தேகநாம் என்றென்றூ செப்புவீர் ஈதில்வரும் போகநாம் என்று புலம்புவீர் – நோக வருந்துவீர் தீவினையின் மாறாத இன்பம் பொருந்துவீர் எப்படிநீர் போய்
சிவபோகசாரம்
கருத்து – இன்பதுன்பங்களின்காரணம்முந்தையவினைகள்என்பதைஅறியாமல்மாயைகொண்டுமயங்கிஇருத்தலைகூறிஅதில்இருந்துவிலகாமல்இருப்பதைப்பழித்துக்கூறும் பாடல்.
பதவுரை
தூலமும் சூட்சமும் ஆகிய இந்த உடலை முன்வைத்து தேகம் நாம் எனும் ஆணவம் கொண்டு உரைப்பீர்; இதனால் வரக்கூடியதும் மகிழ்வினைத் தருவதுமான இன்பமும் செல்வமும் என்னுடையது என்று அகங்காரம் கொண்டு புலம்புவீர்; இவ்வாறு முன்னர் செய்ய வினையின் காரணமாக வரும் தீவினையின் காரணமாக இவ்வாறான துன்பம் வாய்க்கப்பெற்றது என்று எண்ணாமல் இதை இன்பம் என்று எண்ணி அதில் பொருந்துவீர்; எப்படி நீர் (மாயை விலக்கி – மறை பொருள்) முக்தி அடையப்போகிறீர்?
சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும் அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று நம்முதலா வோதிலருள் நாடாது நாடும்அருள் சிம்முதலா வோதுநீ சென்று
திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்
கருத்து – பக்குவப்பட்ட உயிர்களுக்கு அருள் பொருந்தும் விதத்தை விளக்கும் பாடல்.
பதவுரை
சிவன் சிவனருள் ஆவி ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறையச் செய்யும் திரோதம், ஆணவமலம் நீங்கி தனது ஆற்றல் கெட்டு நீங்கும் நிலையை அடைதலாகிய மலபரிபாகம் ஆகிய ஐந்தும் ஈஸ்வரனுடைய பஞ்சாக்கரத்தின் பொருள் முறை ஆகும். இப்படி பஞ்சாட்சர வடிவமான இவன் பக்குவப்பட்ட ஆன்மாவிடத்தில் நின்று, நகாரம் முதலாக உச்சரிக்கில் அருள் பொருந்தாது என்று சிகாரம் முதலாக நீ பொருந்தி உச்சரிப்பாயானால் அருள் பொருந்தும் என்று அருளுவான்.
கருத்து – ஈசனின் எண்குணங்களின் பெருமைகளில் சிலவற்றை உரைத்தும், பிரம்மனுக்கும், திருமாலுக்கும் அருளிய திறம் குறித்தும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பிரமர்கள் இறந்த பிறகு அவர்களின் தலைகளை மாலையாக அணிந்து பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினை உடையவனாகவும், சிருஷ்டி எனும் உலகின் தோற்றம் நிலைபெறுதல் சங்காரம் என்றும் சம்ஹாரம் என்றும் வழங்கப்பெறும் இறுதி ஆகியவற்றை செய்பவனாகவும், கண்டத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவனாகவும், கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடும் படியான காட்சியினை வழங்குபவனாகவும், இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்கு அதன் தன்மை கொண்டு அதன் இயல்பாக உள்ளவனாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் எனும் ஐம்பெரும் பூதங்களாக ஆகி அண்டங்களுக்கு புறமும் உள்ளும் இருக்கும் பெருமை உடைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.
விளக்கஉரை
முதல் நடு முடிவு – உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை செய்பவர்களை அவர்கள் விரும்பிய வகையில் அருளுதல்
வெண் மருப்பு – திருமால் வராக அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட செருக்கினை நீங்குதல் பொருட்டு செருக்கினை அழித்து, அதன் அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டார்.(வரலாறு )
கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.
பதவுரை
உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும் சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.
விளக்கஉரை
திருஅஞ்சைக்களம் – சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல் ஏறித் திரும்பலா மே
சிவபோகசாரம் – ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதின குரு முதல்வர்
கருத்து – பாசத்தில்அழுந்திநிற்றல்இயல்பாகவேமுக்திஅளிக்காதுஎன்பதைஉணர்ந்துஅமுததாரைவரையோகம்தொடர்வதைவிளக்கும்பாடல்.
பதவுரை
ஒவ்வொரு தினமும் பாசத்தில் அழுந்தி நிற்காதே; இது முக்தி அளிக்கத் தக்கது அல்ல என்று அதன் துயரை உணர்ந்து எழுந்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் தலையில் மேற்பகுதியில் இருந்து வருவதும், இன்பத்தை தருவதுமான அமுததாரையினை விரும்பும் காலங்களில் பருக அவ்விடத்துக்கு சென்று திரும்பி வரலாம்.
விளக்கஉரை
யோக மரபில் கண்டத்திற்கு மேல் பகுதிக்கு மேலே செல்லுதல்; கண்டம் வரை என்பது இயல்பாகவே பாசத்தில் அழித்திவிடும் என்று கூறுதல் மரபு
பாகை – தலைப்பாகை, ஊர், பாக்கம், பகுதி, வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி, ஒரு காலஅளவு, யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
கருத்து – எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் அனைத்தும் தன்னால் நடக்கின்றன என்று மயங்கி இருக்கும் மனிதர்கள் குறித்து பேசும் பாடல்.
பதவுரை
விரும்பிய எல்லாவற்றையும் அருளும் கற்பகமரமொத்த அருணகிரி ஈசனும் உறைந்து உலகுக்கு தாயான உண்ணாமுலை அம்மையே! ஊர்காவல் தெய்வங்களாக விளங்கும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யாமல் மழை பெய்யவில்லை என்று கூறுவார்; ஊழ் பற்றி தொடர்ந்து வரும் கொடு நோய் பற்றி அறிந்தும் அதுபற்றி உரையாமல் மனிதன் இறந்துவிட்ட செய்தியினை உரைப்பார்; தனக்கு உண்டான தொழிலினை சரியான முயற்சியுடன் செய்யாமல் தன்னுடைய குடி வீழ்ந்தது என்று உரைப்பார்; செயல்கள் அனைத்தும் இறைவிருப்பத்தும் நடத்தப்படுகின்றன என்பதை உணராமல் தான் முன்னர் உரைத்தப்படி தப்பாமல் நடந்து சபதம் முடித்துவிட்டதாக உரைப்பார்; எதிரில் ஒருவன் வந்து பேசிச்சென்றப்பின் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெற்றதான மிகப்பெரிதான கனக யோகம் வந்து சென்றது என்று உரைப்பர்; கற்றுத்தரும் ஆசிரியர் திறமை இன்மையால் தன்னுடைய மக்களுக்கு உயர்கல்வி வாய்க்கவில்லை என்று உரைப்பார்; உரைக்கப்பட்ட இவை எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் இந்த புவியினில் மயங்கி இருப்பார்கள்.
விளக்கஉரை
மேவு – மேன்மை
மேலே குறிப்பிட்ட எல்லாம் உலக வழக்கம் எனும் தலைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே
காகபுசுண்டர் உபநிடதம்
கருத்து – சுழுமுனை பற்றிக் கூறி அதைக் காணும் முறையைக் கூறும் பாடல்.
பதவுரை
நனவு நிலை எனப்படுவதும், ஆன்மாவின் விழிப்பு நிலை ஆனதும், அவத்தை ஐந்தில் ஒன்றான முதல் நிலை ஆனதும், ஆன்மா புருவ நடுவில் நிற்கும் அனுபவமானதும், கலாதி சேர்ந்த சகலம் எனப்படுவதும் ஆன சாக்கிர நிலையின் அடையாளமாக இருந்து மூன்று கோணங்களை உடைய ஒன்று சேர்வதாகிய குண்டலினியே சிவ சொருபமானதும், நீண்ட துவாரம் உடையதாகவும், குறுகிய வட்டம் உடையதாகவும், சூரிய சந்திரன் சேர்ந்து உதயமாகும் பிரகாசம் உடைய ஆகாசம் போலவும் மூன்று சுழி உடையதாக பின்னல் கொண்டதாகவும் இருக்கும் சுழுமுனை என்ற நாமம் உடைய இதனை காற்றினை கும்பகத்தில் நிறுத்தி பிடரி என்படும் அண்ணாக்கு வழியாக ஞானக் கண்ணால் காண்பாயாக.
விளக்கஉரை
கால் – மூச்சு
சித்தர் பாடல் என்பதாலும், யோக முறையில் உணரப்பட வேண்டியவை என்பதாலும், மானிடப்பிறப்பு சார்ந்ததாலும் பதவுரையில் பிழை இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
கருத்து – திருப்புன்கூர், திருநீடுர் தலங்களில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர் மீது பற்று கொள்ளாமல் இருந்து விட்டதை குறித்து வருந்தும் பாடல்.
பதவுரை
திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்து அருளியவனாகவும்; ஆய்ந்து அறிதலை உடைய அறுபத்தி நான்கு கலைகளையும் குறிப்பிடுவதாகிய கலைஞானத்தை முயன்று கற்க வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவனாகவும், கொடிய நரகங்களை அடையாதவாறு காப்பவனாகவும், எந்த விதமான பற்றுக்கள் இல்லாமலும் பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல தெய்வ வடிவமாகி தானே காட்சி வழங்கி ஆங்காங்கே அருளுபவனாகவும், எவ்விதமான செயல்களும் அற்று சிலை போல் இருந்து மூன்றுவிதமான அரண்களையும் அழித்தவனாகவும், ஈமத்தீயில் ஆடுபவனாகி கூத்து நிகழ்த்துபவனாகவும் இருக்கிறான்; இவ்வாறான பெருமைகளை உடைய அவனை அறிவில்லாதவனாகிய யான் நினையாதவாறு இருந்துவிட்டேன்.
விளக்கஉரை
கலைஞானம் – நூலறிவு, அறுபத்துநான்கு கலை
தீயாடி – ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
நீசன் – அறிவில்லாதவன்
‘தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி‘ எனும் பொருள் விளக்கமும் காணப்படுகிறது. ‘கோலமே மேலை வானவர் கோவே‘ எனும் திருமாளிகைத் தேவர் அடிகளை முன்வைத்து அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவன் என பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருவண்ணாமலைப் பதிகம் – திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்
கருத்து – அண்ணாமலைத் தலத்து ஈசனை புகந்து கருணைக் கொண்டு தாயென அருள வேண்டும் என விளிம்பும் பாடல்.
பதவுரை
தனது செஞ்சடையில் சந்திரனை சூடியும், கையில் ஒளி வீசக்கூடியதான கங்கணமும் அணிந்து, அழகு பொருந்தியதும் ஒலிக்கக்கூடியதுமான சிலம்பும் அணிந்து சோதி வடிவமாக திருஅண்ணாமலை திருத்தலத்தில் வீற்றிருப்பவனே! உனது அன்பர்கள் சங்கரா என நின்னை நினைந்து ஏத்தி புகழ் சொற்களை தாயேனக் கருதி உன்னுடைய கருணையினை அருள்வாய்.
கருத்து – விலை மதிக்க இயலா புறப்பொருள்கள் கிடைத்தாலும் உன்னுடைய அருள் கிடைக்கப் பெறுமோ என்று நினைந்து உருகும் பாடல்.
பதவுரை
சொன்னம் எனப்படும் தங்கத்தினை தரக்கூடிய குருவே, சோணாசலம் என்ற திருவண்ணாமலையில் வாழும் ஈசனே! இன்னமும் பிறப்பு என்று ஒன்று இருக்குமாயின் இவ்வாறே உன்னுடைய சன்னதியை நாடி இருக்குமாறு கிடைத்திடுமோ? நன்நெஞ்சே உன்னுடைய திருநாமத்தினை கூறும் படியான வாழ்வு மட்டுமாவது கிடைக்கப் பெறுமோ?
கருத்து – கங்காளம் காதலித்தது, தவக்கோலம் அல்ல என்றும் அயன், மால் என்பவரும் நிலையாமையுடையரே என்பது உணர்த்துதம் பொருட்டு ஈசன் திருமேனி எலும்பு மாலை கொண்டு விளக்கம் அளிக்கும் பாடல்.
பதவுரை
ஏ! தோழியே! நரம்போடு கூடிய எலும்புக் கூட்டினை அணிந்தும், எலும்புகளை விரும்பி தோளில் சுமந்தான், இது என்ன தவ வடிவம் என்று புதியவள் வினவினாள்; எலும்புக்கூடு வந்த விதத்தைக் கேட்பாயாக கால, கால வேற்றுமையால் ஒவ்வொரு ஊழிக்கால முடிவிலும் திருமால்,பிரமன் ஆகிய இருவரது வாழ்நாளை முடிவு செய்து அவர்கள் எலும்பைத் தரித்தனன் என்பதை அறிக.
விளக்கஉரை
சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை
கங்காளம் – எலும்புக்கூடு
செத்தார்தம் எலும்பு அணிந்து சேஏறித்திரிவீர் எனும் திருமுறை பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத்தக்கது
1
மனுஷ வருஷம்
1 தெய்வீக நாள்
360
தெய்வீக நாள்
1 தெய்வீக ஆண்டு
12000
தெய்வீக ஆண்டுகள்
1 சதுர் யுகம்
கிருத யுகம்
4800
தெய்வீக ஆண்டுகள்
17,28,000
மனித ஆண்டுகள்
திரேதா யுகம்
3600
தெய்வீக ஆண்டுகள்
12,96,000
மனித ஆண்டுகள்
துவாபர யுகம்
2400
தெய்வீக ஆண்டுகள்
8,64,000
மனித ஆண்டுகள்
கலி யுகம்
1200
தெய்வீக ஆண்டுகள்
4,32,000
மனித ஆண்டுகள்
சதுர் யுகம்
12000
தெய்வீக ஆண்டுகள்
43,20,000
மனித ஆண்டுகள்
71
சதுர் யுகம்
1 மநுவந்தரம்
8,52,000
தெய்வீக ஆண்டுகள்
1000
சதுர் யுகம்
1 கல்பம்
432,00,00,000
மனித ஆண்டுகள்
2
கல்பம்
1 பிரம்ம நாள்
864,00,00,000
மனித ஆண்டுகள்
360
பிரம்ம நாள்
1 பிரம்ம ஆண்டு
3,11,040,00,00,000
மனித ஆண்டுகள்
2,00,00,000 பிரம்மாவின் ஆயுள் – விஷ்ணுவின் ஒரு நாள்
1,00,00,000 விஷ்ணுவின் ஆயுள் – சிவன் புன்னகைக்கும் நேரம் *
எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ – வவ்விப் பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா வருகுவதும் தானே வரும்
சிவபோகசாரம்
கருத்து – உலகஉயிர்களில்ஈசன்நிறைந்துஇருப்பதால், ஈசன்நம்மைக்காப்பான்என்றஉறுதியானஎண்ணம்கொள்ளசெய்யவேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
உடல் பற்றியும் அதில் வரும் துன்பங்கள் பற்றியும் துயர் கொண்டு வாடும் நெஞ்சமே! எல்லா உயிர்களிடத்திலும் அவைகளின் வினைகளை நீக்கி அவைகளை காக்க ஈசன் இருக்கிறான் அல்லவா; அவ்வாறான உயிர் கூட்டத்தில் நாமும் ஒருவன் அல்லவா; ஈசன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதால் பிற உயிர்களை வெறுத்தல் முதலியன செய்தல் ஆகாது; எனவே வருகின்ற இன்ப துன்பங்கள் தானே வரும் என்று கொண்டு அவ்வாறு வாடுதலை விலக்க வேண்டும்.
வருகுவதும் தானே வரும், எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ என்ற வாக்கியங்களை இணைத்து வினைபற்றி வரும் துயர்கள் வரும் என்பதும் அவைகள் வராமல் காக்க ஈசன் இருக்கிறான் என்பதும் பொருள் பெறப்படும்
கருத்து – உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல எவரால் இயலும் என்பதை பாடல்.
பதவுரை
நன்மை, பெருமை ஆகியவற்றைத் தரக்கூடிய இந்த உலகத்தில், மாந்தர்கள் எனப்படும் மக்கள் செய்யக்கூடிய கொடுமையான நெறி தவறும் குற்றம் ஆகிய தவறுகளை ஏற்றுக்கொண்டு உந்தன் வாள் கூர்மையான ஒளிபொருந்திய வாளால் அறுத்து ரட்சிக்கும் உலகத்திற்கு அன்னை நீ, அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நடத்திவரும் உண்ணாமுலை எனும் பெயர் கொண்டவளே, உதவி எவரும் இல்லோரை ரட்சிக்கக் கூடியவள் நீ அல்லவா! எவர் உன்னுடைய சீடராகி உன்னைப் போற்றி புகழ்ந்து உன் பெருமைகளை சொல்ல இயலும் (அஃது போலவே என்னைக் காப்பதன் பொருட்டு) என்னருகே வரவேண்டும்.
விளக்கஉரை
சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், ஓசை
ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று உமையவளுங் கணபதியு முந்தி யாகி விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும் விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா! பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு; கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே
அகஸ்தியர் ஞானம்
கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.
பதவுரை
அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது; வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.
பொன்னை நாடி நாடி நொந்து புலர்ந்த துன்பம் போதும் போதும் உன்னை நம்பிச் சித்தி எட்டும் உற்று வக்கும் உவகை ஈவாய்! முன்னை வேத முடிவில் ஆடி மூவர் போற்றும் முதல்வன் ஆனாய்! தென்னை போலும் வாழை நீடும் திருத்து றையூர்ச் சிவபி ரானே!
திருத்துறையூர் சிவபெருமான் பதிகம் – திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
கருத்து – பொன்னாசை விடுத்து உன்னை அடைந்ததால் அட்டமாசித்தி அருள திருத்துறையூர் சிவனிடத்தில் வேண்டும் பாடல்.
பதவுரை
நீர் குறைவான போதும் வளரும் தென்னை மரங்களும், நீர் அதிகமான இடத்திலே வளரும் வாழை மரங்களும் இருக்கப்பெற்றதான திருத்துறையில் உறைகின்ற சிவனே, வேதத்தின் முடிவுகள் உன்னைப் போற்றும்படி ஆடி ப்ரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மூவரும் போற்றும்படியாக அவர்களுக்கு முதல்வன் ஆனவனே! உலகியல் வாழ்வு சார்ந்து பொன்னைத் தேடித் தேடி அதன் காரணமாக துயரம் அடையப்பெற்று அதன் காரணமாக தளர்ந்து அடையப்பெற்ற துன்பம் போதும்; உன்னை நம்பி இருப்பதன் காரணமாக சித்தத்தன்மையினை கொடுக்கக்கூடிய அணிமா, மகிமா, இலகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்துக்களையும், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய மனதால் எய்தும் சித்துக்களையும் மகிழ்வுடன் களிப்பு கொள்ளுமாறு அருள்வாய்.
விளக்கஉரை
நடுநாட்டுத் தலம்
உவகை – உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு
அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச் சாதி இல்லை! கருணை கூர்ந்த நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு ஒருகாலும் நரகம் இல்லை! கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார் மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப் பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு இல்லை பேச்சுத் தானே
தண்டலையார் சதகம் – படிக்காசுப் புலவர்
கருத்து – பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை எனும் பழமொழியினை உறுதி செய்ய திருத்தண்டலை இறைவனை முன்வைத்து எழுதப்பட்டப் பாடல்.
பதவுரை
மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு மெய்ஞானக் கல்வி கற்றவர்க்கு கோபம் என்பது இல்லை; உலகியல் விஷயங்களைக் கடந்தவர்க்கு சாதி வேறுபாடுகள் இல்லை; வீடு பெறுதற்கு தவம் செய்பவர்கள் ஆகிய துறந்தவர்களுக்கு விருப்பம் என்பது இல்லை(வெறுப்பும் இல்லை என்பது மறை பொருள்); நன்மை செய்வதையே திடமாக் கொண்டு வாழும் நல்லவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் தரதக்கதான நரகம் என்பது இல்லை; நெறி முறைகளோடு கூடி சிறந்த முறையில் ஆட்சி செய்யும் கொற்றவன் எனும் அரசனுக்கு அடிமை என்பது இல்லை; யாசித்து உண்பவனுக்கு பேச்சு என்பதே இல்லை; மலர் போன்ற பாதங்களை உடைய தண்டலையார் பதம் பணிபவர்களுக்கு பிறப்பு என்பது இல்லை.
விளக்கஉரை
தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீள்நெறி‘ என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்
சிறப்புடைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு நூறு பாடல்களுள் வைத்துப் பாடியுள்ளதனால் இதற்கு பழமொழி விளக்கம் எனும் பெயரும் உண்டு. (பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்)
தில்லையில் பொருள் இல்லாமல் தங்கி இருந்தபோது தில்லை சிவகாமி அம்மையைப் பாடிய போது, அம்மையின் அருளால் ஐந்து பொற்காசுகள் வீழ்ந்தன; காசுகள் விழும்போது ‘புலவருக்கு அம்மையின் பொற்கொடை’ என்ற ஒலி எழுந்தது அன்றுமுதல் – படிக்காசுப் புலவர்
தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றவர்.
கருத்து – ஒருவருக்கு வரும் நற்செயல்கள், அழகு, ஞானம் ஆகியவை பிறவி வாசனயினல் வரும் என்றும் அவை குறித்து மற்றவர்கள் பெற கருதக்கூடாது என்பதை உவமையுடம் கூறும் பாடல்.
பதவுரை
அலங்காரமாக மலர்களுடன் கொன்றை மாலையை சூடிடும் அண்ணலே, அழகும் வனப்பும் கொண்டவனே, உள்ளத்தில் அனுதினமும் இன்பத்தைத் தரும் சதுரகிரியில் வீற்றிருக்கும் அறப்பளீசுர தேவனே! முன் செய்த வினைகளின் காரணமாக துயர் வரும்போது இருக்கும் கலங்காத சித்தமும், செல்வமும், ஞானமும், கல்வியும், கருணை கொண்ட வடிவமும், அளவற்ற இன்பமும், தியாகமும், அழகிய வடிவமுடைய மணத்தலும், ஒளிவீசி புகழ் தரும்படியான வீரமும், பொறுமையும், தந்திரமும், சிறப்புகளும், சிறப்புகள் உடைய பேச்சும், மானம் கொண்டு செய்யப்படும் செயல்களும் பிறவி வாசனயினல் இந்த புவிதனில் வரும்; இவ்வாறு நலங்கள் கொண்டிருக்கும் ஒருவரைப் பார்த்து அதைப் பெறக்கருதுவது என்பது ரஸ்தாளி எனும் வாழைப்பழ சுவை தனக்கு வரவேண்டும் என வேம்பு நீண்ட நாட்கள் தவம் செய்தலுக்கு ஒப்பானது; (கிட்டாது என்பது முடிபு)
திருக்கற்குடிமாமலைமாலை – ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை
கருத்து – பொன்னாசையும், பெண்ணாசையும் துறந்து சிற்சபையில் நடனம் காணும் நாள் பற்றி எண்ணும் பாடல்.
பதவுரை
கற்பக தருவின் கழுத்தில் ஒளி வீசிக் கொண்டிருப்பதைப் போல் கற்குடிமாமலையில் வீற்றிருக்கும் கடவுளே! உட்கொண்டால் மரணம் கொடுக்கக் கூடியதும், இலையும் தண்டும் மேனி மேல் பட்டால் தோலில் அரிப்பு உண்டாக்கக் கூடியதுமான கார்த்திகைபூ எனும் காந்தள் மலரினை தொட்ட குரங்குகள் பயம் கொள்வதைப் போல் பொன்னால் ஆக்கப்பட்ட சபையில் மாதர்கள் நடனம் புரிவதைக் காண்பதை ஒழித்து,திருச்சிற்றம்பலம் எனவும், சிற்சபை எனவும், எனவும் அழைக்கபடும் சிற்பரசபை தனில் திருநடனத்தினை தரிசிக்கப் பெறும் நாள் எதுவோ?
விளக்கஉரை
திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை – பிரபந்தத்திரட்டு – பகுதி 25.
கருத்து – காஞ்சியில் வீற்றிருக்கும் ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறும் பாடல்.
பதவுரை
மால் மருகன் என்று அழைக்கப்படுபவனாகிய குமரனின் கண்பார்வையில் இருக்கும்படியான காஞ்சி மாநகரில், சைவப்பிரிவுகளில் ஒன்றானதும், மந்திரமார்க்கக் கிளைநெறி ஆனதும், சிவனின் முதன்மை வடிவமாக கபாலீச பைரவரையும் அவர் தேவி, சண்டகபாலினியையும் போற்றி வணங்குவதுமான யாமளம வீட்டில் அறிய இயலாத சிறப்புடையதும், பெருமை உடையதும், நிலைபெற்று விளங்கக்கூடியதுமான இறைவன் ஆகிய ஆனந்தருத்திரேசரை வணங்குவோர் பேரின்பக் கடலில் திளைப்பார்கள்.
விளக்கஉரை
யாமளம் – கபாலீச வைரவரும் அகோரேசுவரியும் இவர்களது வழிபடு தெய்வங்கள். சில யாமள நூல்கள், அகோரேசுவரியை, சண்டகபாலினி என்று அழைக்கின்றன. பிரமயாமள தந்திரம்/ பாசுபத தந்திரம், பிங்களாமத தந்திரம் முதலானவை இவர்களுக்குரியவை.
யாமளர் – தம்மைத் தாமே அறிந்து சிவத்தை உணர்ந்ததன் மூலம், இவர்கள் தாமும் சிவரூபமாக மாறியவர்கள் .குருநாதர்கள் எண்மர் – சுவச்சண்டர், குரோதர், உன்மத்தர், உக்கிரர், கபாலி, சங்கரர், சேகரர், விஜயர் எனும் எட்டு வைரவர்கள், உருத்திரம், ஸ்கந்தம், பிரமம், விஷ்ணு, யமம், வாயு, குபேரம், இந்திரம் ஆகியவை எட்டு யாமள நூல்கள்
மூலப்பாடலின் எழுத்துக்கள் சரியாக அறியப்படாமையாலும், சொற்பிரிப்பு சரியாக இல்லாததாலும் பாடலில் எழுத்துப்பிழை ஏற்பட்டிருக்கலாம். அதுபற்றி விளக்கத்தில் பிழை ஏற்பட்டிருக்கலாம். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.
தம்மேனி வெண்பொடியாற் றண்ணளியா லாரூரர் செம்மேனி கங்கைத் திருநதியே – அம்மேனி மானே யமுனையந்த வாணிநதி யுங்குமரன் தானே குடைவேந் தனித்து
திருவாரூர் நான்மணி மாலை – குமரகுருபரர்
கருத்து – தியாகேசப் பெருமானும் உமாதேவியாரும் முருகப் பெருமானும் சேர்ந்துள்ள காட்சி திருவேணி சங்கமத்தைப் போன்றுள்ளது என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
காடுடைய வெண்பொடியால் வெண்ணிறமுடையதாக தோன்றும் கங்கையினை ஒத்த திருவாரூர் பெருமானையும் அழகிய திருமேனியை உடைய மானைப் போன்றவளும், நீலநிறம் கொண்டவளும் ஆன யமுனையினை ஒத்த உமாதேவியையும் குளிர்ந்த திருவருளால் செம்மேனி கொண்டு செந்நிறமுடையதால் வாணி எனும் சரஸ்வதி ஒத்து இருக்கும் முருகப் பெருமானையும் ஒருங்கே தியானிப்போம்.
விளக்கஉரை
இல்லறத்தின் மேன்மையை விளக்கும் சோமாஸ்கந்தர் வடிவம் பற்றியது