
பாடல்
ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து
ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்
பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம்
கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கிடைக்கப்பெற்றவர்களின் சில செயல்களைக் கூறும் பாடல்.
பதவுரை
திருவருளால் பல உயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடிய காலத்தில் அந்த இன்பமானது அருள் கதிராய்ப் புறத்தில் தோன்றும். தான் எனும் நிலை அற்ற நல்ல தவம் உடையோருக்கு அந்நிலையில் அந்த உயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் இயலாது. பக்குவப்பட்ட அந்த உயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும்; விரும்பி பறக்கவும் செய்யும்; ஓர் இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் விடுபடாமல் உரைக்கக் கூடிய ஆற்றல் பெருகும் பண்ணொடு பொருந்தப் பாடும்; இவ்வாறான சில குறிப்புகளால் அந்த உண்மை புலனாகும்.
விளக்க உரை
- நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற
தன்னையே தந்தானென் றுந்தீபற
எனும் திருவுந்தியாரின் பாடலும் ஒப்பு நோக்கி உணர்க.