
பாடல்
மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப் பாடல்.
பதவுரை
மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்; இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?
விளக்க உரை
- காடுகாள் – காடுகிழாள், பழையோள், காளி; ‘காடுகள்’ – பிழைபட்ட பாடம்
- இருவர் இருக்க, மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினவியது; இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ என்பதும் பெறப்படும்.