அமுதமொழி – விசுவாவசு – கார்த்திகை – 14 (2025)

பாடல்

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – திரு நீறு அணிதலின் பெருமையை உணர்த்தும் பாடல்.

பதவுரை

திருப்பாதிரிப்புலியூரில் உறையும் பெருமானே! தாயின் கருவிலே கிடந்தபோதும் உன்னுடைய‌ திருவடிகளையே எண்ணி தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன்; கருவில் இருந்து நீங்கி வெளிப்பட்டு உருவம் கிட்டிய பிறகும் உன்னுடைய‌ அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லிக் கொண்டு இருக்க‌ப் பழகியுள்ளேன்; மேன்மை உடையதும், வளமை உடையதும், பொலிமை தரத் தக்கதுமான  திருவைந்தெழுத்தை வாயால் ஓதித் திருநீறு அணியப் பெற்றேன்; ஆதலினால் அடியேனுக்கு நற்பயனைத் தரும் உன்னுடைய மார்க்கத்தைத் தருவாயாக.

விளக்கஉரை

  • கருவிலே இருந்த போதே உன்னை நினைக்கும் எண்ணம் பெற்றேன். ‘முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வாம்’ எனும் பெரிய புராண வரிகள் இங்கு சிந்திக்கத் தக்கது.

 

 

#அந்தக்கரணம் #அமுதமொழி  #சைவம் #தேவாரம் #நான்காம்_திருமுறை #திருநாவுக்கரசர் #திருப்பாதிரிப்புலியூர் #திருவடி # நீறுஅணிதல் #சைவத்திருத்தலங்கள் #திருமுறை #நடுநாடு #பாடல்_பெற்றத்_தலங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!