படம் :  SLKumar

சமூக ஊடகங்கள்

மௌனக் கண்ணீர்

உயிர் வாழ்தலில்
மரணம் என்பது இயற்கையானது அல்ல
மரணம் என்பது நிலையானதும் அல்ல
என்று தானே அறிந்த தருணமாக இருக்கலாம்.
அழும் குழந்தையினை தாய் திகட்ட திகட்ட
திட்டுகையில் அறிந்திருக்கலாம்.
இருந்து உயிர எடுக்கறத்துக்கு போய் தொலைந்திருக்கலாம்
எனும் மனைவியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
ஒட்டு பீடி கேட்கிறத்துக்கு உசிர விட்டிருக்கலாம்
எனும் நண்பனின் வார்த்தைகளில் இருக்கலாம்.
பணம் இல்லா பயலுகளுக்கு
பணக்கார சாமி எதுக்குஎன்னும் வாசகங்களில் தொக்கி நிக்கலாம்
ஒரு வேலைய உருப்படியா செய்யத் தெரியல
எனும் மேலதிகாரியின் வார்த்தைகளில் இருக்கலாம்.
நினைவுகளையும் ஏக்கங்களையும்
நித்தமும் தொலைக்கும் தருணங்களாக இருக்கலாம்.
தொக்கி நிற்கும் இளைமையின் வடிங்கங்ளை வாங்கி
கண்ணீரில் கரைதலில் இருக்கலாம்,
யாசகத்துக்கு கையேந்தி
வெற்று கைகளுடன் திரும்புகையில் இருக்கலாம்.
மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு
மீண்டும் மனிதகளுடன் கூடிக் குலாவும் காலமாக இருந்திருக்கலாம்
இன்னும் என்ன இருக்கிறது
மரணம் அறிந்து மரணம் தாண்டி
நித்தமும் உயிர் வாழ்தலில் அதீதத்தின் ருசி

புகைப்படம் :  SL Kumar

சமூக ஊடகங்கள்

மோன வசி

மழை வருவதாக கூறி
கண்ணாடிக் கதவுகளை சாத்துகிறான் தகப்பன்.
புன்னகைத்து காற்று வரவில்லை எனக் கூறி
கதவுகளைத் திறக்கிறது பெண் குழந்தை ஒன்று.
பாம்பின் வாய்ப்பட்ட தேரையாய்
காலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ரயிலின் சில நிகழ்வுகளை

புகைப்படம் :  Bragadeesh Prasanna

சமூக ஊடகங்கள்

சொல்லின் வழி மௌனம்

யாருமற்ற இரவு
உன்னையும் என்னையும்
இணைத்து வைக்கிறது.
கொஞ்சமாய் அகிலின் வாசம்
நம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது.
உடைபடும் மௌனம் உடைக்கிறேன்.
மானஸ ரூபின்யை நமஹ,
..
மகாரப் பிரியை நமஹ
பிறிதொரு பொழுதுகளில்
எந்தப் பொருளிலும் நான் இல்லை
எல்லாப் பொருள்களிலும் நீ இருக்கிறாய்.
எந்த ஒலிகளையும் நான் கேட்கவில்லை
எல்லா ஒலிகளுக்கும்  நீ காரணமாக இருக்கிறாய்.
எந்த உருவங்களையும் நான் காணவில்லை
எல்லா உருவங்களுக்கும்  நீ சாட்சியாக இருக்கிறாய்.
மூலக் கனலொன்று கனவினை உடைக்கிறது.

புகைப்படம் : இணையம்

சமூக ஊடகங்கள்

சாதக விளைவு

இழப்பதற்கு என்று வந்து
எல்லாவற்றையும்
ஏற்றப்பின் வருகிறது
ஞானத்தின் அடையாளங்கள்.
புகைப்படம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்