
பாடல்
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து – அநித்திய பொருள்களின் தன்மை அறிந்து விலக்கி மெய் அடிமை ஆக்க வேண்டி விண்ணப்பித்தல்.
பதவுரை
தேவர்கள் முதல் மும்மூர்த்தி ஆகிய அனைவருக்கும் ஆதியாய முதல் தெய்வமே, பெரு மதிப்பிற்கு உடைய என் தலைவனே! உலகம் மற்றும் அதில் காணப்படுவதும் நிலையற்ற தன்மை உடையதும், அநித்தியம் ஆனதும் ஆன அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்கி விடுவிக்குமாறு செய்து உன் அகத்தடிமை ஆகி உனக்கு மெய்யடிமையைச் செய்ய, அருள் புரிவாயாக. அதன் பொருட்டு இந்த உலகிலே மேம்பட்டது ஆன சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்துள்ளேன்.
விளக்க உரை
- புறம் அல்லா அடிமை – அகத்தடிமை
- மெய்யடிமை – பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து, செய்யும் செயல்கள் எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும் இறைபணியாகிய அடிமைத் திறம்