அமுதமொழி – விகாரி – வைகாசி – 10 (2019)


பாடல்

கிளியே அருண வொளிச்சுடரே
      கிருபானனமா முழுமதியே
   கெடியாம் உன்றன் இருபதங்கள் 
      கிடைக்கும் வகையும் பெறுவேனோ

ஒளியா யிருக்குங் கனகசபை
      ஒன்றே இரண்டே விபரிதமே
   உரைக்குங் கருணாநிதிமயிலே
      உதித்த பரமனுடன் ஆடும்

அளியா ரமுதே பரம்பரையே
      அணுவில் அணுவாய் அண்டபிண்டம்
   அமர்ந்த சிவமே ஞானவெளிக்(கு)
      அரசே வேதத் துட்பொருளே

வளியே சுழியில் நடமிடுகண்
      மணியேஎளியேற்கினியருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துஅம்பிகையின் அருளையும், அவள் தன்மைகளையும் வியந்து அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, கிளியைப் போன்றவளே, சூரியனைப் போன்ற பிரகாசம் உடைய சுடர் போன்றவளே, முழுமதி போன்று கருணையைப் பொழிபவளே, வல்லமை உடையதும், புகழ் உடையதும் ஆன சிறப்புமிக்க உன் பாதங்கள் கிடைக்க எளியவன் ஆகிய யான் பெறுவேனோ? ஒளிவடிவாக இருக்கும் கனக சபைதனில் ஒன்று எனவும், இரண்டு எனவும் அறிய முடியாதபடி சிவசக்தி ரூபமாக இருப்பவளே, அடியார்களுக்கு அருளை வழங்குவதில் கருணை நிதியாக இருப்பவளே, மயில் போன்ற அழகுடையவளே, தன்னில் ஒருபாதியாக மிகுந்து இருக்கும் பரமனுடன் ஆடியும், அருளும் இரக்கமும் கொண்ட அமுதமே, முழு முதல் தெய்வமாக ஆனவளே அணுவிற்கணுவாய், அண்டத்திலும் பிண்டத்திலும் அமர்ந்த சிவம் ஆனவளே, பரஞான வெளிக்கு அரசே, வேதத்தின் உட் பொருளாய் இருப்பவளே, மூச்சுக் காற்றாக இருந்து சுழி முனையில் நடனமிடும் கண்மணியே! எளியவன் ஆகிய எனக்கு மனம் இரங்கி அருள்புரிவாய்.

விளக்க உரை

  • மயில், குயில் போன்றவை சித்தர் பரிபாஷையுடன் தொடர்பு உடையவை. அம்பாள் உபாசனை செய்பவர் என்பதாலும், தமிழ், சம்ஸ்கிருதம் போன்றவை கற்ற பண்டிதர் என்பதாலும் அவரின் விளக்கங்களை குருமுகமாக பெறுக.
  • கெடி – நிறைவேறிவருஞ் செயல், அதிகாரம், மலைக்கோட்டை, ஊர், வல்லமை, புகழ்,அச்சம்
  • அளி – அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம், வண்டு

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *