
பாடல்
பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே
அகத்தியர் – தற்க சாஸ்திரம்
கருத்து – நீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும் சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.
பதவுரை
தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.
விளக்க உரை
- மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்