அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 6 (2019)


பாடல்

காடாடு பல்கணம் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா மகேந்திர வெற்பா என்னும்
வினையேன் மடந்தைவிம் மாவெருவும்
சேடா என் னும் செல்வர்மூவாயிரர்
செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்து – ஈசனின் பெருமைகளைப் போற்றி பாடும் பாடல்.

பதவுரை

பருவம் அடையாத பெண் துன்பமும் பித்தமும் கொண்டு அதனால் விம்முதலும், வெருவதலும் கொண்டு “சுடுகாட்டிலே கூத்தாடும் பல பூதங்களும் உருமாறிச் சூழ்ந்து வர அங்கு கூத்து நிகழ்த்துபவனே, நீண்ட பகற் பொழுது முழுவதும் விரைந்து ஓடிச் சென்ற பன்றியினை விரட்டி காட்டில் பின் தொடர்ந்த வேடனே, மகேந்திர மலைக்குத் தலைவனே, உன் திருவடிகளை ஏத்தியதால் சிறந்த ஞானப்பிரகாசம் அடைந்த மூவாயிர அந்தணர்கள் கைகளால் தொழப்படும் கூத்தனே, மனதை மயக்கும் குணக்குன்றே!” என்று மகிழ்ச்சியினை தருகின்ற தில்லை அம்பலக் கூத்தனைப் பலவாறாக விளிக்கின்றாள்.

விளக்க உரை

  • வாமி – பார்வதி, துர்க்கை
  • ஆச்சி – அம்மா, அக்கா, பாட்டி, ஆசானின் மனைவி
  • காடுஆடு பல்கணம் – சுடுகாட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் கூட்டங்கள்
  • கேழற் கடும் பின் – பன்றியினது கடிதாகிய பின்னிடத்தில்
  • கான் – காடு
  • சேடன் – பெருமை உடையவன்
  • செல்வராகிய செழுஞ்சோதி அந்தணர்கள் – சோதி   வேள்வித் தீ; அதை போற்றியதால் செழுஞ் சோதி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 15 (2019)


பாடல்

கோலமே மேலை வானவர் கோவே
   குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
   காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
   கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
   தொண்டனேன் நணுகுமா நணுகே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்துசிவனின் அட்ட வீர செயல்கள் சிலவற்றை குறிப்பிட்டும், அவன் வடிவம் குறித்து குறிப்பிட்டும், அவன் குணங்களைக் குறிப்பிட்டு கூறி தன்னை அடியாராக ஏற்றுக் கொள்ள வேண்டி விளிம்பும் பாடல்.

பதவுரை

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவனே, மேம்பட்ட தேவர்களின் தலைவனே, பால் பேதங்களை குறிப்பதாகிய குணம் குறிகள் ஆகியவை இல்லாதவர்களாகவும், மேம்பட்டவர்களும் ஆன ஞானியர்களின்  குணம் கொண்டவனே, தன்னால் வகுக்கப்பட்ட காலத்தில் ஒன்றி இருந்து அதை தன் வயத்தில் அடக்கி இருப்பவனே, கங்கையின் தலைவனே, எங்களுக்குத் தலைவனாக அமைந்து இருந்து கூற்றுவனுக்குக் காலனாக இருப்பவனே, மன்மதனை அழித்தவனே, விடத்தையே அமுதம் போல உண்டவனே, கூத்தாடும் இடமாகிய பொன்மயமான அம்பலத்தில் அதையே கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே, உலக வடிவமாகவும் இருந்து அதை தன்னுள் அடக்கியவனாகவும் இருந்து உலகத்தில் அதுவாகவும் கலந்து இருப்பவனே, தன்னுணர்வும் மெய்யறிவும் இல்லாத அடியேன் ஆகிய யான் பெரிய தவத்தை உடையவனும் தாயைப் போன்றவனும் ஆகிய உனக்குத் தொண்டனாகி, தவத்தின் பயனாய்க் கிடைத்த உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

விளக்க உரை

  • நணுகுதல் – சார்தல்

Loading

சமூக ஊடகங்கள்