
பாடல்
எங்குஞ் சிவமே இரண்டற்று நிற்கில்நெஞ்சே
தங்குஞ் சுகநீ சலியாதே-அங்கிங்கென்
றெண்ணாதே பாழி லிறந்து பிறந்துழலப்
பண்ணாதே யானுன் பரம்
தாயுமானவர்
கருத்து – தாயுமானவர் மனதுக்கு உபதேசம் செய்தல் பற்றிய பாடல்.
பதவுரை
மனமே! சிவப் பரம்பொருள் இங்கு உள்ளது, அங்கு உள்ளது என்று எண்ணாமலும், வீணாக பிறப்பில் கிடந்து உழலுவது போன்ற செயல்களைச் செய்யாமலும், காட்சிப் பொருள்களை மனதால் மாறுபாடு கொண்டு இரண்டு என்று எண்ணாமல் அனைத்திலும் ஒன்றாகி நிற்பது சிவப் பரம்பொருளே என்று எண்ணுவாய் என்றால் யான் உனக்கு அடைக்கலமாவேன்; அதனால் உனக்கு சுகம் உண்டாகும் என மனதுக்கு உபதேசம் செய்கிறார் தாயுமானவர்.
விளக்க உரை
- அருணகிரிநாதரின் சீர்பாத வகுப்பில் கூறப்பட்ட
.. உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ரநுபூதி ..
எனும் பாடலுடன்
விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம் இருள் ஒளி என்ற ‘துவத்துவ’ உணர்ச்சிகளை விலக்கி பார்க்கும் இடமெல்லாம் பரம் பொருளை அன்றி வேறு ஒன்றையும் இல்லா நிர்விகல்ப சமாதி நிலையில் கொண்டுவிடும் எனும் விளக்கத்தோடும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது