அமுதமொழி – விகாரி – வைகாசி – 15 (2019)


பாடல்

கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்துசிவனின் அட்ட வீர செயல்கள் சிலவற்றை குறிப்பிட்டும், அவன் வடிவம் குறித்து குறிப்பிட்டும், அவன் குணங்களைக் குறிப்பிட்டு கூறி தன்னை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விளிம்பும் பாடல்.

பதவுரை

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவனே, மேம்பட்ட தேவர்களின் தலைவனே, பால் பேதங்களை குறிப்பதாகிய குணம் குறிகள் ஆகியவை இல்லாதவர்களாகவும், மேம்பட்டவர்களும் ஆன ஞானியர்களின்  குணம் கொண்டவனே, தன்னால் வகுக்கப்பட்ட காலத்தில் ஒன்றி இருந்து அதை தன் வயத்தில் அடக்கி இருப்பவனே, கங்கையின் தலைவனே, எங்களுக்குத் தலைவனாக அமைந்து இருந்து கூற்றுவனுக்குக் காலனாக இருப்பவனே, மன்மதனை அழித்தவனே, விடத்தையே அமுதம் போல உண்டவனே, கூத்தாடும் இடமாகிய பொன்மயமான அம்பலத்தில் அதையே கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே, உலக வடிவமாகவும் இருந்து அதை தன்னுள் அடக்கியவனாகவும் இருந்து உலகத்தில் அதுவாகவும் கலந்து இருப்பவனே, தன்னுணர்வும் மெய்யறிவும் இல்லாத அடியேன் ஆகிய யான் பெரிய தவத்தை உடையவனும் தாயைப் போன்றவனும் ஆகிய உனக்குத் தொண்டனாகி, தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

விளக்க உரை

  • நணுகுதல் – சார்தல்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *