அமுதமொழி – விகாரி – ஆனி – 13 (2019)


பாடல்

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே கறைபழுத்த
துறைத்திங் தமிழின் ஒழுகுகறுஞ்
சுவையே அகங்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கும்
உடுக்கும் புவனம் கடந்துன்ற
ஒருவன் திருவுள் ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கருத்துசிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல அமைந்தப் பாடல்.

பதவுரை

மனிதனின் கற்பனையால் புனையப்பட்டு உருவாக்கப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாகவும், தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழினைக் கொண்டு  மாலையாக தொடுக்கப்படது போன்றதும் ஆனவளே, மும்மலங்களில் ஒன்றானதும் முதன்மையானது ஆன ‘தான்’ என்ற அகந்தைக் கிழங்கைக் கிள்ளி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் மெய்ஞான விளக்காக திகழ்பவளே, பனி மலைச் சிகரமாகிய இமயமலையில் விளையாடும் இளமையானதும் மென்மையானதும் ஆன பெண் யானைப் போன்றளே, புவனமெல்லாம் கடந்து நின்று அதை தன்னுடைய ஆடையாகவும் அணியும் பரம்பொருள் தன் உள்ளத்தில் ‘அழகு தோன்றுமாறு எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்’ போன்றவளே, வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழல் காட்டினை ஏந்தும் வஞ்சிக் கொடியே, மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வே வருக வருக என்று மீனாட்சியம்மையை குமரகுருபரர் அழைக்கிறார்.

விளக்க உரை

  • மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறுகிறது இப் பாடல்.
  • இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது, குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு.
  • பிள்ளைத்தமிழ் – தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயாsசாரியர்கள், புலவர் பெருமக்கள், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்து, கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
  • தமிழின் ஒழுகுகறுஞ்சுவையே – மொழியின் லயமாக அவனைத் தரிசித்தல்
  • தொடுத்தல் = கட்டுதல் / உருவாக்குதல்,
  • தொடை = மாலை
  • நறை = மணம்
  • தீம் = இனிய
  • அகந்தை = செருக்கு
  • தொழும்பர் = அடியார்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *