
பாடல்
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – சிவனின் தன்மைகளைக் கூறி அவன் தன் கண்ணில் உறைகின்றான் எனக் கூறும் பாடல்.
பதவுரை
அநாதி காலம் தொட்டு வரும் தொந்த வினைகளை அழிப்பவனாகவும், அழியாத மாவடியின் கீழ் உறைபவனாகி இருத்து அருள்புரியும் ஏகம்பத்தில் உறைபவனாகவும், எலும்புகளையே அணிகலன்களாக அணிபவனாகவும், சங்காரம் எனும் பிரளய காலத்தில் அனைத்தையும் தானே முன்நின்று முடிப்பவனாகவும், மூன்று உலகங்களிலும் வியாபித்திருப்பவனாகவும், நாளுக்குரிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை உணர்த்துவதாகிய காலத்தின் வழி செல்லும் உயிர்களை படைப்பவனாகிய பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கி பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாகவும், பராய்த்துறை, பழனம், பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் விரும்பி உகந்து அருளுபவனாகவும், மார்பிலும், முடிமாலையிலும் கொன்றைப் பூவினாலாய மாலையை அணிபவனாகவும் இருக்கும் பெருமானகிய காளத்தி நாதன் என் (அகக்) கண்களில் உள்ளான்.
விளக்க உரை
- இடித்தல் – அழித்தல்
- முடித்தல் – வகுத்தமைத்தல்
- ஐம்புரி என்பதற்கு பஞ்சாதி என்ற வடமொழிச் சொல்லாக பொருள் கொண்டு, பெரும்பாலும் ஐம்பது வார்த்தைகள் கொண்ட யசுர் வேதத்தின் பகுதிகள் என்றும் சிலர் பொருள் கொண்டு உரைப்பாரும் உளர்.
- தார் – மார்பில் அணியும் மாலை
- கண்ணி – முடியில் அணியும் மாலை