
பாடல்
செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
பொய்வகைஅன் றிதுநினது புத்திஅறிந் ததுவே
பொன்அடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே
திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்
கருத்து – ஐவகைத் துயரங்களையும் பொறுப்பதற்கு இன்றியமையாத அருட்சோதியை நல்கி அருளுமாறு வேண்டிய பாடல்.
பதவுரை
மாயைக்கு உட்பட்டும், மும்மலங்களுக்கு உட்பட்டும் துன்ப மிகுதியால் திகைத்தேன்; அதனால் செய்வகை அறியாமல் மயங்கியபோது நீ சிவபரம்பொருளகவும், குருமுதல்வனாகவும் திருமேனிக் கொண்டு எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு செய்து ‘ இனி மருள வேண்டா’ என்று எனக்குத் தகுந்தவாறு கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை அன்று; உன்னுடைய திருவுள்ளம் ஏற்கனவே நன்கு அறிந்ததாகும்; அவ்வாறு தெளிவு பெற்ற யான் இனி துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் அழகிய திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேன்; துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன்; ஆயினும், கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுக்க மாட்டாதவன் ஆகின்றேன்; ஆகவே இப்பொழுதே மிகப் பெரியது எண்ணக்கூடியதான திருவருள் ஞான ஒளியை எனக்கு அளித்தருள்வாயாக.
விளக்க உரை
- இச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் என்றும் பொருள் உரைப்பார்கள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.