
பாடல்
சித்தி தருநாதன் தென்கமலை வாழ்நாதன்
பத்தி தருநாதன் பரநாதன் – முத்திப்
பெருநாதன் ஞானப் பிரகாச னுண்மை
தருநாத னங்குருநா தன்
சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
கருத்து – அருளாசிரியனே இறைவன் என்று கூறும் பாடல்.
பதவுரை
நம்முடைய குரு நாதன் எப்படிப்பட்டவர் எனில் நினைவு எனும் எண்ணத்தை எண்ணியவாறு நிகழ்த்தித் தரவல்லவன்; தெற்கு பகுதியாகிய கமலை எனும் திருவாரூர் தலத்தில் வாழ்கின்ற நாதன்; பக்தியை தருகின்ற நாதன்; பரவிந்து எனும் `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளதான வாக்கிற்கு நாதனாக இருக்கக் கூடியவன்; முக்தியினை அருளக்கூடிய பெரிய நாதனாகவு இருக்கக் கூடியவன்; ஞானத்தின் வடிவமாகி பிரகாசமாக இருப்பவன்; மெய் எனும் உண்மையினை தரக் கூடியவன்.
விளக்க உரை
- கமலை – திருமகள், திருவாரூர், கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனம்
- சித்தி – காமியப்பயன்களை அருளுவது, பக்தி – வினை முற்றுப்பெறா நல்ல தவம் உடைய உயிர்கள் எய்துவது; முக்தி – சரியை, கிரியை மற்றும் யோகங்களில் ஈடுபட்டப் பின் உயிர்கள் முக்தி அடைய இறைவன் அருளுவது; உண்மை – மெய் ஞானம்.
- வினையுடைய உயிர்களுக்கு முக்தியே பெரிதானது என்பதால் அதனைத் தருபவன் பெரு நாதன்
- பிரகாசம் கதிரவனுக்கானது; அஞ்ஞான இருளை நீக்குதல் பற்றி ஞானப் பிரகாசன்
- நம் – தம் மாணக்கர்களையும் உலக உயிர்களையும் குறித்தது