
பாடல்
சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று
நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள்
சிம்முதலா வோதுநீ சென்று
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – பக்குவப்பட்ட உயிர்களுக்கு அருள் பொருந்தும் விதத்தை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவன் சிவனருள் ஆவி ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறையச் செய்யும் திரோதம், ஆணவமலம் நீங்கி தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகிய மலபரிபாகம் ஆகிய ஐந்தும் ஈஸ்வரனுடைய பஞ்சாக்கரத்தின் பொருள் முறை ஆகும். இப்படி பஞ்சாட்சர வடிவமான இவன் பக்குவப்பட்ட ஆன்மாவிடத்தில் நின்று, நகாரம் முதலாக உச்சரிக்கில் அருள் பொருந்தாது என்று சிகாரம் முதலாக நீ பொருந்தி உச்சரிப்பாயானால் அருள் பொருந்தும் என்று அருளுவான்.