
பாடல்
அழுந்தாதே பாசத் தனுதினமும் ஐயோ
விழுந்தால் எழுந்திருக்க வேண்டும் – செழும்பாகை
மீறித் தருமிரத வீட்டின்ப மாமலைமேல்
ஏறித் திரும்பலா மே
சிவபோகசாரம் – ஸ்ரீ ல ஸ்ரீ தருமை ஆதின குரு முதல்வர்
கருத்து – பாசத்தில் அழுந்தி நிற்றல் இயல்பாகவே முக்தி அளிக்காது என்பதை உணர்ந்து அமுததாரை வரை யோகம் தொடர்வதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஒவ்வொரு தினமும் பாசத்தில் அழுந்தி நிற்காதே; இது முக்தி அளிக்கத் தக்கது அல்ல என்று அதன் துயரை உணர்ந்து எழுந்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்தால் தலையில் மேற்பகுதியில் இருந்து வருவதும், இன்பத்தை தருவதுமான அமுததாரையினை விரும்பும் காலங்களில் பருக அவ்விடத்துக்கு சென்று திரும்பி வரலாம்.
விளக்க உரை
- யோக மரபில் கண்டத்திற்கு மேல் பகுதிக்கு மேலே செல்லுதல்; கண்டம் வரை என்பது இயல்பாகவே பாசத்தில் அழித்திவிடும் என்று கூறுதல் மரபு
- பாகை – தலைப்பாகை, ஊர், பாக்கம், பகுதி, வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி, ஒரு காலஅளவு, யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
- இரதம் – தேர், புணர்ச்சி, பல், சாறு, அன்ன ரசம், சுவை, இனிமை, அரைஞாண், மாமரம்