
பாடல்
ஆசையெனும் பெருங்காற்று ஊடு இலவம்
பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முத்திக்கான
நேசமும் நல்வாசமும் போய் புலானாயிற்
கொடுமை பற்றி நிற்பர் அந்தோ
தேசு பழுத்தருள் பராபரமே நிராசை
இன்றேல் தெய்வமுண்டோ
தாயுமானவர் பாடல்கள்
கருத்து – ஆசையே எல்லா அழிவுக்கும் மூல காரணம் எனவும் அதனால் மோட்சத்தை அடைவதற்கான விருப்பமும் இல்லாமல் இந்த மாயையிலேயே மூழ்கிக் கிடப்பர் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஒளி நிறைந்த அருள் பழுத்த பராபரமே! ஆசை என்று உருவமாக சொல்லப்படுகிற பெரிய காற்றினில் அலையும் இலவம் பஞ்சைப் போல மனமானது அலையும் காலத்தில் மோசம் நேரிடும்; இதனால் முக்தியினை அளிப்பதற்காக கற்கப்பட்ட கல்விகளும், ஞானம் பெறுவதற்காக கேட்ட கேள்விகளும் வீணாகி, முக்தி எனும் மோட்சம் அடைவதற்கான விருப்பமும் அதன் பொருட்டான சிறந்த வாசமும் நீங்கி, ஐம்புலன்கள் பற்றி நின்று அது ஏற்படுத்தும் கொடுமையான துன்பங்கள் பற்றி கொண்டு நிற்பர்; நிறைவேராத ஆசை இருப்போர் முன்னர் எவ்வாறு தெய்வம் தோன்றும்?(தோன்றாது என்பது துணிபு)
விளக்க உரை
- கற்றதும் கேட்டதும் – இதனை இருவிதமாக மாற்றி வாசிக்கலாம், ஒன்று ஞான வழி பற்றி நிற்க கேட்ட கேள்விகளும் அதற்கான பதில் பெற்று கற்றதும் என்று கொள்ளலாம். இரண்டாவது கற்ற வித்தையின் வழி நின்று வைகரி எனும் செவியோசை, மத்திமை எனும் கருத்தோசை, பைசந்தி எனும் நினைவோசை, பரை எனும் நுண்ணோசை ஆகியவற்றை கேட்டல் என்றும் கொள்ளலாம்.
- தூர்ந்து – வீணாகி