
பாடல்
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – ஈசனின் எண்குணங்களின் பெருமைகளில் சிலவற்றை உரைத்தும், பிரம்மனுக்கும், திருமாலுக்கும் அருளிய திறம் குறித்தும் உரைக்கும் பாடல்.
பதவுரை
பிரமர்கள் இறந்த பிறகு அவர்களின் தலைகளை மாலையாக அணிந்து பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினை உடையவனாகவும், சிருஷ்டி எனும் உலகின் தோற்றம் நிலைபெறுதல் சங்காரம் என்றும் சம்ஹாரம் என்றும் வழங்கப்பெறும் இறுதி ஆகியவற்றை செய்பவனாகவும், கண்டத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவனாகவும், கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடும் படியான காட்சியினை வழங்குபவனாகவும், இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்கு அதன் தன்மை கொண்டு அதன் இயல்பாக உள்ளவனாகவும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம் எனும் ஐம்பெரும் பூதங்களாக ஆகி அண்டங்களுக்கு புறமும் உள்ளும் இருக்கும் பெருமை உடைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.
விளக்க உரை
- முதல் நடு முடிவு – உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை செய்பவர்களை அவர்கள் விரும்பிய வகையில் அருளுதல்
- வெண் மருப்பு – திருமால் வராக அவதாரம் எடுத்தபோது ஏற்பட்ட செருக்கினை நீங்குதல் பொருட்டு செருக்கினை அழித்து, அதன் அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டார்.(வரலாறு )
- காறை – கம்பியாக அமைத்து அணியும் அணிகலம்
- கதம் – கோபம்
- பிண்டம் – உடம்பு
- இயற்கை – உடலுக்கு முதல்களாய் உள்ள தத்துவங்களை
- பெற்றி – சார்பாய் நிற்றல்
- அப்பாலாய் இப்பாலாதல் – உள்ளும் புறம்புமாய் நிறைந்து நிற்றல்