
பாடல்
மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே
நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – மூம்மலங்களுக்கு உட்பட்டவனாகிய இராவணன் தவறு இழைத்த போதும், அது குறிந்து வருத்தம் கொண்டு வணங்கி நின்றதால் பல பேறுகள் அடைந்தான். அது போல் மறுமை அடையாமல் இருக்க திருச்சோற்றுத்துறை ஈசனை வணங்குங்கள் எனும் பாடல்.
பதவுரை
மறுமை எனும் பிறப்பு ஏற்படாத வகையில் அதனை அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் நிலையற்ற பொருள்களால் ஆன உலக விஷயங்களில் மனத்தை நிலையாக வைக்காமல், பல மெய் ஞான நூல்களையும் கற்றதால் அக்காரணம் பற்றி செருக்கு கொண்ட அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை துன்புறுத்திப் பின் அவனுக்கு அருள் செய்த திருச்சோற்றுத் துறையனை, பலகாலமும் பிரானின் பெருமைகளை இடையறாது துதித்துப் பேசுங்கள்.