அமுதமொழி – சார்வரி – ஆடி – 1 (2020)


பாடல்

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
     பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
     சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
     திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
     கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே

காகபுசுண்டர் உபநிடதம்

கருத்து – சுழுமுனை பற்றிக் கூறி அதைக் காணும் முறையைக் கூறும்  பாடல்.

பதவுரை

நனவு நிலை எனப்படுவதும், ஆன்மாவின் விழிப்பு நிலை ஆனதும்,  அவத்தை ஐந்தில் ஒன்றான முதல் நிலை ஆனதும்,  ஆன்மா புருவ நடுவில் நிற்கும் அனுபவமானதும், கலாதி சேர்ந்த சகலம் எனப்படுவதும் ஆன சாக்கிர நிலையின் அடையாளமாக இருந்து மூன்று கோணங்களை உடைய ஒன்று சேர்வதாகிய குண்டலினியே சிவ சொருபமானதும், நீண்ட துவாரம் உடையதாகவும், குறுகிய வட்டம் உடையதாகவும், சூரிய சந்திரன் சேர்ந்து உதயமாகும் பிரகாசம் உடைய ஆகாசம் போலவும் மூன்று சுழி உடையதாக பின்னல் கொண்டதாகவும் இருக்கும் சுழுமுனை என்ற நாமம் உடைய  இதனை காற்றினை கும்பகத்தில் நிறுத்தி பிடரி என்படும் அண்ணாக்கு வழியாக ஞானக் கண்ணால் காண்பாயாக.

விளக்க உரை

  • கால் – மூச்சு

சித்தர் பாடல் என்பதாலும், யோக முறையில் உணரப்பட வேண்டியவை என்பதாலும், மானிடப்பிறப்பு சார்ந்ததாலும் பதவுரையில் பிழை இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *