
பாடல்
இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.
பதவுரை
உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும் சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.
விளக்க உரை
- திருஅஞ்சைக்களம் – சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
- இரவம் – ஒலி
- பரவுதல் – வாழ்த்துதல்