
பாடல்
தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்
பொன்னி வளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்
ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ
சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!
மனத்திலே பகை ஆகி உதட்டிலே
உறவாகி மடிவர் தாமே
தண்டலையார் சதகம்
கருத்து – பெரியேர்களுக்கும் சிறியோர்களுக்குமான வித்தியாசங்களை உணர்த்தும் பாடல்.
பதவுரை
பொன்னி எனும் காவிரி நதி பாய்ந்து வளம் தழைத்ததுமான நாட்டில், செல்வத்திலே மிகுந்து இருக்கக்கூடியவரான தண்டலையார் இருக்கும் இடத்தில், சொல் எனப்படுவதான வாக்கும், மனம் ஆகியவை எல்லாம் ஒன்றாகி தம் காரியங்களைச் செய்வர்; சினக்கொண்டு சிறுமை படைத்தவர்களாக இருக்கக்கூடிய சிறியோர்களால் செய்யப்படும் காரியங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்; அதுமட்டுமல்லாமல் மனதில் பகை கொண்டு அது வெளியே தெரியாமல் உதட்டளவில் உறவாடி தாமே மடிவார்கள்.
விளக்க உரை
- ‘மனத்திலே பகை ஆகி’ எனும் பழமொழியை விளக்கும் பாடல்