பாடல்
மூலம்
சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்
பதப்பிரிப்பு
சீர்க் குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குஉள உலகில் அம்மா! அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும்என் பார்வை தானும்
கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்
கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து மேலும் உரைக்க இயலாமை குறித்து உரைத்தப் பாடல்.
பதவுரை
நன்மை, பெருமை, புகழ் ஆகியவற்றை இயல்பாக உடைய குமரேசன் அழகிய பெரியதான வடிவம் கொண்டவனானாகவும், தோற்றப் பொலிவு உடைய ஒளி கொண்டவனாகவும், இளமையும், அழகு எல்லாம் உடையவனாகவும் உள்ளான்; இந்த அழகிற்கு ஈடாக உலகில் எவன் உளான்; அம்மாடி! இந்த அற்புதத் தோற்றம் கொண்டவனை எத்தனைக் காலம் பார்த்தாலும் அந்தத் தோற்றப் பொலிவானது எனக்குத் திகட்டவில்லை.
விளக்க உரை
- சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு