பாடல்
அருளா ரமுதப் பெருங்கடல்வாய்
அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளார் ஆக்கை இதுபொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – உலகியல் பற்று ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
எம்பெருமானே! உடையவனே! பெரும் கடல் போன்றதும், அருள் அமுதம் போன்றவனும் ஆகியவனே! அவ்வாறான அமுதக் கடலின் உன் அடியார்கள் எல்லாம் புகுந்து இருந்து திளைத்திருக்க மெய் பற்றிய அறிவு இல்லாமையால் இருள் தருவதான அறியாமை நிறைந்த உடம்பாகிய இதனைச் சுமந்து இளைத்தேன்; இவ்வாறான மயக்கம் பொருந்திய மனத்தை உடைய ஒரு பித்தன் வருகிறான் என்று இந்த உவுலகில் என்னைப் பார்ப்பவர்கள் அஞ்சாத வண்ணம் நான் வீடுபேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.
விளக்க உரை
- உலகியல் தொடர்பு அறுந்த பின்னரே மெய்யறிவு விளங்கப் பெறும். மெய்யறிவு பெற்றப்பின் உலகியல் பற்று கொண்டோரை பித்தன் என்று கூறுவார்கள். அவ்வாறான நிலை ஏற்படாமல் காத்து அருள்வாயாக என்று விண்ணப்பிக்கிறார்
- உன்மத்தன்- பித்தன்