
பாடல்
சோம்பலா யிருந்தக்கால் காயசித்தியாமோ
சுணக்கணாய்த் திருந்தக்கால் வாதசித்தியாமோ
கூம்பலாய் மனம்போனால் யோகசித்தியாமோ
குளிகைக்குச் சாரணைதான் தீராயானால்
ஆம்பலா யாகாச கெவுனம்போமோ
அடியான வழலைவிட்டால் சித்தனாமோ
காம்பலாய்க் காமத்தின் வழியேசென்றால்
காலூன் றுஞ்சிவயோகக் கருத்துப்போச்சே
போகர் கற்பம் 300
கருத்து – குவிக்கப்படா மனத்தினால் எதையும் பெறமுடியாது என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
விதிக்கப்பட்ட மார்கங்கள் கொண்டு, மற்றும் உபதேசிக்கப்பட்ட மந்திரங்களை ஜபம் செய்யாமல் சோம்பல் கொண்டு இருந்தால் உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி ஆனதும், அணிமா மகிமா முதலிய சித்திகள் ஆனதுமான காயசித்தி அடையக் கூடுமோ? ஒன்றிலும் நிலை பெறாமலும் முழுமை பெறாமலும் நாய் போன்று அனைத்தையும் விரும்பி இருந்தால் ரச வாதம் எனப்படுவதான வாத சித்தி அடையக் கூடுமோ? மனமானது குவிக்கப்படாவிட்டால் யோக சித்தி என்றும், இறை நிலையை அடைதலை குறிப்பதானதுமான சமாதி நிலையை எய்த இயலுமோ? மந்திர சக்தி உடையதும், படர்ந்து செல்லும் வகையினதும் ஆன வெள்ளை நிறமுடையதுமான அல்லிப்பூ கொண்டு மிகப் பெரியதான ஆகாயத்தினை மூட இயலுமோ? மிகச் சிறியதாக இருப்பினும் காமத்தின் வழியே சென்றால் உயிர்கள் காலூன்றுவதற்கு காரணமாக இருக்கும் சிவயோகம் அதன் நிறம் மாறி கருமை நிறம் கொள்ளும்.
விளக்க உரை
- கூம்பல் – குமிழமரம்
- ஆம்பல் – அல்லி, வெண்ணிறப் பூ, ஆம்பற்குழல், பண்வகை, மூங்கில், ஊதுகொம்பு, யானை, ஆம்பன்முக வரக்கன், கள், துன்பம், அடைவு, சந்திரன்
- கெவுனம் – மிக
- வழலை என்பதை வாலை எனக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் இருப்பின் மன்னிக்க.