
பாடல்
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – திரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.
பதவுரை
எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள். அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.
விளக்க உரை
- நேரிழை – பெண்
- நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
- கலை – கூறு
- ‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்
- ஒத்தல் – உள்ளம் ஒத்தல்
- ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.