
பாடல்
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும் (கழுத்துக்குக் கீழ்). புறக்குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது போல் இந்த உடலில் புலன்கள் எனும் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீசுவது போல் சிவபெருமான் அம் மீன்களைச் செம்மைப்படுத்தச் செம்பரவனாகத் தோன்றி வலையை வீசி அருளினன்; குளத்தில் இருக்கும் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டு அவற்றின் துள்ளல் அடங்கியது போல் சிவன் தன்னுடிய ஒப்பற்றதாகிய கருணையினால் தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்; ஆதலால் நாமும் நம்முடைய ஐம்புலப்புலன் இன்பம் எனும் நுகர்ச்சி துன்பத்தினின்று நீங்கிச் சிவஇன்ப நினைவில் ஆழ்ந்தோம்.
விளக்க உரை
- தூங்குதல் – ஆழ்தல்
- அழுந்தல் – ஐம்புலன் அடக்குமுறைமை
- பரவன்: பரதவன்
- ஏதம் – துன்பம்
- ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் – ஆகவே மனித உயிர்க்கு இடம்