அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 22 (2020)


பாடல்

தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு
தன்னுரவுயில்லாத சமயத்தோரை
உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை
உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை
நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை
நாதாந்த வேதமதைக் காணார் தன்னை
சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம்
சோதிமய மானசிவ ஞானம் பாரே

அகத்தியர் சௌமிய சாகரம்

கருத்து – முக்தியினை விரும்பவர்களால் விலக்கப்பட வேண்டியவர்கள் என்போர் பற்றி அகத்தியர் கூறும் பாடல்.

பதவுரை

முக்தியினை விரும்பவர்கள், தன்னுடன் உறவாக இருக்கும் ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர்களையும், உள்ளுக்குள் உரைந்து நிற்கும் தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்களையும், உத்தமான சிவசக்தி பதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர்களையும்,  நல்ல உணர்வுகளைத் தரும் நாயகனை விடுத்து தன்னையே நாயகன் எனவும் முக்கியமானவன் எனவும் கருதுவோராகிய நல்லுணர்வு இல்லாதோர்களையும், நாதாந்த வேதம் எனப்படுவதாகிய ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைய விருப்பம் இல்லாதவர்களையும் சொல்லில் வைத்து பேசி காலத்தை வீணாக்காது அவர்களைத் தள்ளி சோதி வடிவமாக இருக்கக் கூடியதான சிவ ஞானம் பார்க்க வேண்டும்.

விளக்க உரை

  • மேலே கூறப்பட்டவர்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்கள் என்பதால் இவர்களுடன் சேர்வது முக்தியினைத் தடைப்படுத்தும்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *