பாடல்
மூலம் – 19
பாடிக்கொண் டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண் டாடித் திரிந்திட வேஎனைத் தொண்டு கொள்வாய்
தேடிக்கொண் டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கை யெல்லாம்
சாடிக்கொண் டாடிய வாகாழி யாபதுத் தாரணனே.
பதப்பிரிப்பு – 19
பாடிக்கொண்டாடிப் பணிந்திடும் அன்பர்தம் பாதமலர்
சூடிக்கொண்டாடித் திரிந்திட வேயெனைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டாடி வருவோர்கள் வல்வினைச் சிக்கையெல்லாம்
சாடிக் கொண்டாடியவாகாழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – உன்னை பணியும் அடியார்களின் பாதங்களை தன் தலைமேல் சூட்டவேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
உன்னை தேடியும் கொண்டாடியும் கொண்டாடி வருவோர்களுடைய தீர்க்க இயலாதது ஆகிய வலிமையான ஊழ்வினைகளை தடைகளை எல்லாம் அடித்தும் ஒடித்தும் செய்து அதைக் கொண்டாடிய காழிப்பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! உன்னை எப்பொழுதும் நினைவில் கொண்டு பாடுவதைத் கொண்டாடி பணிந்திடும் அன்பர்களின் மலர் போன்ற பாதங்களை என் தலைமேல் சூடிக் கொண்டாடி திரியும் மாறு எனக்கு தொண்டு செய்ய அருள்வாய்.
விளக்க உரை
- வல்வினை – வலியதாகிய ஊழ், தீவினை, கொடுஞ்செயல், வலிதாகிய தொழில், வலிய வினைச்சொல்
- சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்