
பாடல்
வெண்ணித் தொல்நகர் மேயவெண் திங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே
ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசன் குறித்த சிந்தனைகள் அமுதமெனத் தோன்றும் என்று கூறும் பாடல்.
பதவுரை
வெண்ணி எனும் மிகப்பழமை வாய்ந்ததான நகரத்தை மேவியவரும், சிறப்புகளை உடைய வெண்திங்களைச் சூடியவரும், கொன்றைக் கண்ணியை கொத்தாக உடைய திருச்சடையினைக் கொண்டவரும், பிரம்ம கபாலத்தைத் திருக்கரங்களில் ஏந்தியவருமான ஆகிய அப்பெருமானை எண்ணி நினைத்திருந்த அடியேனுக்கு அவர் குறித்த சிந்தனைகள் என் நாவினில் இனியதான அமுதமாக ஊறும்.
விளக்க உரை
- தொல்நகர் – மிகப்பழைய நகர்
- கண்ணித்தொத்த – கொன்றைக் கண்ணி அணிந்த கொத்தாகிய
- தம்மை – அப்பெருமான்தமை
- அண்ணித்திட்டு – இனித்து