அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம் அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே
சிவப்பிரகாசம் – மூன்றாம் சூத்திரம் – ஆன்ம இலக்கணம் – உமாபதி சிவம்
கருத்து – ஆன்மா அறிவுடைப் பொருள் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஆன்மாவானது தானாக அனைத்தையும் அறிய இயலும் எனில் அதற்கு இந்திரியங்கள் தேவை இல்லை; அதுபோலவே ஆன்மாவிற்கு அறியும் தன்மை இல்லை எனில் இந்திரியங்கள் எதன் பொருட்டு அதனுடன் இணைத்து படைக்கப்பட்டு இருக்கின்றன; இந்திரியங்கள் சடமாவதால் ஆன்மாவுக்கு அறிவை கொடுக்காது; அனைத்தையும் அறிகின்ற ஈசன் ஆன்மாவுக்கு அறியும் தன்மையைக் கொடுப்பார் எனில் ஆன்மா இயற்கையில் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஈசன் அறிவில்லா சடப்பொருளாக இருக்க வேண்டும்; ஏனெனில் சிவன் இயல்புக்கு மாறாக உயிறற்ற பொருள்களுக்கு உயிர் தன்மையை அருள மாட்டார். எனவே ஆன்மாவானது இயற்கையில் அறிவுடைய பொருள் ஆகும்.
அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன் சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம் ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண் மாணவக என்னுடனாய் வந்து
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
கருத்து – சிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.
பதவுரை
நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.
விளக்கஉரை
அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
நிகளம்-விலங்கு
சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.
திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்
கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.
பதவுரை
இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும் இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.
கருத்து – ஈசனால் படைக்கப்பட்டதே பிரபஞ்சமும் இயக்கமும் என்று கூறி அதை அளிப்பது பஞ்சாட்சரமே என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
அண்ணல் என்று போற்றப்படும் கடவுளாகிய சிவனால் தோற்றுவிக்கப்பட்டதே இரகசியங்களை உள்ளடக்கியதும், மறை பொருள் ஆனதும் ஆன அருமறைகளும். காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும். இவைகள் அஞ்செழுத்தில் அடங்கும்; வேதாகமங்களும், ஆதி புராணங்கள் அனைத்தும் பரமேசுவரன் அருளிய அரிய பஞ்சாக்கரதில் அடங்கும்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமானதும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகின்றதுமான ஆனந்தத் தாண்டவமாகவும், முப்பத்து ஆறு தத்துவங்களைக் கடந்து மோனாந்தமாகவும், பரமுக்தியினை அளிப்பதும் பஞ்சாட்சரமே.
கருத்து – அந்தக்கரணங்கள் பற்றியும் அவற்றின் செயல்பற்றியும் உரைத்தது.
பதவுரை
அந்தக்கரணம் என்பதைப்பற்றி உரைக்கிறேன் கேள். அவைகளின் முறைகளையும் சொல்கிறேன் கேட்பாயாக. மனம், புத்தி மற்றும் அகங்காரம் ஆகியவற்றுடன் சிந்தை சேர்ந்து அந்தக்கரணம் ஆகும்; பற்றிய பொருளினை நிச்சயித்து , பல காலம் அது பற்றி அறிந்து அதைப் பற்றி சிந்திக்கும் உணர்வினை மனம் என்றும், பற்றிய பொருளினை புத்தி எனவும், அதை நிச்சயித்து வரையறுப்பதை அகங்காரம் எனவும், அதுபற்றி பலமுறை அபிமானித்து எழுவதை சித்தம் என்றும் அதுவே சிந்திக்கும் என்றும் அறிவாயாக.
விளக்க உரை
கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, உள்ளே இருக்கும் அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாததே அந்தக்கரணம்
மனம் ஒன்றைப்பற்றி நிற்கும்; ஆங்காரம் ஒருமைப்படுத்தும், புத்தி நிச்சயிக்கும், சங்கற்பம் வேறுபடுத்தி காட்டும்; இவைகள் கோர்வையாக நிகழ்வதால் அனைத்தும் ஒன்றெனவே தோன்றும்; ஒன்றின் செயலை மற்றொன்று செய்ய அறியாததால் அந்தக் கரணங்கள் உயிர் ஆகாமையும், மனம், புத்தி சித்தம், அகங்காரம் என்னும் நான்கையும் ஆன்மா எனும் அந்தக்கரணவாதிகளின் கொள்கையினை மறுத்து மறுதலித்து மெய்கண்டார் கூறுவது ஒப்பு நோக்கி அறிந்து கொள்க.
அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே
ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றவற்றின்-வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண்
திருநெறி 6 – திருக்களிற்றுப் படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
கருத்து – வினைப்பட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதல் பொருட்டு சிவன் உருவம், அருவம், அரு உருவம் கொண்டிருந்து அருளும் முறை உரைக்கும் பாடல்.
பதவுரை
சங்கார காலத்திலே உயிர்கள் ஒடுக்கம் அடையும் போது அதற்கு காரணமாக இருந்து அதன் முடிவாக இருக்கிறான்; உலகம் படைக்கப்படும் காலத்தில் தான் முதல்வனாக இருந்தும் அதனில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறான்; எக்காலத்திலும் மாறாத எண்குணங்களான தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் ஆகியவை கொண்டும் இருக்கின்ற போதிலும் அவற்றில் இருந்து வேறுபட்டவனாக அதன் உடனாகவும், உருவம் கொண்டும் என்றும் வினைபட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதலை கடனாக உரியவனாகவும் இருக்கிறான்.
விளக்கஉரை
சிவன் உலகத்தோடு ஒன்றாய் வேறாய், உடனாய் இருக்கின்றான் என்று தொன்றுதொட்டுக் கூறிவருதலும், முதல்வனாகிய ஈசனிடத்து இம்மூன்று தன்மைகளும் ஒருங்கு கூடியிருத்தல் தெளிவாகும்; சங்கார காலத்திலே உருவமின்மை கொண்டும், சிருட்டி காலத்திலே உருவம் கொண்ட அட்டமூர்த்தியாயும், இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக் கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள் வடிவு கொண்டு கர்த்தாவாகி எக்காலமும் இவ்வாறு நிகழ்த்துதலை முறைமையாகக் கொண்டிருப்பான் எனும் விளக்கமும் பெறப்படும்.
திருநெறி 2 – பரபக்கம் – உலகாயதன் மதம் – சிவஞான சித்தியார்
கருத்து – உலகாயர்கள் கொள்கையினை உவகை காட்டி விளக்கி அதை மறுதலித்து ஆன்மா உண்டு எனவும், அதை இயக்க கர்த்தா உண்டு எனவும் கூறும் பாடல்.
பதவுரை
இவ்வாறாக பூதக்கூட்டத்தினால் உயிர் உறையும் உருக்கள் வாயுக்களுடன் சேர்ந்து முன் ஜென்மங்களில் செய்த கர்மத்தால் பின் தொடரும் என்றும் இதை அனுபவிக்க ஆன்மா உண்டு எனவும் இதனை கூட்டுவிப்பவன் ஆகிய ஒரு கர்த்தா உண்டு எனவும் சமயவாதிகள் கூறுவார்கள். இதனை மறுத்து சமயவாதிகளை மயக்கச் உலகாயர்கள் கூறுவது என்னவெனில் ஒப்புமை செய்ய இயலாத மலடி பெற்ற மகன் ஒரு முயலின் கொம்பிலே ஏறி ஆகாயத்தில் பூத்த பூவைத் தவறின்றிப் பறித்தான் எனும் தன்மையை ஒத்தது.
விளக்கஉரை
உலகாயர்கள் – பூதமே தெய்வம், பூதக்கூட்டத்தின் குறைவே கன்மம், பூதக் கூட்டத்தின் நிகழும் உணர்வே ஆன்மா; இவ்வாறு அன்றி வேறு தெய்வமும் கன்மமும் ஆன்மாவுமில்லை
கருத்து – வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்
பதவுரை
முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.
விளக்கஉரை
தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே யவாயமற நின்றாடு வான்
பதப்பிரிப்பு
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன் சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே அவாயமற நின்றாடு வான்
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.
பதவுரை
எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக; அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.
விளக்கஉரை
எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின் எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்
யோக மரபினை முன்வைத்து, எட்டு ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் (மெய்கண்ட சாத்திரம் – சைவ சித்தாந்தம் )
கருத்து – ஈசன் உலகுயிர்த் தொகுதியாகி, அவைகளே தானுமாகி அதில் இருந்து விலகியும் இருக்கும் முத்திறத்தினை விளக்கும் பாடல்.
பதவுரை
சங்காரம் எனும் மூலகாரணத்தில் அனைத்தையும் ஒடுங்க செய்தும், உலக அழிவு செய்தும், தானே அனைத்தும் சாட்சியாக இருந்து முழு முதற் பொருளாய் இருப்பவனும், படைப்பு ஆகிய சிருஷ்டி கரணத்தில் சக்தியுடன் கூடி இரண்டாகியும், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையு உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை ஆகிய எண் குணத்துடன் கூடியும், சிருஷ்டியில் குறிப்பிடப்பட்ட உலக உயிர் தொகுதியுடன் பிரிக்க இயலாதவாறு கூடியும், உலக உயிர்களின் தன்மை தனக்கு எவ்வகையிலும் தன்னைச் சேராதவாறு தனித்து இருப்பவனும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், அதனை அறிவிக்க உதவும்கால் உயிர்களோடு ஒன்றாகியும், உடனாகி இருக்கும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் ண்டிருக்கின்றான் அம்முதல்வன்; அஃது அவனது இயல்பு என்பதனை மாணவனே கண்டுணர்வாயாக.
விளக்கஉரை
சத்தியிடமாய் நின்று இருக்கும் காலத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் சூரியன், திங்கள் ஆன்மா எனும் எண்பேருருவினாகி நிற்கின்றான் எனும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. சிவனின் குணங்களில் எண் குணம் என்பது பிரதானமானதால் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
ஈசனுக்கும் உலக உயிர்த் தொகுதியுடன் கூடிய தொடர்பு பேதம், அபேதம் பேதா பேதம் என்னும் மூன்று வகைப்படும். ‘முதலொன்றாய், மாறாத வெண்வகையாய்‘ எனும் வரிகளால் அபேத நிலையினையும், ‘ஈங்கிரண்டாய்‘ எனும் வரிகளால் பேத நிலையினையும் ‘மற்றிவற்றின் வேறாய், உடனா யிருக்கு முருவுடைமை‘ எனும் வரிகளால் பேதா பேத நிலையும் அறியப்படும்
கருத்து – சரீரம் பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருப்பதை விளக்கும் பாடல்
பதவுரை
பூமி எனும் பிருதிவியானது நாலு கோணம் கொண்டதாக இருக்கும்; நீர் எனும் அப்புவானது அரைச் சந்திரனைப் போல இருக்கும்; தீ எனும் தேயுவானது மூன்று கோணம் கொண்டதாக இருக்கும்; காற்று என்றும் வாயு என்றும் அழைக்கப்படும் கால் அறுகோண வடிவமாக இருக்கும்; ஆகாயமானது வட்ட வடிமாக இருக்கும்; ஆன்மா இவை எல்லாவற்றுடன் கூடி சரீரத்திலும் பொருந்தி நிற்பதால், இந்த சரீரம் எனப்படும் உடலானது பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டு இருக்கிறது.
விளக்கஉரை
உறுதியாதல், நிகழ்தல்
உறுகாய – சேர்ந்திருக்கும் உடல்
கால் – 1. மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. 2. ஒன்றை ஈடாக பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு; 3. காற்று 4. நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி. 5. காடு, கான், கானகம், அடவி 6. பிறப்பிடம், தோன்றும் இடம், தோற்றம் 7. வமிசம், இனமுறை 8. கறுப்பு நிறம் 9. இருள் 10. வினையெச்ச விகுதி 11. ஏழனுருபு 12. உருளை, சக்கரம், ஆழி 13. வண்டி 14. முளை 15. பூந்தாள் 16. மரக்கால் 17. அடிப்பகுதி 18. காலம், பொழுது 19. குறுந்தறி 20. வழி 21. மரக்கன்று 22. மகன் 23. வலிமை 24. வாய்க்கால் நீர்க்கால் 25. எழுத்தின் சாரியை 26. வாதம் 27. காம்பு 28. தடவை (முறை) 29. கழல் 30. சரண் 31. இயமன் 32. பிரிவு 33. மழைக்கால் 34. நடை 35. சிவபெருமான் ஆன்மாக்களைத் தம்முள் ஐக்கியமாக்கிக்கொண்ட தலம் 36. கிரணம் 37. வெளியிடுதல்
அம்மையாய், அப்பனாய், உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாய். தம்மால் படைக்கப்பட்ட உலகத்தின் தோற்றத் திற்கும், ஒடுக்கத்திற்கும் நிலைக்களமாய் என்பன அத்திருவுருவத்தின் பெருமைகளைப் பற்றி கூறும்.