அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 2 (2020)


பாடல்

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே

கந்தர் அலங்காரம் – அருணகிரி நாதர்

கருத்து – முருகப் பெருமானிடத்தில் ஐம்பொறிகள் வழி செல்லும் அவாவினை அறுத்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அமரர்கள் ஆகிய தேவர்களின் துன்பம் நீங்குதல் பொருட்டு, வஞ்சனையும் கொடூரமும் பொருந்திய சூரனை,அவனுடைய  கார் மேகம் போன்ற கரிய நிறமுடைய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான கூலாயுததை செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அவனை அழித்தவரே! ஐம்புலன்களாகிய ஐவரும், தேவரீரின் திருவடிப் பெருமைகளை ஆராய விடமாட்டாதவர்களாகவும், உலகின் ஒரே பரம் பொருளாகிய தேவரீரை நினைக்க விடமாட்டாமலும், பூசிக்க தக்க மலர்களால் தங்களை அர்ச்சித்து, தேவரீரின் மலர் போன்ற திருவடிகளைச் சென்று அடைய விடமாட்டாமலும் செய்கின்றனர்; அடியேன் என்ன செய்வது?

விளக்கஉரை

  • உய்தல் – உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல், தப்புதல்
  • கட்டாரி – குத்துவாள், வாள், சூலம், எழுத்தாணிப்பூண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 1 (2020)


பாடல்

அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

கருத்து – சிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.

பதவுரை

நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.

விளக்கஉரை

  • அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
  • சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
  • நிகளம்-விலங்கு
  • சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 30 (2020)


பாடல்

பிலந்தரு வாயினொடு
   பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
   பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
   நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
   கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான  வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.

விளக்கஉரை

  • பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
  • நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
  • நிலந்தரு –  மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 22 (2020)


பாடல்

மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து
ஆவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே 

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து – பாவியாகிய தன்னை விடுவிக்கும் எண்ணம் உண்டோ என வினவும்  பாடல்.

பதவுரை

கருங்குவளை மலரினை ஒத்த மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின் பாகனே! உன்னுடனே பொருந்தி இருக்கும் அடியார்களில் ஒருவனாக நானும் உண்மையிலே விரும்பி உன்னை அடைந்து உயிரும், அதற்கு ஆதாரமான உடம்பும், நான் எனது என்னும் பற்றுக்களும் சிறிதுமில்லாது அற்றுப்போகும்படி செய்து, உன்னுடைய பெரிய திருவருளால் எப்பொழுதும் நிலைபெற்று இருக்கும் பேரின்பமாகிய பழையகடலை கடக்க பாவியாகிய எனக்கும் உலகியலில் இருந்து அறுதல் உண்டாகுமோ?

விளக்க உரை

  • காவி – கருங்குவளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 21 (2020)


பாடல்

தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்
பொன்னி வளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்
ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ
சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!
மனத்திலே பகை ஆகி உதட்டிலே
உறவாகி மடிவர் தாமே

தண்டலையார் சதகம்

கருத்து – பெரியேர்களுக்கும் சிறியோர்களுக்குமான வித்தியாசங்களை உணர்த்தும்  பாடல்.

பதவுரை

பொன்னி எனும் காவிரி நதி பாய்ந்து வளம் தழைத்ததுமான நாட்டில், செல்வத்திலே மிகுந்து இருக்கக்கூடியவரான தண்டலையார் இருக்கும் இடத்தில், சொல் எனப்படுவதான வாக்கும், மனம் ஆகியவை எல்லாம் ஒன்றாகி தம் காரியங்களைச் செய்வர்; சினக்கொண்டு சிறுமை படைத்தவர்களாக இருக்கக்கூடிய சிறியோர்களால் செய்யப்படும் காரியங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்; அதுமட்டுமல்லாமல் மனதில் பகை கொண்டு அது வெளியே தெரியாமல் உதட்டளவில் உறவாடி தாமே மடிவார்கள்.

விளக்க உரை

  • ‘மனத்திலே பகை ஆகி’ எனும் பழமொழியை விளக்கும் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 20 (2020)


பாடல்

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும் (கழுத்துக்குக் கீழ்). புறக்குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது போல் இந்த உடலில் புலன்கள் எனும் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீசுவது போல் சிவபெருமான் அம் மீன்களைச் செம்மைப்படுத்தச் செம்பரவனாகத் தோன்றி வலையை வீசி அருளினன்; குளத்தில் இருக்கும் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டு அவற்றின் துள்ளல் அடங்கியது போல் சிவன் தன்னுடிய ஒப்பற்றதாகிய கருணையினால் தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்; ஆதலால் நாமும் நம்முடைய ஐம்புலப்புலன் இன்பம் எனும் நுகர்ச்சி துன்பத்தினின்று நீங்கிச் சிவஇன்ப நினைவில் ஆழ்ந்தோம்.

விளக்க உரை

  • தூங்குதல் – ஆழ்தல்
  • அழுந்தல் – ஐம்புலன் அடக்குமுறைமை
  • பரவன்: பரதவன்
  • ஏதம் – துன்பம்
  • ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் – ஆகவே மனித உயிர்க்கு இடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 19 (2020)


பாடல்

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் – ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – சிவதத்துவம் ஆகிய சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகியவற்றில் சிவசக்தி தத்துவங்கள் செயல்படும் முறையை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவதத்துவங்கள் ஐந்தினில் ஒன்றானதும், இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களில் ஒன்றாகி சிவதத்துவத்தின் பகுதியானதுமான சுத்தவித்தையில் கிரியையின் செயல்பாடுகள் குறைந்து ஞானம் மிகுந்து இருக்கும்; காலத்தால் பகுக்க இயலாத பழமையானதான ஈச்வரத்தில் ஞானம் குறைந்து செயலால் செய்யப்படுவதும், சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபாடு செய்வதும் ஆன கிரியை உயர்ந்தது நிற்கும்; சிவ சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படுவதாகிய சாதாக்கியத்தில் ஞானமும் கிரியையும் சம அளவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்; சக்தி தத்துவத்தில் கிரியையை முன்வைத்தும் சிவதத்துவத்தில் அவற்றுக்குக்கு ஆதாரமான ஞானம் முன்வைத்தும் இருக்கும்.

விளக்க உரை

  • சைவ நாற்பதங்களின் வரிசையில் கிரியை, ஞான மார்கங்களின் செயல்படு முறை விளக்கங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 14 (2020)


பாடல்

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

ஸ்ரீ வாராஹி மாலை

கருத்து – வாராஹி அன்னையின் உக்ர ஸ்ரூப தியானம் என்ன விஷயங்களைச் செய்யும் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

அன்னை வாராஹியானவள் கலப்பையை தன்னுடைய கரங்களில் ஆயுதமாக் கொண்டு இருப்பாள்;  என்னுடைய எதிரிகள் என்பவர்களை நெருப்பின் பொறி எழுமாறு தீயில் இட்டு தீய்த்து அவர்களை இல்லாமல் செய்து, அதன்பின் தலைகளை நெரிப்பாள்; தலை,  பின்பகுதி ஆகிய மண்டை மற்றும் மூளையினைத் தின்று பகைவர்களின் நீண்டதான உடலை உரிப்பாள்; படுக்கை போன்று கீழே வீழ்த்தி அந்த உடலை உலர்த்துவாள்.

விளக்க உரை

  • தன் அடியவர்கள் என்பதற்காக எதிரிகளை துவசம் செய்யும் அன்னையின் முறைகளைக் கூறுவது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 24 (2020)


பாடல்

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப்  பாடல்.

பதவுரை

மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்;  இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு  கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?

விளக்க உரை

  • காடுகாள் – காடுகிழாள், பழையோள்,  காளி; ‘காடுகள்’ –  பிழைபட்ட பாடம்
  • இருவர் இருக்க, மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினவியது; இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ என்பதும் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 23 (2020)


பாடல்

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே

ஸ்ரீ வாராஹி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து – வராஹி அன்னையானவள் பகைவர்கள் என்று கருதுபவர்களை நாசம் செய்வது குறித்து எழுதப்பட்டப்  பாடல்.

பதவுரை

வராஹி அன்னையானவள், மனம், வாக்கு காயம் ஆகியவற்றால் ஒன்றி முத்தி நிலையை அடுத்து நிற்கும் மெய்யில் சிறந்த அடியவர்களை பணியாதவர்களை பகைவர்கள் என்று கருதி மனதாலும், உடலாலும் கடும் கோபம் கொண்டு, அவர்களது தலை கரத்தில் ஏந்தும்படி செய்து, பகைவர்களது கொழுப்பு மிகுந்த உடலினை கடித்து குதறி, துர்நாற்றம் வீசும்படி செய்து, வச்சிரம் போன்ற முகத்தால் குத்தி, வாயால் கடித்து அதில் இருந்து வரும் இரத்ததினை குடிப்பாள்.

விளக்க உரை

  • பகைவர்கள் தடுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 22 (2020)


பாடல்

தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு
தன்னுரவுயில்லாத சமயத்தோரை
உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை
உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை
நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை
நாதாந்த வேதமதைக் காணார் தன்னை
சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம்
சோதிமய மானசிவ ஞானம் பாரே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – முக்தியினை விரும்பவர்களால் விலக்கப்பட வேண்டியவர்கள் என்போர் பற்றி அகத்தியர் கூறும் பாடல்.

பதவுரை

முக்தியினை விரும்பவர்கள், தன்னுடன் உறவாக இருக்கும் ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர்களையும், உள்ளுக்குள் உரைந்து நிற்கும் தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்களையும், உத்தமான சிவசக்தி பதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர்களையும்,  நல்ல உணர்வுகளைத் தரும் நாயகனை விடுத்து தன்னையே நாயகன் எனவும் முக்கியமானவன் எனவும் கருதுவோராகிய நல்லுணர்வு இல்லாதோர்களையும், நாதாந்த வேதம் எனப்படுவதாகிய ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைய விருப்பம் இல்லாதவர்களையும் சொல்லில் வைத்து பேசி காலத்தை வீணாக்காது அவர்களைத் தள்ளி சோதி வடிவமாக இருக்கக் கூடியதான சிவ ஞானம் பார்க்க வேண்டும்.

விளக்க உரை

  • மேலே கூறப்பட்டவர்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்கள் என்பதால் இவர்களுடன் சேர்வது முக்தியினைத் தடைப்படுத்தும்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 21 (2020)


பாடல்

ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கான
நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற்
கொடுமை பற்றி நிற்பர் அந்தோ
தேசு பழுத்தருள் பராபரமே நிராசை
இன்றேல் தெய்வமுண்டோ

தாயுமானவர் பாடல்கள்

கருத்து – ஆசையே எல்லா அழிவுக்கும் மூல காரணம் எனவும் அதனால்  மோட்சத்தை அடைவதற்கான விருப்பமும் இல்லாமல் இந்த மாயையிலேயே மூழ்கிக் கிடப்பர் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஒளி நிறைந்த அருள் பழுத்த பராபரமே! ஆசை என்று உருவமாக சொல்லப்படுகிற பெரிய காற்றினில் அலையும் இலவம் பஞ்சைப் போல மனமானது அலையும் காலத்தில் மோசம் நேரிடும்; இதனால் முக்தியினை அளிப்பதற்காக கற்கப்பட்ட கல்விகளும், ஞானம் பெறுவதற்காக கேட்ட கேள்விகளும் வீணாகி, முக்தி எனும் மோட்சம் அடைவதற்கான விருப்பமும் அதன் பொருட்டான சிறந்த வாசமும் நீங்கி, ஐம்புலன்கள் பற்றி நின்று அது ஏற்படுத்தும் கொடுமையான துன்பங்கள்  பற்றி கொண்டு நிற்பர்; நிறைவேராத ஆசை இருப்போர் முன்னர் எவ்வாறு தெய்வம் தோன்றும்?(தோன்றாது என்பது துணிபு)

விளக்க உரை

  • கற்றதும் கேட்டதும் – இதனை இருவிதமாக மாற்றி வாசிக்கலாம், ஒன்று ஞான வழி பற்றி நிற்க கேட்ட கேள்விகளும் அதற்கான பதில் பெற்று கற்றதும் என்று கொள்ளலாம். இரண்டாவது கற்ற வித்தையின் வழி நின்று வைகரி எனும் செவியோசை, மத்திமை எனும் கருத்தோசை, பைசந்தி எனும் நினைவோசை, பரை எனும் நுண்ணோசை ஆகியவற்றை கேட்டல் என்றும் கொள்ளலாம்.
  • தூர்ந்து – வீணாகி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி- 7 (2020)


பாடல்

காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன் றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்

கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.

பதவுரை

இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும்  இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 3 (2020)


பாடல்

வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசன் குறித்த சிந்தனைகள் அமுதமெனத் தோன்றும் என்று கூறும்  பாடல்.

பதவுரை

வெண்ணி எனும் மிகப்பழமை வாய்ந்ததான நகரத்தை மேவியவரும், சிறப்புகளை உடைய வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை கொத்தாக உடைய திருச்சடையினைக் கொண்டவரும், பிரம்ம கபாலத்தைத் திருக்கரங்களில் ஏந்தியவருமான ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்த அடியேனுக்கு அவர் குறித்த சிந்தனைகள் என் நாவினில் இனியதான அமுதமாக ஊறும்.

விளக்க உரை

  • தொல்நகர் – மிகப்பழைய நகர்
  • கண்ணித்தொத்த – கொன்றைக் கண்ணி அணிந்த கொத்தாகிய
  • தம்மை – அப்பெருமான்தமை
  • அண்ணித்திட்டு – இனித்து

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 21 (2020)


பாடல்

சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – திருமயிலாடுதுறை திருத்தலத்தின் பெருமைகளைக் கூறும்  பாடல்.

பதவுரை

ஆணவம் கொண்ட பிரம்மனின் கர்வத்தினை அழிக்க அவன் தலையினைக் கொய்து  அந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலருடைய இல்லங்களிலும் சென்று யாசித்து உண்ணும் மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனின் தோள்கள் நெரியுமாறு அடர்த்த நன்மை தருபவனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.

விளக்க உரை

  • பரம்கொள் பரமேட்டி – மேன்மையைக் கொண்ட சிவன்
  • வரையால் அரங்க – கைலையால் நசுங்க

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 19 (2020)


பாடல்

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

காமாட்சியம்மை விருத்தம்

கருத்து – பல ஜென்மங்கள் எடுத்து அன்னைத் தொழுது வந்ததால் முக்தி அருளவேண்டும் என விளிக்கும்  பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே! இந்தப் புவிதனில் அண்டஜம் எனப்படும் முட்டையில் தோன்றியும்,  சுவேதஜம் எனும்  வியர்வையில் தோன்றியும், உற்பீஜம் எனும்   விதை, வேர், கிழங்கு இவற்றில் தோன்றியும்,  சராயுஜம் எனும்    கருப்பையில் தோன்றியும் எத்தனை லட்சக்கணக்காண பிறவிகள் எடுத்து இருப்பேனோ தெரியாது; இத்தனை பிறவியிலும் உன் அருளை நினைந்து உருகி வந்தபோதிலும் உன் அருளை பெற இயலவில்லை;  உன்னை முக்காலத்திலும் தொழுது நீயே முக்தி அளிக்கத் தக்கவள் என்பதால் இனி எந்தவிதமான ஜெனமும் கொள்ளாதிருக்கும்படி கிருபை செய்து என்னை ரட்சித்து முக்தி தரவேண்டும்; அவ்வாறு இல்லாமல் வாழ்வினில் நாம் முதல் முறையாக சந்திக்கும் மனிதர்கள் போல் நீ என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா? ; பாகம் பிரியாமல் இருப்பதால் வாழ்வினில் வெற்றி பெறுவதற்காக நான் பக்தியுடன் உரைத்துச் சொன்னதான விருத்தங்கள் பதினொன்றையும் கேட்டு அதுபற்றி நீ அளிக்கும் செல்வம் கண்டு விமலர் உன்னிடத்தில் கோபம் கொள்ளப் போகிறார், ஆகவே மூத்தோர், முனி  எனப்பல்வாறு அழைக்கப்படும் அத்தனின் பாகத்தினை விட்டு வந்து என்னுடைய குறைகளை தீர்த்து வைப்பாயாக.

விளக்க உரை

  • அத்தன் – தகப்பன், மூத்தவன், மூத்தோன், குரு, முனிவன், உயர்ந்தோன், சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 18 (2020)


பாடல்

சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாச னுண்மை
தருநாத னங்குருநா தன்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருளாசிரியனே இறைவன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நம்முடைய குரு நாதன் எப்படிப்பட்டவர் எனில் நினைவு எனும் எண்ணத்தை எண்ணியவாறு நிகழ்த்தித் தரவல்லவன்; தெற்கு பகுதியாகிய கமலை எனும் திருவாரூர் தலத்தில் வாழ்கின்ற நாதன்; பக்தியை தருகின்ற நாதன்; பரவிந்து எனும் `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளதான வாக்கிற்கு நாதனாக இருக்கக் கூடியவன்; முக்தியினை அருளக்கூடிய பெரிய நாதனாகவு இருக்கக் கூடியவன்; ஞானத்தின் வடிவமாகி பிரகாசமாக இருப்பவன்; மெய் எனும் உண்மையினை தரக் கூடியவன்.

விளக்க உரை

  • கமலை – திருமகள், திருவாரூர், கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனம்
  • சித்தி – காமியப்பயன்களை அருளுவது, பக்தி – வினை முற்றுப்பெறா நல்ல தவம் உடைய உயிர்கள் எய்துவது; முக்தி – சரியை, கிரியை மற்றும் யோகங்களில் ஈடுபட்டப் பின் உயிர்கள் முக்தி அடைய இறைவன் அருளுவது; உண்மை – மெய் ஞானம்.
  • வினையுடைய உயிர்களுக்கு முக்தியே பெரிதானது என்பதால் அதனைத் தருபவன் பெரு நாதன்
  • பிரகாசம் கதிரவனுக்கானது; அஞ்ஞான இருளை நீக்குதல் பற்றி ஞானப் பிரகாசன்
  • நம் – தம் மாணக்கர்களையும் உலக உயிர்களையும் குறித்தது

 

Loading

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 2

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்.

ஒரு முறை குருநாதர் திருபரங்குன்றத்தின் உச்சியில் இருந்த ரங்கூன் சுவாமிகளை சந்திக்க குருநாதர் சென்று இருந்தார். (அப்பொழுது குரு நாதருக்கு வயது தோராயமாக 22) சுவாமிகளுக்கும் குரு நாதருக்கும் ஆன்மீக ரீதியில் நெருங்கிய தொடர்பு உண்டு. ரங்கூன் சுவாமிகள் பெரும்பாலும் பேசமாட்டார், சில நேரங்களில் மட்டும் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசுவார்

ரங்கூன் சுவாமிகள் : என்னடா செய்யிற தம்பி ?(குழந்தையின் வேறு பெயர், இன்றும் தன் குழந்தைகளை தம்பி என்று அழைக்கும் இல்லங்கள் உண்டு)
குருநாதர் : சொல்லுங்க ஐயா.

ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா.
குருநாதர் : சரிங்க ஐயா.

குரு நாதர் வந்த போது சுவாமிகள் நிட்டையில் ஆழ்ந்து இருந்தார். கூட்பிடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.கண்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் உடனே கை நீட்டப்பட்டது. கைகளில் தொடமுடியா நிலையில் சூடாக இருந்த டீயினை வாங்கி கணிக்க இயலா நேரத்தில் குடித்துவிட்டார் சுவாமிகள்.

மற்றொருமுறை

ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா
குருநாதர் : சரிங்க ஐயா.

குரு நாதர் டீ வாங்கிகொண்டு வந்த போது சுவாமிகளுக்கு இடது புறத்தில் ஒரு குரங்கும், வலதுபுறத்தில் ஒரு குரங்கும் எதிரே ஒரு நாகம் ஒன்றும் நிட்டையில் அமர்ந்து இருந்தது.

குரு நாதருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடுத்த வினாடி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருந்த குரங்கு வலது புறத்தில் இருந்த குரங்குடன் சேர்ந்து நின்று கொண்டு கண்களை மூடி தவத்திற்கு சென்றுவிட்டது.

குரங்குகள் இத்தனை அழகாக தவம் செய்கின்றனவே, நாமும் செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருக்கும் காலியாக இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்தார். சுவாமிகளின் அருளாற்றால் குரு நாதரை வசீகரம் செய்து விட்டது.

இரவு 7 மணி
ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி
குருநாதர் :
ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி எழுந்திரிடா
குருநாதர் : சுவாமி

ரங்கூன் சுவாமிகள் : ஏண்டா, நான் தவம் செய்யும் போது இடைஞ்சல் இல்லாம இருக்கணும் அப்டீன்னு ஒன்னைய காவலுக்கு வச்சா, நீ என்னை காவல் காக்க வச்சிட்டியே.

இருவரும் சிரித்துக் கொண்டே மலையில் இருந்து இறங்கி வந்தார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

குருவும் தற்போதமும் – 1

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்
வசதிக்காக

குருநாதர் : என் குரு நாதர்
அவர் குருநாதர் : மூலகுருநாதர்

ஒரு நாள் காசிக்கரையில் குருநாதரும் மூலகுரு நாதரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவ்வழியே ஒரு வண்ணான், பிறரது அழுக்குத்துணிகளை துவைத்து வெண்மையாக அல்லது தூயதாக மாற்றிக் கொடுப்பவன் தனது நம்பிக்கைக்குரிய கழுதையுடன் ஓர் நாள் ஆற்றிற்கு சென்றான்.

அங்கே நீர் குறைவாக இருந்ததால் வேறோர் பகுதிக்கு செல்லும் வழியில் மரத்தினடியில் மூலகுரு நாதர் அமர்ந்திருந்தார் அவரிடம் பலர் ஆசிகள் வாங்கிச் செல்வதைக் கண்டு தானும் சென்று வணங்கினான். அவரோ எழுந்து கழுதையை வணங்கினார்.

மூலகுரு நாதர் : இதில் இருந்து என்ன தெரிகிறது?

குருநாதர் : ஒன்றும் தெரியவில்லை.

மூலகுரு நாதர் : அந்த கழுதை யான் என்று தெரியவில்லையா?

குருநாதர் : பதறிப்போய், சுவாமி, என்ன இந்த விளையாட்டு?

மூலகுரு நாதர் : இல்லை, உண்மையைத் தான் சொல்கிறேன்.

குருநாதர் :…

மூலகுரு நாதர் : இந்த கழுதை என்னச் செய்கிறது?

குருநாதர் : அழுக்குத் துணிகளை எடுத்துச் சென்று அவைகளை துவைத்தப்பின் வெளித்து புதியதாக எடுத்து வருகிறது.

மூலகுரு நாதர் : மனிதர்கள் தூயதாக துவைத்து வழங்கும் தனது ஆடைகளை மறுபடி அழுக்காக மாற்றி விடுகின்றனர். அவர்களின் ஆணவம், கன்மம், மாயை எனும் அழுக்குகளால் கலங்கமடைவதை இறைவன் குரு எனும் வண்ணானாக புதுப்பித்துக் கொடுக்கிறான். இந்தக் கழுதையோ அவர்களின் தூய்மையற்ற மும்மலங்கலை சுமக்கும் மஹா குருவாக மௌனமாக ஆற்றுக்கும் வீட்டுக்குமாக சென்று வருவதாக உணர்ந்து கழுதையை வணங்கினேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆவணி- 9 (2020)


பாடல்

இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
   எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
   முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
   பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
   காளத்தி யானவனென் கண்ணு ளானே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவனின் தன்மைகளைக் கூறி அவன் தன் கண்ணில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.

பதவுரை

அநாதி காலம் தொட்டு வரும் தொந்த வினைகளை அழிப்பவனாகவும், அழியாத மாவடியின் கீழ் உறைபவனாகி இருத்து அருள்புரியும் ஏகம்பத்தில் உறைபவனாகவும், எலும்புகளையே அணிகலன்களாக அணிபவனாகவும், சங்காரம் எனும் பிரளய காலத்தில் அனைத்தையும் தானே முன்நின்று முடிப்பவனாகவும், மூன்று உலகங்களிலும் வியாபித்திருப்பவனாகவும், நாளுக்குரிய திதி,  வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை உணர்த்துவதாகிய காலத்தின் வழி செல்லும் உயிர்களை படைப்பவனாகிய  பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கி பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாகவும், பராய்த்துறை, பழனம், பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் விரும்பி உகந்து அருளுபவனாகவும், மார்பிலும், முடிமாலையிலும் கொன்றைப் பூவினாலாய மாலையை அணிபவனாகவும் இருக்கும் பெருமானகிய காளத்தி நாதன் என் (அகக்) கண்களில் உள்ளான்.

விளக்க உரை

  • இடித்தல் – அழித்தல்
  • முடித்தல் – வகுத்தமைத்தல்
  • ஐம்புரி என்பதற்கு பஞ்சாதி என்ற வடமொழிச் சொல்லாக பொருள் கொண்டு, பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகள் கொண்ட யசுர் வேதத்தின் பகுதிகள் என்றும் சிலர் பொருள் கொண்டு உரைப்பாரும் உளர்.
  • தார் –  மார்பில் அணியும் மாலை
  • கண்ணி – முடியில் அணியும் மாலை

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!