
பாடல்
இட்டி தாகவந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
கடிக ளாகிய அடிகளே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – அடியவர்களை இறைவனின் இயல்புகளை உரைக்கக் கூறும் பாடல்.
பதவுரை
இறைவரை உமக்கு ஏற்றவாறு போகம் வேண்டுவார் ஆயின் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் ஆயின் யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் ஆயின் வேகவடிவிலும் விருப்பம் கொண்டு நினைந்து வழிபாடு செய்து துதிக்கின்றவர்களே, நமக்குத் தலைவராகிய தலைவரும், மூத்தோனும், கடவுளும் ஆன அடிகள் கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற திருநீற்றுப்பச்சை ஆன உருத்திரச்சடை அல்லது கரந்தைப்பூமாலையா? தொழுவில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை எனும் மண்ணை ஓட்டில் பிச்சையேற்றுக் கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ? சொல்லுங்கள்.
விளக்க உரை
- நேரிழை – பெண்
- இட்டி – ஈட்டி, எசமான், பரிசு, விருப்பம், வழிபாடு.
- கரந்தை – திருநீற்றுப்பச்சை/உருத்திரச்சடை, ஒரு மரவகை, நீர்ச்சேம்பு, குரு, ,கரந்தைப்பூமாலை
- நினைந் தேத்துவீர் – அவ்வாறு வழிபட்டதால் அவர் இயல்பெல்லாம் அறிவீர்; ஆதலின் வினவுகின்றேன்; சொல்லுங்கள்