
பாடல்
சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் – ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – சிவதத்துவம் ஆகிய சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகியவற்றில் சிவசக்தி தத்துவங்கள் செயல்படும் முறையை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவதத்துவங்கள் ஐந்தினில் ஒன்றானதும், இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களில் ஒன்றாகி சிவதத்துவத்தின் பகுதியானதுமான சுத்தவித்தையில் கிரியையின் செயல்பாடுகள் குறைந்து ஞானம் மிகுந்து இருக்கும்; காலத்தால் பகுக்க இயலாத பழமையானதான ஈச்வரத்தில் ஞானம் குறைந்து செயலால் செய்யப்படுவதும், சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபாடு செய்வதும் ஆன கிரியை உயர்ந்தது நிற்கும்; சிவ சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படுவதாகிய சாதாக்கியத்தில் ஞானமும் கிரியையும் சம அளவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்; சக்தி தத்துவத்தில் கிரியையை முன்வைத்தும் சிவதத்துவத்தில் அவற்றுக்குக்கு ஆதாரமான ஞானம் முன்வைத்தும் இருக்கும்.
விளக்க உரை
- சைவ நாற்பதங்களின் வரிசையில் கிரியை, ஞான மார்கங்களின் செயல்படு முறை விளக்கங்கள்