அமுதமொழி – பிலவ – ஆனி – 7 (2021)


பாடல்

ஒன்றன் றிரண்டன் றுளதன் நிலதன்று
நன்றன்று தீதன்று நானன்று-கின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்

திருநெறி 6 – திருவுந்தியார் – திருக்களிற்றுப்படியார்

கருத்து – சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குரு உணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை  எவ்வாறு எனில் இது இரண்டானது எனவும்,  ஒன்றுமல்ல எனவும், பிரிந்து இருப்பதால் இரண்டும் அல்ல எனவும், எக்காலத்திலும் உள்ளதும் அல்ல எனவும், ஆன்மா சிவப் பற்றினை நுகரும் நுகர்ச்சி உண்மையால் இல்லதும் அன்று எனவும், பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டதால் நன்றும் அன்று தீதும் அன்று எனவும்,  தன்மை முன்னிலே படர்க்கை எனச் சுட்டி உணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற் பட்டு இருப்பதால்  நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று எனவும், இதுவே ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையும் அல்ல எனவும், இது சிவனும் அல்ல எனவும், இது  சிவஞானமும் அல்ல எனவும், உலகின் தோற்றத்திற்கு முதன்மையாக இருப்பதால் ஆதியுமல்ல எனவும், எல்லாவற்றுக்கும் முடிவாக இருப்பதால்  அந்தமுமல்ல எனவும் எந்த வகையினிலும் உரைக்கப்பட முடியாது. சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும்.

விளக்க உரை

  • நன்றன்று தீதன்று – வினைகள் அறுபட்ட நிலை
  • தலையன் றடியன்று – தோற்ற ஒடுக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – சித்திரை – 31 (2021)


பாடல்

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனுங் காணா அரன்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

கருத்து – தற்போதங்கெட இறைவன்பால் அன்பு செய்வதற்கு உரிய நெறிகள் மூன்று என்பதும், இந்நெறிகளில் நிற்பவர்களுக்கு இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

சிவநெறி வழிகளாகிய நல்லனவற்றை அருளும் சிவ தன்மையான  சரியையை உடையவன், கிரியையையுடையவன், நல்லனவற்றை அருளும் சிவ யோக தன்மை உடையவன்,  நல்ல சிவஞானத்தை உடையவன் ஆகிய இவர்களில் எவராக இருப்பினும் ‘நான்’ எனும் அகங்காரம் கெடும் தன்மை கெட்டு அன்பு செய்வார்கள் எனில் ஆன்ம போதம் உடைய அவர்கள் இடத்தில் எவராலும் காணுதலுக்கு அரிதான சிவன் அப்பொழுதே வந்து தோன்றுவான் என்று அறிவாயாக.

விளக்க உரை

  • சிவதன்மம், சிவயோகம், சிவஞானம் என்னும் மூவகை நெறிகளை மேற்கொண்டு அதன்படி நிற்பதால் வரும் வரும்பயன் நான் என்னும் தற்போதம் அழிதலே என்பது பெறப்படும்.
  • சிவதன்மம் – சரியை கிரிகை இரண்டும் அடங்கப் பெற்றது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 1 (2020)


பாடல்

அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

கருத்துசிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.

பதவுரை

நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.

விளக்கஉரை

  • அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
  • சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
  • நிகளம்-விலங்கு
  • சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 28 (2019)


பாடல்

ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்
மாறாத எண்வகையாய் மற்றவற்றின்-வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும்
கடனாய் இருக்கின்றான் காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப் படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

கருத்துவினைப்பட்ட  ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதல் பொருட்டு சிவன் உருவம், அருவம், அரு உருவம் கொண்டிருந்து அருளும் முறை உரைக்கும் பாடல்.

பதவுரை

சங்கார காலத்திலே உயிர்கள் ஒடுக்கம் அடையும் போது அதற்கு காரணமாக இருந்து அதன் முடிவாக இருக்கிறான்; உலகம் படைக்கப்படும் காலத்தில் தான் முதல்வனாக இருந்தும் அதனில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறான்; எக்காலத்திலும் மாறாத எண்குணங்களான தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல், இயற்கை உணர்வினன் ஆதல், பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை, வரம்பில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத அருள் உடைமை, வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல் ஆகியவை கொண்டும் இருக்கின்ற போதிலும் அவற்றில் இருந்து வேறுபட்டவனாக அதன் உடனாகவும், உருவம் கொண்டும் என்றும் வினைபட்ட ஆன்மாக்கள் மலபரிபாகம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு அருளுதலை கடனாக உரியவனாகவும் இருக்கிறான்.

விளக்க உரை

  • சிவன் உலகத்தோடு ஒன்றாய் வேறாய், உடனாய் இருக்கின்றான் என்று தொன்றுதொட்டுக் கூறிவருதலும், முதல்வனாகிய ஈசனிடத்து இம்மூன்று தன்மைகளும் ஒருங்கு கூடியிருத்தல் தெளிவாகும்; சங்கார காலத்திலே உருவமின்மை கொண்டும், சிருட்டி காலத்திலே உருவம் கொண்ட அட்டமூர்த்தியாயும், இவற்றுக்கெல்லாம் வேறாயும் இவற்றுக் கெல்லாம் உடனாயும் இருக்கின்ற அருள் வடிவு கொண்டு கர்த்தாவாகி எக்காலமும் இவ்வாறு நிகழ்த்துதலை முறைமையாகக் கொண்டிருப்பான் எனும் விளக்கமும் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 15 (2019)


பாடல்

ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய்
மாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் – வேறாய்
உடனா யிருக்கு முருவுடைமை யென்றுங்
கடனா யிருக்கின்றான் காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் (மெய்கண்ட சாத்திரம் – சைவ சித்தாந்தம் )

கருத்துஈசன் உலகுயிர்த் தொகுதியாகி, அவைகளே தானுமாகி அதில் இருந்து விலகியும் இருக்கும் முத்திறத்தினை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் மூலகாரணத்தில் அனைத்தையும் ஒடுங்க செய்தும், உலக அழிவு செய்தும், தானே  அனைத்தும் சாட்சியாக இருந்து முழு முதற் பொருளாய் இருப்பவனும், படைப்பு ஆகிய சிருஷ்டி கரணத்தில் சக்தியுடன் கூடி இரண்டாகியும், தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையு உணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை  ஆகிய எண் குணத்துடன் கூடியும், சிருஷ்டியில் குறிப்பிடப்பட்ட உலக உயிர் தொகுதியுடன் பிரிக்க இயலாதவாறு கூடியும், உலக உயிர்களின் தன்மை தனக்கு எவ்வகையிலும் தன்னைச் சேராதவாறு தனித்து இருப்பவனும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், அதனை  அறிவிக்க உதவும்கால்  உயிர்களோடு ஒன்றாகியும்,  உடனாகி இருக்கும் உயிர்க்கு உயிராய் உள் நின்று உயிரின் தன்மைகளை அறிவித்தலால் வேறாகியும், தன் உண்மையினை எக்காலத்தும் தனக்குரிய முறைமையாகக் ண்டிருக்கின்றான் அம்முதல்வன்; அஃது  அவனது இயல்பு என்பதனை மாணவனே கண்டுணர்வாயாக.

விளக்க உரை

  • சத்தியிடமாய் நின்று இருக்கும் காலத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் சூரியன், திங்கள் ஆன்மா எனும் எண்பேருருவினாகி நிற்கின்றான் எனும் சில இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. சிவனின் குணங்களில் எண் குணம் என்பது பிரதானமானதால் இப் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஈசனுக்கும் உலக உயிர்த் தொகுதியுடன் கூடிய தொடர்பு பேதம், அபேதம் பேதா பேதம் என்னும் மூன்று வகைப்படும். ‘முதலொன்றாய், மாறாத வெண்வகையாய்‘ எனும் வரிகளால் அபேத நிலையினையும், ‘ஈங்கிரண்டாய்‘ எனும் வரிகளால்  பேத நிலையினையும் ‘மற்றிவற்றின்  வேறாய், உடனா யிருக்கு முருவுடைமை‘ எனும் வரிகளால் பேதா பேத நிலையும் அறியப்படும்

இதனை

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே

எனும் திருமந்திரப் பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 17 (2018)

 

பாடல்

காண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் – காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் இன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

பதவுரை

அறிதல் எனும் பொருள்தரும் காணுதல் தொழிலையுடையதும், அறிவிக்க அறியும் தன்மை உடையதுமான ஆன்மாவைத் அகத்தில் தரிசித்த பெரியோர்களே சிவனைக் காணாமல் காண்கின்றோம் என்ற சுட்டறிவு நீங்கச் சிவனைக் காண்பார்கள். காணாமல் காண்பது எவ்வாறு எனில், காண்பவன் ஆகிய ஆன்மா, காண்கின்றவனால் காணப்பட்ட பொருள்களாகிய சிவம் என்கிற இரண்டு தன்மையும் இல்லாமல் இரண்டும் சிவத்துடன் ஒன்றாகி ஞான அறிவாகிய மெய்ப்பொருளை உள்ளவாறு காண்கையினாலே  கண்டவர்கள்  என்று அறிவாயாக.

விளக்க உரை

  • காண்கின்ற பொருள் என்பது  சத்து, அசத்து என்னும் இருதிறப்பொருள்கள்.
  • நிலைபெற்ற சத்தாக உள்ள ஆன்ம நாட்டத்தின் இறையோனாகிய சிவபரம்பொருளை காணுதல். அஃதாவது தற்போதம் கெடத் திருவருளோடு உடனின்று ஒன்றியுணர்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 25 (2018)

பாடல்

அன்றுமுதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்குள் இன்னதெனச் சென்றதிலை – இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வா றிருந்த தது.

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

அனாதி காலம் தொட்டு கர்த்தாவுக்கு ஆளாகி  திருவருளுடனே கூடிப் பின்பு அன்பு வழியுடன் பக்தி கொண்டு சென்றவர்களில் ஒருவரானாலும் சிவானுபவம் இப்படியிருந்ததென்று சொல்லக்கூடிய  உவமை  இதுவரையும் பொருந்தினதில்லை; ஆகையால் இப்போது இந்தச் சிவானுபத்தை இப்படியிருந்ததென்று எப்படிச் சொல்லப்போகிறேன் எனில் அந்தச் சிவானுபவம் போலவே இருந்தது.

விளக்க உரை

  • சிவானுபவத்துக்கு வேறோர் உவமை சொல்லக்கூடாது
  • சிவானுபவம் என்பது அனுபவிக்க முடியுமே அன்றி எவ்வாறு இருந்ததென்று அளவிட்டுக் கூறமுடியாததாகும்.  அதற்கு ஒப்புமை எதுவும் கூற இயலாது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 28 (2018)

பாடல்

ஆக்கி ஒருபொருளா ஆதாரத் தப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் – பார்க்கில்
இவனாகை தானொழிந்திட் டேகமாம் ஏகத்(து)
அவனாகை ஆதார மாம்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார்

பதவுரை

தன்னிலே தன்னை விளங்குமாறு செய்து விசாரித்தினால், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும் பிரபஞ்சத்திலே உண்டான விஷயங்களை விசாரித்து அறிந்து இவையெல்லாம் பலப்பல மாயைகள் தான் என அறிந்து அவைகளை அன்னியமாக்கி அணுவிலும் அணுவானவற்றைக் காணும் போது, நம்முடைய ஞானத்தினாலே உயிர்வாழ்கிறோம் எனும் தன்மை கெட திருவருளோடு ஒன்றாவன் எனும் தன்மை இதற்கு ஆதாரமாக விளங்கும்.

விளக்க உரை

  • ஆதார யோகத்துக்கு உபாயம் சொன்னது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 30 (2018)

பாடல்

அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதியெனப் பெற்ற அணுவை – அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ(டு) எவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

பதவுரை

எல்லா மும்மல ஆன்மாக்களும் அனாதி காலம் தொட்டு சிவனுக்கு உடைமை ஆகையால், சிவனைப்போல அனாதித்தன்மை பெற்ற அணுவான அந்த மும்மல ஆன்மாவை, அனாதி காலம் தொட்டுவரும் ஆணவம், மாயை, கன்மம் என்கிற துன்பங்கள் முற்றிலும் நீங்கும்படி அகலச் செய்து சிவசக்தி சொருபமாக இருந்து காத்தல் தொழில் செய்தல் சிவனுக்கு கடமை என்று அறிவாயாக.

விளக்க உரை

  • இருத்தலிலும், முத்தியிலும் ஆன்மாவுக்குச் செயலில்லை என்பது பெறப்படும்

சமூக ஊடகங்கள்