அமுதமொழி – விகாரி – ஆனி – 15 (2019)


பாடல்

ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய்
மாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் – வேறாய்
உடனா யிருக்கு முருவுடைமை யென்றுங்
கடனா யிருக்கின்றான் காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் (மெய்கண்ட சாத்திரம் – சைவ சித்தாந்தம் )

கருத்துஈசன் உலகுயிர்த் தொகுதியாகி, அவைகளே தானுமாகி அதில் இருந்து விலகியும் இருக்கும் முத்திறத்தினை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் மூலகாரணத்தில் அனைத்தையும் ஒடுங்க செய்தும், உலக அழிவு செய்தும், தானே  அனைத்தும் சாட்சியாக இருந்து முழு முதற் பொருளாய் இருப்பவனும், படைப்பு ஆகிய சிருஷ்டி கரணத்தில் சக்தியுடன் கூடி இரண்டாகியும், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையு உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை  ஆகிய எண் குணத்துடன் கூடியும், சிருஷ்டியில் குறிப்பிடப்பட்ட உலக உயிர் தொகுதியுடன் பிரிக்க இயலாதவாறு கூடியும், உலக உயிர்களின் தன்மை தனக்கு எவ்வகையிலும் தன்னைச் சேராதவாறு தனித்து இருப்பவனும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், அதனை  அறிவிக்க உதவும்கால்  உயிர்களோடு ஒன்றாகியும்,  உடனாகி இருக்கும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் ண்டிருக்கின்றான் அம்முதல்வன்; அஃது  அவனது இயல்பு என்பதனை மாணவனே கண்டுணர்வாயாக.

விளக்க உரை

  • சத்தியிடமாய் நின்று இருக்கும் காலத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் சூரியன், திங்கள் ஆன்மா எனும் எண்பேருருவினாகி நிற்கின்றான் எனும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. சிவனின் குணங்களில் எண் குணம் என்பது பிரதானமானதால் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஈசனுக்கும் உலக உயிர்த் தொகுதியுடன் கூடிய தொடர்பு பேதம், அபேதம் பேதா பேதம் என்னும் மூன்று வகைப்படும். ‘முதலொன்றாய், மாறாத வெண்வகையாய்‘ எனும் வரிகளால் அபேத நிலையினையும், ‘ஈங்கிரண்டாய்‘ எனும் வரிகளால்  பேத நிலையினையும் ‘மற்றிவற்றின்  வேறாய், உடனா யிருக்கு முருவுடைமை‘ எனும் வரிகளால் பேதா பேத நிலையும் அறியப்படும்

இதனை

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே

எனும் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 14 (2019)


பாடல்

எங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே
தங்குஞ் சுகநீ சலியாதே-அங்கிங்கென்
றெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப்
பண்ணாதே யானுன் பரம்

தாயுமானவர்

கருத்துதாயுமானவர் மனதுக்கு உபதேசம் செய்தல் பற்றிய பாடல்.

பதவுரை

மனமே!  சிவப் பரம்பொருள் இங்கு உள்ளது, அங்கு உள்ளது என்று எண்ணாமலும், வீணாக பிறப்பில் கிடந்து உழலுவது போன்ற செயல்களைச் செய்யாமலும், காட்சிப் பொருள்களை மனதால் மாறுபாடு கொண்டு இரண்டு என்று எண்ணாமல் அனைத்திலும் ஒன்றாகி நிற்பது சிவப் பரம்பொருளே என்று எண்ணுவாய் என்றால்  யான் உனக்கு அடைக்கலமாவேன்; அதனால் உனக்கு சுகம் உண்டாகும் என மனதுக்கு உபதேசம் செய்கிறார் தாயுமானவர்.

விளக்க உரை

  • அருணகிரிநாதரின் சீர்பாத வகுப்பில் கூறப்பட்ட

   .. உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ

   வுளபடியை யுணருமவ ரநுபூதி ..

எனும் பாடலுடன்

விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம் இருள் ஒளி என்ற ‘துவத்துவ’ உணர்ச்சிகளை விலக்கி பார்க்கும் இடமெல்லாம் பரம் பொருளை அன்றி வேறு ஒன்றையும் இல்லா நிர்விகல்ப சமாதி நிலையில் கொண்டுவிடும் எனும் விளக்கத்தோடும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 13 (2019)


பாடல்

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே கறைபழுத்த
துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ்
சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கும்
உடுக்கும் புவனம் கடந்துன்ற
ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கருத்துசிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல அமைந்தப் பாடல்.

பதவுரை

மனிதனின் கற்பனையால் புனையப்பட்டு உருவாக்கப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகவும், தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழினைக் கொண்டு  மாலையாக தொடுக்கப்படது போன்றதும் ஆனவளே, மும்மலங்களில் ஒன்றானதும் முதன்மையானது ஆன ‘தான்’ என்ற அகந்தைக் கிழங்கைக் கிள்ளி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் மெய்ஞான விளக்காக திகழ்பவளே, பனி மலைச் சிகரமாகிய இமயமலையில் விளையாடும் இளமையானதும் மென்மையானதும் ஆன பெண் யானைப் போன்றளே, புவனமெல்லாம் கடந்து நின்று அதை தன்னுடைய ஆடையாகவும் அணியும் பரம்பொருள் தன் உள்ளத்தில் ‘அழகு தோன்றுமாறு எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்’ போன்றவளே, வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழல் காட்டினை ஏந்தும் வஞ்சிக் கொடியே, மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வே வருக வருக என்று மீனாட்சியம்மையை குமரகுருபரர் அழைக்கிறார்.

விளக்க உரை

  • மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறுகிறது இப் பாடல்.
  • இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது, குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு.
  • பிள்ளைத்தமிழ் – தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாsசாரியர்கள், புலவர் பெருமக்கள், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
  • தமிழின் ஒழுகுகறுஞ்சுவையே – மொழியின் லயமாக அவனைத் தரிசித்தல்
  • தொடுத்தல் = கட்டுதல் / உருவாக்குதல்,
  • தொடை = மாலை
  • நறை = மணம்
  • தீம் = இனிய
  • அகந்தை = செருக்கு
  • தொழும்பர் = அடியார்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 12 (2019)


பாடல்

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!

அழகணிச் சித்தர்

*கருத்துமெய்யறிவு நிலை கண்டவர்களை நமன் அணுகான் எனும் பொருள் பற்றிய பாடல்.*

பதவுரை

அடிவயிறு எனப்படுவதாகியதும், கணபதியின் இருப்பிடமானதும்  ஆன மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி எனும் சக்தியானது  கொல்லனின் உலை போன்ற வெப்பமுடன் அங்கே சிறிய நாகமாக சுருண்ட நிலையில் அமைந்துள்ளது.   அந்த சக்தியை எழுப்பி அதை மற்ற ஐந்து நிலைகளான மணிபூரகம், சுவாதிஷ்டானம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா வழியாக சகஸ்ராரத்திற்குக் கொண்டு சேர்ப்பதையே பிறப்பின் நோக்கமாகக் குறிப்பிடுவர்.  இதையே சித்தர்கள் பரிபாஷையில் சாகாக் கல்வி, வாசி யோகம், தனையறிதல் எனப் பல்வேறு வகைகளில் உணர்த்துவர்.  அவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்பி அதை சகஸ்ராரத்தில்  நிலை நிறுத்த வல்லவர்களுக்கு மரணம் என்பது கிடையாது. இதைப் பூடகமாக  இவர்களை மாய்ப்பதற்காக அணுகும் எமன் அவர்களின் மெய்யறிவு நிலை கண்டு அந்த முயற்சியை கைவிட்டு அவ்விடத்தினின்று அகலுவான் என்று அழகணி சித்தர் விளக்குகிறார்.

விளக்க உரை

  • சித்தர்கள் பரிபாஷையில் வயிறு என்பதை அடிவயிறு என்றும் கருதலாம். இதையொட்டி மூலாதாரம் என பொருளில்  விளக்கப்பட்டுள்ளது.

விளக்க உரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 11 (2019)


பாடல்

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்துமூம்மலங்களுக்கு உட்பட்டவனாகிய இராவணன் தவறு இழைத்த போதும், அது குறிந்து வருத்தம் கொண்டு வணங்கி நின்றதால் பல பேறுகள் அடைந்தான். அது போல் மறுமை அடையாமல் இருக்க திருச்சோற்றுத்துறை ஈசனை வணங்குங்கள் எனும் பாடல்.

பதவுரை

மறுமை எனும் பிறப்பு ஏற்படாத வகையில் அதனை  அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் நிலையற்ற பொருள்களால் ஆன  உலக விஷயங்களில்  மனத்தை நிலையாக வைக்காமல், பல மெய் ஞான நூல்களையும் கற்றதால் அக்காரணம் பற்றி செருக்கு கொண்ட  அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை துன்புறுத்திப் பின் அவனுக்கு அருள் செய்த திருச்சோற்றுத் துறையனை, பலகாலமும் பிரானின் பெருமைகளை இடையறாது துதித்துப் பேசுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 10 (2019)


பாடல்

தெவ்விடத் தாய திசை பிழைத்தாலும் சின அரவம்
கவ்விடத்தான் வெய்யகான் நடந்தாலும் கருதரிய
எவ்விடத்தேனும் இருந்தாலும் என்றன் இடரையெல்லாம்
தவ்விட நீ வருவாய் காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்து – இடர்களை எல்லாம் தீர்க்க நீ வர வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே!  செய்யத் தகாத காரியங்களைச் செய்து தென் திசை சென்று (மரணித்து) பின் பிழைத்து வந்தாலும், அரவம் போல் சினம் கொண்டு  அதனால் துன்பம் கொண்டு நடந்தாலும், எண்ணுவதற்கு அரியதான எந்த இடமாக இருப்பினும் மற்றும் இது போன்ற இடர்கள் எல்லாம் தீர்க்க நீ வருவாய்.

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 9 (2019)


பாடல்

செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
   திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புத்திஅறிந் ததுவே
   பொன்அடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
   எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
   அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே

திருஅருட்பா –  ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஐவகைத் துயரங்களையும் பொறுப்பதற்கு இன்றியமையாத அருட்சோதியை நல்கி அருளுமாறு வேண்டிய பாடல்.

பதவுரை

மாயைக்கு உட்பட்டும், மும்மலங்களுக்கு உட்பட்டும் துன்ப மிகுதியால் திகைத்தேன்; அதனால் செய்வகை அறியாமல் மயங்கியபோது நீ சிவபரம்பொருளகவும், குருமுதல்வனாகவும் திருமேனிக்  கொண்டு எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு செய்து ‘ இனி மருள வேண்டா’ என்று எனக்குத் தகுந்தவாறு கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை அன்று; உன்னுடைய திருவுள்ளம் ஏற்கனவே நன்கு அறிந்ததாகும்;  அவ்வாறு தெளிவு பெற்ற யான் இனி துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் அழகிய திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேன்; துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன்; ஆயினும், கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுக்க மாட்டாதவன் ஆகின்றேன்; ஆகவே இப்பொழுதே மிகப் பெரியது எண்ணக்கூடியதான திருவருள் ஞான ஒளியை எனக்கு அளித்தருள்வாயாக.

விளக்க உரை

  • இச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் என்றும் பொருள் உரைப்பார்கள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 8 (2019)


பாடல்

வரையொன் றதெடுத் தவரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

*கருத்துகைலாயத்தில் உறையும் ஈசன் திருவையாறு தலத்திலும் உறைவன் என்பதை குறித்து பாடிய பாடல்.*

பதவுரை

எல்லைகள் அற்றதானதும், மலைச்சிகரம் ஆனதும் ஆன கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதையுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம் மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு பாயும் புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு எனும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • விரை – மணம்
  • வரை – கோடு, எல்லை, வரம்பு, வரைப்பு, கரை (வரம்பு), அளவு, திருமணம், இரேகை, எழுத்து, மலை, மலைச்சிகரம்.
  • திரை – திரைச்சீலை, அலை, உடல் தோலின் சுருக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 7 (2019)


பாடல்

அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
   அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
   எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
   வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
   உடையாய் பெறநான் வேண்டுமே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஉலகியல் பற்று ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

எம்பெருமானே! உடையவனே! பெரும் கடல் போன்றதும், அருள் அமுதம் போன்றவனும் ஆகியவனே! அவ்வாறான அமுதக் கடலின் உன் அடியார்கள் எல்லாம் புகுந்து இருந்து திளைத்திருக்க மெய் பற்றிய அறிவு இல்லாமையால் இருள் தருவதான அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன்; இவ்வாறான மயக்கம் பொருந்திய மனத்தை உடைய ஒரு பித்தன் வருகிறான் என்று இந்த உவுலகில் என்னைப் பார்ப்பவர்கள் அஞ்சாத வண்ணம் நான் வீடுபேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.

விளக்க உரை

  • உலகியல் தொடர்பு அறுந்த பின்னரே மெய்யறிவு விளங்கப் பெறும். மெய்யறிவு பெற்றப்பின் உலகியல் பற்று கொண்டோரை பித்தன் என்று கூறுவார்கள். அவ்வாறான நிலை ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கிறார்
  • உன்மத்தன்- பித்தன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 4 (2019)


பாடல்

ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து
ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்
பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம்
கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கிடைக்கப்பெற்றவர்களின் சில செயல்களைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் பல உயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடிய காலத்தில் அந்த இன்பமானது அருள் கதிராய்ப் புறத்தில் தோன்றும். தான் எனும் நிலை அற்ற நல்ல தவம் உடையோருக்கு அந்நிலையில் அந்த உயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் இயலாது. பக்குவப்பட்ட அந்த உயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும்; விரும்பி  பறக்கவும் செய்யும்; ஓர் இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் விடுபடாமல் உரைக்கக் கூடிய ஆற்றல் பெருகும் பண்ணொடு பொருந்தப் பாடும்; இவ்வாறான சில குறிப்புகளால் அந்த உண்மை புலனாகும்.

விளக்க உரை

  • நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன்
    தன்செயல் தானேயென் றுந்தீபற
    தன்னையே தந்தானென் றுந்தீபற

எனும் திருவுந்தியாரின் பாடலும் ஒப்பு நோக்கி உணர்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 2 (2019)


பாடல்

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
   கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
   மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
   வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஅடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.

பதவுரை

இறைவரை உமக்கு ஏற்றவாறு  போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின்  யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ?  சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
  • கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
  • நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 1 (2019)


பாடல்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துதிரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள்.  அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.

விளக்க உரை

  • நேரிழை – பெண்
  • நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
  • கலை – கூறு
  • ‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்
  • ஒத்தல் – உள்ளம் ஒத்தல்
  • ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 30 (2019)


பாடல்

கருணையாங் காமாட்சி யிருந்த வீடு
   கடிதான நாற்பத்து மூன்று கோணம்
வருணையாம் ரிஷி தேவர் சித்தர் யோகி
   மகத்தான பஞ்சகர்த்தா ளக்கினி யாதித்தன்
அருணையாம் அகஸ்தியருங் கணேசன் கந்தன்
   ஆத்தாளைப் பூசித்து அதிகார மானார்
கருணையாம் பூசித்துச் சமாதியிலேநின்று
   தாயளிக்கச் சகல சித்துந் தரித்திட்டேனே

போகர் – கருக்கிடை நிகண்டு 500

கருத்துஸ்ரீ சக்ர பூசை செய்தவர்களையும், அவர்கள் வழியில் தானும் பூசை செய்ததையும் போகர் குறிப்பிட்டு உரை செய்த பாடல்.

பதவுரை

தாயாகியவளும், கருணையுள்ளம் கொண்டவளும் ஆன காமாட்சி  இருக்கும் வீடு அடைவதற்கு அரிதான நாற்பத்து முக்கோண சக்கரம் ஆகும். எக்காலத்திலும் அன்பை பொழிவதாக இருப்பவர்களானவர்களும், இறைவனிலிருந்து வரும் ஒலி அலைகளை கிரகித்து உணர்ந்து  மந்திரங்களை இயற்றும் ஆற்றல் படைத்த தவ சீலர்கள் ஆகிய ரிஷிகளும், தேவர்களும், சித்தத்தை அடக்கியவர்கள் ஆன சித்தர்களும், பிரபஞ்சத்தின் ஒருமை நிலையை தன்னுள் உணர்ந்தவர் ஆன  யோகிகளும், பஞ்ச கர்த்தாக்கள் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோர்களும், அக்னி, ஆதித்யன், அருணை எனும் அருணாச்சலத்திற்கு நிகரான அகஸ்தியர், கணேசன், கந்தன்  போன்றவர்கள் இந்த சக்கரத்தை பூசித்தே சகல அதிகாரமும் பெற்றார்கள். கருணை வடிவம் ஆகிய  அவளை அவள் கருணையினால் நானும் மேலே குறிப்பிட்டவர்கள் பூசை செய்த முறையில் பூசித்து, சமாதியில் நின்று சகல சித்தையும் அறிந்து கொண்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 29 (2019)


பாடல்

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஅநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.

பதவுரை

தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி  உனக்கு மெய்யடிமையைச் செய்ய,  அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.

விளக்க உரை

  • புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
  • மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும்  இறைபணியாகிய அடிமைத் திறம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 15 (2019)


பாடல்

கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்துசிவனின் அட்ட வீர செயல்கள் சிலவற்றை குறிப்பிட்டும், அவன் வடிவம் குறித்து குறிப்பிட்டும், அவன் குணங்களைக் குறிப்பிட்டு கூறி தன்னை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விளிம்பும் பாடல்.

பதவுரை

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவனே, மேம்பட்ட தேவர்களின் தலைவனே, பால் பேதங்களை குறிப்பதாகிய குணம் குறிகள் ஆகியவை இல்லாதவர்களாகவும், மேம்பட்டவர்களும் ஆன ஞானியர்களின்  குணம் கொண்டவனே, தன்னால் வகுக்கப்பட்ட காலத்தில் ஒன்றி இருந்து அதை தன் வயத்தில் அடக்கி இருப்பவனே, கங்கையின் தலைவனே, எங்களுக்குத் தலைவனாக அமைந்து இருந்து கூற்றுவனுக்குக் காலனாக இருப்பவனே, மன்மதனை அழித்தவனே, விடத்தையே அமுதம் போல உண்டவனே, கூத்தாடும் இடமாகிய பொன்மயமான அம்பலத்தில் அதையே கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே, உலக வடிவமாகவும் இருந்து அதை தன்னுள் அடக்கியவனாகவும் இருந்து உலகத்தில் அதுவாகவும் கலந்து இருப்பவனே, தன்னுணர்வும் மெய்யறிவும் இல்லாத அடியேன் ஆகிய யான் பெரிய தவத்தை உடையவனும் தாயைப் போன்றவனும் ஆகிய உனக்குத் தொண்டனாகி, தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

விளக்க உரை

  • நணுகுதல் – சார்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 14 (2019)


பாடல்

மூலம்

சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்

பதப்பிரிப்பு

சீர்க் குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குஉள உலகில் அம்மா! அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும்என் பார்வை தானும்

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து மேலும் உரைக்க இயலாமை குறித்து உரைத்தப் பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை, புகழ் ஆகியவற்றை இயல்பாக உடைய குமரேசன் அழகிய பெரியதான வடிவம் கொண்டவனானாகவும், தோற்றப் பொலிவு உடைய ஒளி கொண்டவனாகவும், இளமையும், அழகு எல்லாம் உடையவனாகவும் உள்ளான்; இந்த அழகிற்கு ஈடாக உலகில் எவன் உளான்; அம்மாடி! இந்த அற்புதத் தோற்றம் கொண்டவனை எத்தனைக் காலம் பார்த்தாலும் அந்தத் தோற்றப் பொலிவானது எனக்குத் திகட்டவில்லை.

விளக்க உரை

  • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 12 (2019)


பாடல்

மூலம் – 19

பாடிக்கொண் டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண் டாடித் திரிந்திட வேஎனைத் தொண்டு கொள்வாய்
தேடிக்கொண் டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கை யெல்லாம்
சாடிக்கொண் டாடிய வாகாழி யாபதுத் தாரணனே.

பதப்பிரிப்பு – 19

பாடிக்கொண்டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண்டாடித் திரிந்திட வேயெனைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கையெல்லாம்
சாடிக் கொண்டாடியவாகாழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஉன்னை பணியும் அடியார்களின் பாதங்களை தன் தலைமேல் சூட்டவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

உன்னை தேடியும் கொண்டாடியும் கொண்டாடி வருவோர்களுடைய  தீர்க்க இயலாதது ஆகிய வலிமையான ஊழ்வினைகளை தடைகளை எல்லாம் அடித்தும் ஒடித்தும் செய்து அதைக் கொண்டாடிய காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! உன்னை எப்பொழுதும் நினைவில் கொண்டு பாடுவதைத் கொண்டாடி பணிந்திடும் அன்பர்களின் மலர் போன்ற பாதங்களை என் தலைமேல் சூடிக் கொண்டாடி திரியும் மாறு எனக்கு தொண்டு செய்ய அருள்வாய்.

விளக்க உரை

  • வல்வினை – வலியதாகிய ஊழ், தீவினை, கொடுஞ்செயல், வலிதாகிய தொழில், வலிய வினைச்சொல்
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 11 (2019)


பாடல்

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபல்வேறு விதமாக இறைவனின் பெருமைகளை கூறி அவன் புகழைப் பேசுவோர் பெரியோர் என்று விளம்பும் பாடல்.

பதவுரை

எவரின் மனத்தாலும் எண்ணி அறியப்படாதவனும், தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகளுக்கு மூன்று கண்கள் உடையவனாக விளங்குபவனும் உயிர்கள் வாழ உதவி செய்யும் மண் வடிவாவனாகவும், சிறந்ததும், பெரியதுமான வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமை அம்மையோடு கூடியவனாய் விளங்கும் இறைவன் புகழைப் பேசுவோர் பெரியோர் ஆவர்.

விளக்க உரை

  • பெண்ணான் – மங்கைபங்கன், கங்கைச்சடையன்
  • எண்ணானை – யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை (அஃதாவது மனதால் எண்ணாமல் இருப்பவனுக்கு மும்மலத்தின் காரணமாக அறியப்படாதவன்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 10 (2019)


பாடல்

கிளியே அருண வொளிச்சுடரே
      கிருபானனமா முழுமதியே
   கெடியாம் உன்றன் இருபதங்கள் 
      கிடைக்கும் வகையும் பெறுவேனோ

ஒளியா யிருக்குங் கனகசபை
      ஒன்றே இரண்டே விபரிதமே
   உரைக்குங் கருணாநிதிமயிலே
      உதித்த பரமனுடன் ஆடும்

அளியா ரமுதே பரம்பரையே
      அணுவில் அணுவாய் அண்டபிண்டம்
   அமர்ந்த சிவமே ஞானவெளிக்(கு)
      அரசே வேதத் துட்பொருளே

வளியே சுழியில் நடமிடுகண்
      மணியேஎளியேற்கினியருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்பிகையின் அருளையும், அவள் தன்மைகளையும் வியந்து அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, கிளியைப் போன்றவளே, சூரியனைப் போன்ற பிரகாசம் உடைய சுடர் போன்றவளே, முழுமதி போன்று கருணையைப் பொழிபவளே, வல்லமை உடையதும், புகழ் உடையதும் ஆன சிறப்புமிக்க உன் பாதங்கள் கிடைக்க எளியவன் ஆகிய யான் பெறுவேனோ? ஒளிவடிவாக இருக்கும் கனக சபைதனில் ஒன்று எனவும், இரண்டு எனவும் அறிய முடியாதபடி சிவசக்தி ரூபமாக இருப்பவளே, அடியார்களுக்கு அருளை வழங்குவதில் கருணை நிதியாக இருப்பவளே, மயில் போன்ற அழகுடையவளே, தன்னில் ஒருபாதியாக மிகுந்து இருக்கும் பரமனுடன் ஆடியும், அருளும் இரக்கமும் கொண்ட அமுதமே, முழு முதல் தெய்வமாக ஆனவளே அணுவிற்கணுவாய், அண்டத்திலும் பிண்டத்திலும் அமர்ந்த சிவம் ஆனவளே, பரஞான வெளிக்கு அரசே, வேதத்தின் உட் பொருளாய் இருப்பவளே, மூச்சுக் காற்றாக இருந்து சுழி முனையில் நடனமிடும் கண்மணியே! எளியவன் ஆகிய எனக்கு மனம் இரங்கி அருள்புரிவாய்.

விளக்க உரை

  • மயில், குயில் போன்றவை சித்தர் பரிபாஷையுடன் தொடர்பு உடையவை. அம்பாள் உபாசனை செய்பவர் என்பதாலும், தமிழ், சம்ஸ்கிருதம் போன்றவை கற்ற பண்டிதர் என்பதாலும் அவரின் விளக்கங்களை குருமுகமாக பெறுக.
  • கெடி – நிறைவேறிவருஞ் செயல், அதிகாரம், மலைக்கோட்டை, ஊர், வல்லமை, புகழ்,அச்சம்
  • அளி – அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம், வண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 9 (2019)


பாடல்

பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
   பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
   கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
   ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
   அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே

அகத்தியர் – தற்க சாஸ்திரம்

கருத்துநீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும்  சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.

பதவுரை

தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.

விளக்க உரை

  • மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!