
பாடல்
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயாடியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடு ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே
ஆறாம் திருமுறை – தேவாரம்- திருநாவுக்கரசர்
கருத்து – திருப்புன்கூர், திருநீடுர் தலங்களில் உறையும் சிவனின் பெருமைகளை உரைத்து அவர் மீது பற்று கொள்ளாமல் இருந்து விட்டதை குறித்து வருந்தும் பாடல்.
பதவுரை
திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்து அருளியவனாகவும்; ஆய்ந்து அறிதலை உடைய அறுபத்தி நான்கு கலைகளையும் குறிப்பிடுவதாகிய கலைஞானத்தை முயன்று கற்க வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவனாகவும், கொடிய நரகங்களை அடையாதவாறு காப்பவனாகவும், எந்த விதமான பற்றுக்கள் இல்லாமலும் பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல தெய்வ வடிவமாகி தானே காட்சி வழங்கி ஆங்காங்கே அருளுபவனாகவும், எவ்விதமான செயல்களும் அற்று சிலை போல் இருந்து மூன்றுவிதமான அரண்களையும் அழித்தவனாகவும், ஈமத்தீயில் ஆடுபவனாகி கூத்து நிகழ்த்துபவனாகவும் இருக்கிறான்; இவ்வாறான பெருமைகளை உடைய அவனை அறிவில்லாதவனாகிய யான் நினையாதவாறு இருந்துவிட்டேன்.
விளக்க உரை
- கலைஞானம் – நூலறிவு, அறுபத்துநான்கு கலை
- தீயாடி – ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான்
- நீசன் – அறிவில்லாதவன்
- ‘தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி‘ எனும் பொருள் விளக்கமும் காணப்படுகிறது. ‘கோலமே மேலை வானவர் கோவே‘ எனும் திருமாளிகைத் தேவர் அடிகளை முன்வைத்து அடியவர்களுக்காக அவர்கள் விரும்பும் தெய்வமாக உருவ வடிவம் கொள்பவன் என பொருள் உரைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.