
உமை
பகவானே! மரணகாலம் வந்தபோது எந்த வகையால் உயிர்விட்டமனிதர்கள் மறுமையில் இதம்பெறுவார்கள்?
மகேஸ்வரர்
முயற்சியினால் உண்டாகும் மரணம் தேகத்தில் சத்தி உள்ளவனுக்கும் சக்தி இல்லாதவனுக்கும் இரண்டுவகைகளாகச் சொல்லப்படுகிறது.
முயற்சியினால் உண்டாகும் மரணம் எனில் அதை உபாயங்களினால் செய்யவேண்டும்.
உலகத்தில் மரணமானது தேக வலிமை தப்பி மூப்பும் பிணியும் பற்றிய காரணங்களால் அமையப் பெற்ற அபாயமில்லாத ஸ்வபாவமரணம் எனும் இயற்கையாலும், இறந்துபோக எண்ணத்தினால் உயிரைவிடும் முயற்சியாலும் உண்டாகிறது. காசி போன்ற நகரங்களுக்கு செல்லுதல், சாகும்வரை உண்ணாவிரதம் ஆகிய வடக்கிருத்தல், நீரில் விழுந்து உயிரை மாய்ப்பது, அக்னியில் உயிரை விடுவது என நான்கு வகைகள் கூறப்பட்டுள்ளன.
இறந்துபோகக் கருதுகிறவர்களுக்குப் பகலும் சுக்லபக்ஷமும் உத்தராயணமும் சிறந்தவை; மற்றவை இழி வானவை. சாஸ்திரத்தில் விதித்தபடி தனக்கான தர்மங்களைச் செய்து கிருகஸ்த ஆஸ்சிரமத்தை நடத்தி,தேவ மனுஷ்ய பித்ருரிஷி ஆகியோர் கடன்களைத் தீர்த்து தனது முதுமை கண்டு நோய் அடைந்து இருக்கும்போது தன் சக்தியின்மையை தன் உறவினர்களுக்குத் அவர்களிடம் கேட்டுக்கொண்டு தன் குடும்ப உறவுகளுக்கு உணவிற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, தன்னுடைய புண்ணியத்திற்காகத் தானங்களைச் செய்து, எல்லாரிடத்தும் கனிவாகப் பேசி பொருள் பெற்றுக் கொண்டு புதுவஸ்திரம்தரித்து அதைத் தர்ப்பக் கயிற்றினால் கட்டிக் கொண்டு ஆசமனம் செய்து ஸங்கல்பத்தோடு நிச்சயம்செய்து உலக நடையை எல்லாம் விட்டுத் தனக்கு இஷ்டமான தர்மத்தைச்செய்ய வேண்டும். உயிர்விடும் வரையிலும் ஆகாரமில்லாமல் இருந்துகொண்டு வடதிசையை நோக்கிச் செல்ல வேண்டும். நடையற்றுப் போகும்போது மனவுறுதியுடன் படுத்து உயிரை விடவேண்டும்.
அக்நிப்பிரவேசத்தில் விருப்பமிருந்தாம் முன்சொன்ன விதிப்படியே புண்ணிய தங்களில் அல்லது நதிக்கரைகளில் கட்டைகளினால் சிதையைச் செய்து பரிசுத்தனாகிச் சங்கல்பம் செய்து கொண்டு தேவதைகளுக்கு நமஸ்காரம்செய்து அக்னியை வலம் வந்து அதில் முழுகவேண்டும்.
நீரில் விழநினைத்தாலும் அதேமுறையில் மிகப்புண்ணியமான பிரஸித்தி பெற்ற தீர்த்தத்தில் தர்மத்தை நினைத்து அமிழவேண்டும்.
இது எக்காலமும் உள்ள தர்மம் என்பதால் இவ்வாறு செய்பவன் பற்றின்மை காரணமாக பரிசுத்தமான புண்ணிய லோகங்களை அடைந்து ஸ்வர்க்க லோகத்தில் பூஜிக்கப்படுவான்.
தேகவன்மையுள்ளவன் உயிர்விடும்வகையை சரியாகச் சொல்லுகிறேன்; கேள். நாட்டை ஆளும் அரசன் தன்னுடை ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காகவும், படைச்சேவகர்கள் அரசனுக்கு கடமைப் பட்டதற்காவும், பிரம்மசாரிகள் குருவுக்காகவும் மற்றவர்கள் எல்லோரும் பசுக்களைக் காப்பதன் பொருட்டு உயிரை விடுவது சாஸ்திரத்தில் விதிக்கப்படுகிறது. தன்னுடை ராஜ்யத்தைக் காப்பதற்காகவும், கெட்ட தன்மை உடைய மனிதர்களால் பிடிபட்ட மக்களை விடுவிப்பதற்காகவும் விதிப்படி யுத்த ஒலி எழுப்பி மன உறுதியுடன் யுத்தத்தில் சென்று பின்வாங்காமல் உயிரைவிடவேண்டும். இவ்வாறு இறந்த அரசன் அப்போதே ஸ்வர்க்கலோகத்தில் பூஜிக்கப் படுவான். அப்படிப்பட்டநல்லகதி வேறில்லை. க்ஷத்திரியனுக்கு அது சிறந்தது. இவ்வாறு, உயிரைவிடுவதற்கு உள்ள நல்வழிகளை உனக்குச் சொன்னேன்.
காமம், கோபம், பயம் ஆகிய ஏதாவது காரணத்தினால் தேகத்தை ஒருவன் விடுவானாயின் அவன் தற்கொலை செய்துகொண்ட காரணத்தினால் முடிவில்லாத நரகத்தை அடைவான். அவ்வாறு இறந்துபோனவர்களுக்குச் சாஸ்திரப்படி செய்யவேண்டிய காரியத்தையும் சொல்லுகிறேன்; கேள். மனிதன் இறந்துபோகும் தருணத்தில் தேகத்தைப் பூமியில் படுக்கவைக்கவேண்டும்; உயிர் விட்டவுடன் அந்தத்தேகத்தை வஸ்திரத்தினால் மூடவேண்டும்; பிரேத தேகத்தைப் பூமாலைகளினாலும் சந்தனத்தினாலும் பொன்னினாலும் அலங்கரித்து மயானத்தின் தென்புறத்தில் சிதை கொண்டு அக்கினியில் எரிக்கவேண்டும். உயிரில்லாத தேகத்தைப் பூமியில் புதைக்கவும்செய்யலாம். ஜலதர்ப்பணமும் அஷ்டகையென்னும் சிராத்தமும் அநேகரால் செய்யப்படுமானால் இறந்துபோனவர்களுக்கு பரலோகத்தில் புண்ணியம் கிட்டும்.