
பாடல்
கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!
அழகணிச் சித்தர்
*கருத்து – மெய்யறிவு நிலை கண்டவர்களை நமன் அணுகான் எனும் பொருள் பற்றிய பாடல்.*
பதவுரை
அடிவயிறு எனப்படுவதாகியதும், கணபதியின் இருப்பிடமானதும் ஆன மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி எனும் சக்தியானது கொல்லனின் உலை போன்ற வெப்பமுடன் அங்கே சிறிய நாகமாக சுருண்ட நிலையில் அமைந்துள்ளது. அந்த சக்தியை எழுப்பி அதை மற்ற ஐந்து நிலைகளான மணிபூரகம், சுவாதிஷ்டானம், அனாகதம், விசுக்தி மற்றும் ஆக்ஞா வழியாக சகஸ்ராரத்திற்குக் கொண்டு சேர்ப்பதையே பிறப்பின் நோக்கமாகக் குறிப்பிடுவர். இதையே சித்தர்கள் பரிபாஷையில் சாகாக் கல்வி, வாசி யோகம், தனையறிதல் எனப் பல்வேறு வகைகளில் உணர்த்துவர். அவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்பி அதை சகஸ்ராரத்தில் நிலை நிறுத்த வல்லவர்களுக்கு மரணம் என்பது கிடையாது. இதைப் பூடகமாக இவர்களை மாய்ப்பதற்காக அணுகும் எமன் அவர்களின் மெய்யறிவு நிலை கண்டு அந்த முயற்சியை கைவிட்டு அவ்விடத்தினின்று அகலுவான் என்று அழகணி சித்தர் விளக்குகிறார்.
விளக்க உரை
- சித்தர்கள் பரிபாஷையில் வயிறு என்பதை அடிவயிறு என்றும் கருதலாம். இதையொட்டி மூலாதாரம் என பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
விளக்க உரை எழுத உதவி செய்த மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.