அமுதமொழி – விகாரி – வைகாசி – 9 (2019)


பாடல்

பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
   பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
   கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
   ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
   அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே

அகத்தியர் – தற்க சாஸ்திரம்

கருத்துநீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும்  சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.

பதவுரை

தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.

விளக்க உரை

  • மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 28 (2019)


பாடல்

சாரான அண்டமதில் நிறைந்த ஈசன்
   சகலகலை வல்லவனாய் இருந்த மூர்த்தி
பேரான ஐம்பூதம் ஆன மூர்த்தி
   பேருலக மேலுலகம் படைத்த னாதன்
கூரான சுடுகாடு குடியிருந்த மூர்த்தி
   கூறுகிற ஆசனத்தில் ஆன மூர்த்தி
ஆரான ஆறுமுகம் ஆன மூர்த்தி
   அம்பலத்தில் ஆடுகின்ற ஐயர் தானே

தர்க்க சாஸ்திரம் – அகத்தியர்

கருத்துஅம்பலத்தில் ஆடும் ஈசனே ஆறுமுக மூர்த்தி ஆன முருகப்பெருமான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

அண்டங்களுக்கும் மையப் பொருளாகவும், கருப்பொருளாகவும் இருந்து அதில் நிறைந்து இருப்பவரும், அறுபத்து நான்கு கலைகள் அனைத்திலும் வல்லவனாக இருந்த மூர்த்தியாக இருப்பவரும், பெரியதானதும் ஐம்பூதங்கள் ஆனதும் ஆன நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு  மூர்த்தி ஆக இருப்பவரும், தேவர்களுக்கு உரித்தான பேருலகம் படைத்த நாதனாக இருப்பவரும், நுட்பமானதும், சிறப்பு உடையதும் ஆன சுடுகாட்டில் குடியிருந்த மூர்த்தியாக இருப்பவரும், அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படியானதும், யோக நிலையில் அமர்ந்திருப்பவரும், ஆறு ஆதாரங்களுக்கும் காரணமான ஆறுமுகமாகவும் ஆன மூர்த்தியாகவும் ஆகி பொன்னம்பலத்தில் ஆடுகின்றவராகவும் இருந்து வியக்கதக்கவராகவும் இருப்பவர் ஈசன்.

விளக்க உரை

  • ஈசனின் பல்வேறு மூர்த்தங்கள் சுவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியாசனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம் போன்ற பல்வேறு ஆசனங்களில் இருக்கும் கோலங்களில் அமையப் பெறும். அவ்வாறு எல்லா இருக்கை நிலை கொண்டவர் எனவும் உரைக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • ஐயர் – உயர்ந்தவர், வியக்கத்தக்கவர்

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

மாணவன்:
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுக்குரிய பிரமாணங்களை கூறும் முன்  அவற்றின் இயல்புகள் பற்றிக் கூற வேண்டும்.
ஆசிரியர்
பிரமாணம்  வடசொல், அளவை  தமிழ்ச்சொல். அளப்பவன்(பிரமாதா– உயிர் அல்லது ஆன்மா), அளத்தற்கருவி (பிரமாணம்  உயிரின் அறிவாற்றல் அல்லது   ஆன்ம சிற்சக்தி), அளக்கப்படும் பொருள்(பிரமேயம்)

பதி, பசு மற்றும் பாசங்கள்) ஆகிய மூன்றாலே அளத்தல் நிகழும்.
புறப் பொருள்களை அளக்க கருவிகள் இருத்தல் போல், அகக் கருவிகளைஅளக்க அவரவர் அறிவாற்றலே பிரமாணமாகிறது.
தார்க்கியர்கள்(தருக்க நூல் சார்ந்தவர்கள்) கண் முதல் உடல் வரையிலான 5 வகை பொறிகளையே (பஞ்ச இந்திரியங்கள் ) பிரமாணம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களும் வேறு ஒரு பொருளாகிய அறிவால் அளக்கப்படுவதாலும், தான் மற்றொன்றினாலும் அளக்கப் படாததுமாகவும், பிறவற்றை அளப்பதாகவும் இருப்பதே உண்மை அளவை. எனவே  தார்க்கியர்கள் கருத்து பொருந்தாது.
மாணவன்:

சைவ சித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை?

ஆசிரியர்

எண்
பிரமாணம்
விளக்கம்
1
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
கண்ணால் கண்டேன்
2
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
3
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
4
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப்  பிரமாணம்)
முயற் கொம்பு
5
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
6
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
தாமரை முகம்
7
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
8
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
9
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
10
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
  
இவைகளில் முதல் மூன்றும் பிரதானமானவை. மற்றவைகள் அவைகளின் வகையே.

சமூக ஊடகங்கள்

தேடல்

தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் – இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)

1.அனுபவம்
2.அனுமானம்
3.ஆப்தவாக்கியம்.

1.அனுபவம் – தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)

2.அனுமானம் – பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)

3.ஆப்தவாக்கியம் – விவரம் அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது. (அங்க வாங்கு, நிச்சயம் விலை மலிவு)

தேடுதலைத் தொடர்வோம்..

சமூக ஊடகங்கள்